மகன் உயிர் பிழைக்க வேண்டி ஒண்டிமோனிக்கு ஒரு கிடாயை பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார் விவசாயி நல்லபாடன் (அந்த வேடத்தை ஏற்றிருக்கிறார் பரோட்டா முருகேசன்.)
அதன்படியே மகன் பிழைத்து விட, ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்த்து வருகிறார். மகனும் கிடாவும் வளர்ந்து நிற்க ஒண்டிமுனிக்கு அதை காணிக்கையாக்கும் வேளை மட்டும் வரவே இல்லை.
அதற்குக் காரணம் அந்த ஊரில் பகைமை பாராட்டித் தெரியும் இரண்டு பன்னாடிகள். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருப்பதால் இருவரும் ஒன்றுபட்டு கோயில் நிகழ்வுக்கு வராமல் இருக்க இரண்டு பேர் வீட்டுக்கும் நடையாய் நடக்கிறார் முருகேசன்.
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான அவரை சகல உதவிகளுக்கும் பைசா செலவில்லாமல் பயன்படுத்திக் கொண்டு ஆனால் அவரது கிடா காணிக்கையை மட்டும் செலுத்த முடியாமல் செய்து வருகிறார்கள் இரண்டு பெருசுகளும்.
ஒரு கட்டத்தில் பெரிய பன்னாடி ஒத்துக்கொள்ள அதற்கு பின்னால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு எதிராக ஒரு பெரிய சதி இருக்கிறது.
இதற்கு இடையே முருகேசனின் மூத்த மகள் சித்ரா பேசிய படி நகையை தராததால் மாமியார் வீட்டில் விரட்டப்பட்டு இவர் வீட்டில் மகனுடன் தஞ்சம் புக, முருகேசனின் மகன் விஜயன் காதலிக்கும் பெண், சொந்தமாக மோட்டார் சைக்கிள் வைத்திருந்தால்தான் காதலிப்பேன் என்று கூற… பணத் தேவைக்காக ஆட்டுக்கிடாயை விற்கும் நெருக்கடிக்கு ஆளாகிறார் முருகேசன்.
இத்தனை பிரச்சனைகளைத் தாண்டி கோயில் கொடையை அவரால் சரியாக செலுத்த முடிந்ததா என்பதுதான் கதை.
கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் ஒரு நிலத்தின் வாழ்வியலை அற்புதமாக திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சுகவனம். அதிலும் அந்த கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்க முடியாத அற்புதம்.
நல்லபாடனாக நடித்திருக்கும் பரோட்டா முருகேசனுக்கு இந்த படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை தரும். அத்தனை காடு மேடைகளிலும் காலில் செருப்பு இல்லாமல் நடந்து ஓடி வைக்கோல் போர்களை தனியாளாக சுமந்து… உண்மையிலேயே உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்.
விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்பட வேண்டியவர் அவர்.

பெரிய பன்னாடியாக நடித்திருக்கும் கார்த்திகேசன் நடிப்பும் அசத்தல். அந்தக் குண்டுக் கண்களுக்குள் எரியும் சதியை இனம் காண முடிகிறது.
சோம்பித் திரியும் இன்னொரு பன்னாடி முருகனும் சுயநலத்துடன் பிறரை வேலை வாங்கிக்கொள்வதில் சூது கொண்டு திரிவது கொடுமை.
முருகேசனின் மகனாக வரும் விஜயன், மகளாக வரும் சித்ரா நடராஜன், மாப்பிள்ளை விஜய் சேனாதிபதி, காமெடியன் விகடன் அனைவருமே அந்தந்தப் பாத்திரங்களில் அச்சு அசலாகப் பொருந்தி இருக்கிறார்கள்.
முருகேசனின் பேரனாக வரும் சிறுவனும் அசத்தி இருக்கிறான்.
கதைக் களத்தை நம் கண்முன்னே விரித்து வைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர் விமல்.
பாடல்கள் தேவைப்படாத படத்தில் தேவைக்கு மிகாமல் பின்னணி இசை தனது பிரமிக்க வைக்கிறார் நடராஜன் சங்கரன்.
சதீஷ் குரசோவாவின் படத் தொகுப்பையும் பாராட்டியாக வேண்டும்.
இப்படி அத்தனை கலைஞர்களையும் திறம்பட வேலை வாங்கியிருக்கும் இயக்குனர் சுகவனம் பாராட்டுக்களும், விருதுகளும் பெறத் தக்கவர்.
ஒண்டிமுனியும் நல்லபாடனும் – மனதில் ஒன்றிய படைப்பு..!
– வேணுஜி