November 12, 2025
  • November 12, 2025
Breaking News
November 7, 2025

அதர்ஸ் திரைப்பட விமர்சனம் 3.5/5

By 0 55 Views

ஒரு வேன் விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் எரிந்து சாகிறார்கள். விசாரணை செய்யத் தொடங்குகிறார் உதவி காவல் ஆணையர் வேடம் ஏற்றிருக்கும் நாயகன் ஆதித்யா மாதவன்.

பிரேதப் பரிசோதனையில் மூன்று பெண்களும் மாற்றுப் பார்வைத் திறன் கொண்டவர்கள் என்பதுடன் அவர்களைக் காணவில்லை என்று யாரும் புகார் செய்யவில்லை என்றும்  தெரிவதால்,  அவர்கள் கடத்தப்பட்டனரா என்ற கேள்வி எழுகிறது.

எனவே ஆதரவற்றோர் விடுதிகளில் கணக்கெடுத்து விசாரித்ததில் ஒரு விடுதிப் பதிவேட்டில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்க, விசாரிக்கப்போனால் விடுதியின் மதர் சுப்பீரியர் தற்கொலை செய்து கொள்ள, மேலும் வழக்கு சிக்கலுக்குள்ளாகிறது.

இன்னொரு பக்கம் நாயகி கௌரி கிஷன் மருத்துவராகப் பணியாற்றும் மருத்துவமனையில் செயற்கைக் கருவூட்டலில் அசம்பாவிதங்கள் ஏற்பட, இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இருக்கும் தொடர்புதான் பரபரப்பான திரைக் கதையாக விரிகிறது.

அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன் முதல் படத்துக்குண்டான எந்தப் பதற்றமும் இல்லாமல் இயல்பாக நடித்திருப்பதுடன் பாத்திரத்தில் சரியாகப் பொருந்துகிறார்.

அவரது காதலியாக வரும் கௌரி கிஷன் வருத்தப்படுவதைப் போலவே இருவருக்கும் படத்துக்குள் காதலிக்க நேரமில்லை.

ஆதித்யாவின் விசாரணைகளுக்குத் துணையாகும் ஆய்வாளராக வரும் அஞ்சு குரியனுக்கு நாயகி கௌரி கிஷனைவிட படத்தில் நிறைய நேரமும், வேலைகளும் இருக்கின்றன.

இதுவரை நாம் காமெடியனாகவே பார்த்து வந்திருக்கும் நண்டு ஜெகனுக்கு இதில் இதுவரை ஏற்காத வித்தியாசமான வேடம். இவ்வளவு முரட்டுத்தனமாகவும் இவரால் நடிக்க முடிகிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறது. 

வழக்கமான காமெடி போலீசாக வந்து சிரிக்க வைக்க முயல்கிறார் முனீஷ்காந்த் ராமதாஸ்.

அரவிந்த் சிங்கின் கேமரா படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறது. 

ஜிப்ரான் வைபோதாவின் இசையும் படத்தின் பரபரப்பை பல மடங்கு கூட்டி இருக்கிறது.

எப்படியோ ஆரம்பித்த கதை இப்படி வந்து முடியும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது. அதிலும் இதற்கெல்லாம் சூத்திரதாரி யார் என்பதை நமக்கு தெரிவித்துவிட்டு அதை நாயகனுக்கு தெரிவிக்காமல் இருக்கும் இயக்குனர் அபின் ஹரிஹரனின் கதை நகர்த்தல் நம் நாடித் துடிப்பை அதிகரிக்கிறது. 

இப்படிப்பட்ட குற்றம் நடப்பதற்கான பின்னணியும் இதுவரை இல்லாத வகையில் புதிதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படி எல்லாம் நிஜத்தில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றுதான் நாம் நினைக்க வேண்டி இருக்கிறது. 

அதர்ஸ் – ஜாக்கிரதை மதர்ஸ்..!

– வேணுஜி