July 14, 2026
  • July 14, 2026
Breaking News
June 7, 2026

பெத்தி திரைப்பட விமர்சனம்

By 0 141 Views

சமீப காலத்தில் மலைவாழ் மக்களின் பரிதாப வாழ்க்கையைப் பற்றி இந்தியப் படங்கள் அதிகம் பேச ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் எந்த அடையாளமும் இல்லாத ஒரு மலைவாழ் கிராமத்தினரைப் பற்றிய கதை இது. 

அந்த கிராமத்துக்குப் பெயரும் கிடையாது. அங்கு வாழும் மக்கள் இந்தியர்கள்தான் என்பதற்கான எந்தவிதமான அடையாளச் சான்றும் கிடையாது. ஆனாலும் அவர்கள் வாழ்ந்துதானே ஆக வேண்டும்..?

அதற்காக ஆதிக்க ஜாதிகள் வாழும் கிராமத்துப் பக்கம் போய் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார்கள். அதுவும் ஒருவர் கூலியை இருவருக்கு பிரித்து கொடுக்கும் அளவில்தான் அவர்களை முதலாளிகள் நடத்துகிறார்கள். 

அந்த அடையாளம் இல்லா மக்களில் ஒருவர் தான் பெத்தி. ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் அசாத்திய திறமை பெற்றவராக அவர் இருப்பதால், சுற்று பட்டு கிராமங்களில் நடக்குப் போட்டிகளில் அவரை கூலிக்கு எடுத்து விளையாட வைக்கிறார்கள். 

அவருடைய திறமை அந்த ஏரியாவில் மிகவும் பிரசித்தம் என்பதால் விளையாட்டு குழுக்கள் அவரை ஏலத்தில் எடுக்கின்றன. அப்படி இரண்டு குழுக்கள் மாறி மாறி அவரை ஏலத்தில் எடுத்து தங்கள் வெற்றியை உறுதி செய்து வருகின்றன. 

ஒரு கட்டத்தில் அந்த இரண்டு குழுக்களும் இனத்தை வைத்து அவரை அவமானப்படுத்தும் போது தங்களுக்கு ஒரு அடையாளம் வேண்டும் என்று நினைக்கிறார். 

அவரது அசாத்திய திறமையைப் பார்த்த மல்யுத்த பயிற்சியாளர் ஒருவர் பெத்தியை மல்யுத்தம் கற்க வைக்கிறார். அங்கும் அவர் அவமானப்படுத்தப்பட்டாலும் தன்னுடைய கிராமத்துக்கு தன் விளையாட்டு தரும் மூலம் அடையாளம் பெற்றுத் தர வேண்டும் என்று போராடுகிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் உடல் தகுதியை இழந்து விடும் அவர் தன் போராட்டத்தில் வெற்றி பெற முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.

பெத்தியாக ராம்சரண். ‘பார்ன் வித் த சில்வர் ஸ்பூன்…’ என்கிற அளவில் பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருக்கும் அவர் தவிர இன்னொருவர் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக இந்த அளவு உழைத்திருக்க முடியுமா என்பது தெரியவில்லை.

உண்மையில் சொல்லப் போனால் இந்த அளவு திறமையும் உழைப்பும் உள்ள நடிகர்களை இந்திய சினிமாவில் அடையாளம் காண்பது கடினம் என்றே தோன்றுகிறது. 

அந்த அசாத்திய உழைப்பே அவருக்குப் பெருமையும், விருதும் எனலாம்.

கவர்ச்சி நாயகியாக நடித்திருக்கும் கதாநாயகி ஜான்வி கபூர் பேருக்கு உடை என்று ஒன்றை அணிந்து இருக்கிறார். இந்த லட்சணத்தில் அவர் உடையை அவிழ்க்க வில்லன் ஆட்கள் முயல அவர் வெட்கம் வேறு படுகிறாராம்.

மல்யுத்தம் பயிற்றுவிக்கும் ஆசானாக நடித்திருக்கும் சிவராஜ்குமாருக்கு கம்பீரமான உடல் அமைப்பு உயரமோ இல்லாவிட்டாலும் தனது நடிப்பின் மூலமே யாராலும் வெல்ல முடியாத வீரராக நியாயப்படுகிறார்.

எல்லாப் படங்களிலும் வில்லனாக வரும் ஜகபதி பாபு இந்தப் படத்தில்தான் உருப்படியாக சொல்லிக் கொள்ளும் வேடத்தில் வந்திருக்கிறார்.

தன் மலை கிராமத்தின் வழியாக செல்லும் ரயிலை நிறுத்தி தங்களுக்கென்று ஒரு ரயில் நிறுத்தம் கண்டுவிட்டால் தன்னுடைய கிராமத்தை அடையாளப்படுத்தி விட முடியும் முயன்று தோற்கும் போது நமக்கு மனது வலிக்கிறது.

இவர்களுடன் திவ்யேந்து சர்மா, பொமன் இராணி ஆகியோரது அனுபவ நடிப்பு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவு அபாரம். கிரிக்கெட் , மல்யுத்தம், ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளின் சிறப்பும் தனித்தன்மையும் தெரிந்து அவற்றிற்கேற்றவாறு படம் பிடித்திருப்பது படத்தின் நேர்த்தியை பெருமளவு கூட்டி இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வசப்படுத்துகின்றன. பின்னணி இசை சில இடங்களில் கிளாஸ் ஆகவும், சில இடங்களில் மாஸ் ஆகவும் இருக்கிறது 

உயிரைக் கொடுத்து இந்தப் படத்துக்காக உழைத்திருக்கிறார் இயக்குநர் புச்சி பாபு சனா. ஒரு பக்கம் விளையாட்டு துறையையும் இன்னொரு பக்கம் மலைவாழ் மக்களின் பிரச்சனையையும் எடுத்துக்கொண்டு இரண்டையும் அற்புதமாக பேலன்ஸ் செய்து ரசிக்க வைத்திருக்கிறார்.

வழக்கமாக இது போன்ற விளையாட்டை  பிரதானப்படுத்தும் கதைகளில் ஒரு விளையாட்டை மட்டுமே முதன்மையாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இதில் எந்த விளையாட்டாக இருந்தாலும் அதன் தன்மையை புரிந்து கொண்டால் எவராலும் எதிலும் பரிமளிக்க முடியும் என்று சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது.

படத்தின் நீளம் மட்டுமே குறையாக இருக்கிறது.

‘பெத்தி’ – பெஸ்ட் ட்ரீட்..!

– வேணுஜி