குறும்படத் தலைப்பே ‘ஒரு மயிரும் இல்ல’தான். ஆனால், டென்ஷனாக வேண்டாம். படமே தலை மயிர் பிரச்சினை பற்றிதான்.
இப்படத்தை விக்னேஷ் ஷா எழுதி இயக்கித் தயாரித்துள்ளார். மணிகண்டன் வைத்தியநாதன் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். ஒளிப்பதி வு பிரகாஷ், இசை தரன், எடிட்டிங் ஸ்ரீநிக் விஸ்வநாதன் என்று நண்பர்கள்… நலம் விரும்பிகளே தொழில்நுட்பத் துணைகளாகி உழைத்துள்ளனர்.
நாம் சாதாரணமாக உதிர்ந்து விழுவதுதானே என்று நினைக்கிற தலைமுடி கொட்டி தலை வழுக்கை நிலையை அடையும் ஒருவனின் வலியை, உளவியல் சிக்கலை, அவன் எதிர்கொள்ளும் போராட்டத்தினை சொல்லியிருக்கிறாராம் விக்னேஷ் ஷா .
Mohanraja Vignesh Shah
அந்தக் கதை நாயகன் தன் முடி வளர பலவகை மருந்துகள், மூலிகைகள், ஷாம்பூக்கள் எல்லாம் போட்டு பலனின்றி “மயிரோடு வந்தால்தான் உயிரோடு வருவேன் “என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான். யாரோ சொன்னதை நம்பி முடி வளரக் கருங்குரங்கு ரத்தம் உதவும் என்று அதைத்தேடி காட்டுக்குள் செல்கிறான். அங்கே தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்கிறான். முடிவு என்ன என்பதே க்ளைமாக்ஸ்.
ஒரு முழு நீளத் திரைப்படத்துக்கான கதையை எடுத்துக் கொண்டு 10 நிமிடத்துக்குள் குறும்படமாக எடுத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் ஷா .இப்படத்தைப் பார்த்த’ தனி ஒருவன்’ படத்தின் இயக்குநர் மோகன்ராஜா மகிழ்ந்து பாராட்டியதுடன் “எப்போ சினிமாவுக்கு வரப் போறே? சீக்கிரம் வா” என்று வாழ்த்தியிருக்கிறார். மற்றும் இக்குறும்படத்தை பார்த்த இயக்குனர் ரத்தின சிவா பாராட்டியுள்ளார்.
விரைவில் இயக்கவுள்ள தன் திரைப்படத்துக்கான கதையமைப்பு, முன் தயாரிப்பு என மும்முரமாக இருக்கும் தன்னை யாரும் சம்பிரதாயமாக வாழ்த்த வேண்டாம். இக்குறும்படத்தைப் பார்த்துவிட்டு மதிப்பெண் போட்டு விட்டு வாழ்த்தட்டும் என்கிறார் நம்பிக்கையுடன் .
கீழே குறும்படத்தின் லிங்க்…. பார்த்துவிட்டு மதிப்பெண் இடுங்கள்… தலைப்பை வைத்து கமெண்ட் மட்டும் போட்டு விடாதீர்கள்…