July 14, 2026
  • July 14, 2026
Breaking News
June 5, 2026

பரிமளா அண்ட் கோ திரைப்பட விமர்சனம்

By 0 106 Views

தலைப்பையும் புகைப்படங்களையும் பார்த்தால் இது ஒரு குடும்பத்துக்கு சொந்தமான கடையைப் பற்றிய படம் போல இருக்கும். ஆனால் அதெல்லாம் இல்லை – குடும்பத்தைப் பற்றிய படம்தான்.

அப்படியானால் படத்துக்குள் ஜெயராம் ஊர்வசி ஜோடியாக இருப்பதால் ஊர்வசியைப் பற்றிய படமா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஏனென்றால் படத்தில் பரிமளா என்பது ஊர்வசி இல்லை. ஜெயராமுக்குத்தான் அந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்த இந்த தம்பதி, யோகிபாபுவின் வீட்டில் ஒரு குடித்தனத்தில் வாடகைக்கு இருக்கிறார்கள்.

சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் இருவரும் அவர்களது மகள்களாக இருக்க, அவர்களால்தான் படத்தில் பிரச்சினை உருவாகிறது.

இருவரில் இளைய மகள் அனந்திகாவை அந்த ஏரியாவில் ரவுடியாக இருக்கும் சாண்டி காதலிக்க, அதை மூத்த மகள் தட்டிக் கேட்க, ஒரு கட்டத்தில் சாண்டி யின் தொல்லை பொறுக்கமாட்டாத பரிமளா அண்ட் கோ குடும்பம் அவரைக் கொலை செய்யலாமா என்று விவாதிக்கிறது.

அதன் தொடர்ச்சியாக சாண்டி கொல்லப்படுகிறார். யார் கொன்றது என்பது சஸ்பென்சாக இருக்க, குடும்பத்தின் நால்வருமே இவர்களாக இருக்குமோ என்று ஒருவரை ஒருவர் சந்தேகப்படுகிறார்கள்.

அடுத்து இந்த கொலை கேஸ் இன்ஸ்பெக்டர் மிஷ்கின் கையில் சிக்க, அவர் ஒரு பக்கம் விசாரணையை தொடங்குகிறார். அது பரிமளா குடும்பத்தில் வந்து நிற்க அதன் பின் என்ன ஆகிறது என்பதுதான் மீதிக் கதை.

ஜெயராம், ஊர்வசி இருவருமே நடிப்பில் ராட்சசன் – ராட்சசியாக இருக்க, நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகிறார்கள். இருவருக்கும் நகைச்சுவை என்பதும் எளிதாகவே கைவரப் பெற்றிருக்க, தங்கள் பாத்திரங்களை எளிதாக நடித்துக் கடக்கிறார்கள்.

அக்கா, தங்கையாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் வீட்டில் அடிக்கும் லூட்டியிலும் சரி, வெளியில் நடந்து கொள்ளும் போக்கிலும் சரி… நம் குடும்பத்துப் பெண்களை நினைக்க வைக்கிறார்கள்.

இயல்பாக சென்று கொண்டிருக்கும் கதை இன்ஸ்பெக்டர் மிஷ்கின் உள்ளே வந்ததும் சூடு பிடிக்கிறது. அவரது தனித்துவப்படியே விசாரணை செல்வது படத்தின் கலகலப்பை கூட்டுகிறது.

இயக்குனர் மிஷின் நடிகனாகி கலக்கிக் கொண்டிருப்பது போலவே இன்னொரு பக்கம் டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் வில்லனாகி மிரள வைத்துக் கொண்டிருக்கிறார். 

தமிழ் சினிமா போலீசுக்கு இன்னொரு புதிய நடிகர் கிடைத்திருக்கிறார். அவர் தான் தயாரிப்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன். 

யோகி பாபுவின் பெயர் உயிர் உலக் என்பது ஆனாலும் லொள்ளு. ஆனாலும் அவர் வீட்டு ஓனர் என்பதே கடைசி வரை நம்ப முடியவில்லை.

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படு நேர்த்தியாக இருக்கிறது.

ஃபாக்ஸன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும்படி இருக்கிறது.

குடும்பத்து பெண்கள் சந்திக்கும் பிரச்சினைக் கதையாக படத்தை தொடங்கும் இயக்குநர் பாண்டிராஜ், முடிவில் இன்னொரு சமூகப் பிரச்சனையைத் தொட்டிருக்கிறார். 

அதனாலேயே தொடக்கத்தில் இருக்கும் நம் கவனமும், எதிர்பார்ப்பும் வேறு மாதிரியாகத் திரும்ப வேண்டியிருக்கிறது. அதுவே படத்தின் நம்பகத் தன்மையை சோதிக்கிறது.

அதேபோல் யார் யாரெல்லாம் கொலையாளிகள் என்று சந்தேகம் முன்வைக்கப்படுகிறதோ அவர்கள் எல்லாம் கொலையாளிகளாக இருக்க மாட்டார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகத் தெரிகிறது. அந்த சஸ்பென்சை இன்னும் இறுக்கமாக்கி இருக்க முடியும்.

ஆனாலும் ஜனாரஞ்சகமாக நகர்வதால் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக அமைகிறது.

பரிமளா அண்ட் கோ – சிரிக்க… கொறிக்க… கொஞ்சம் சிந்திக்க..!

– வேணுஜி