December 8, 2025
  • December 8, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • நிர்வாகம் பொறுப்பல்ல திரைப்பட விமர்சனம்
December 5, 2025

நிர்வாகம் பொறுப்பல்ல திரைப்பட விமர்சனம்

By 0 123 Views

ஏமாறுபவர்கள் லட்சக் கணக்கில் இருக்க, ஏமாற்றுபவர்கள் வேலை எளிதாகிறது. 

அதிலும் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க நினைக்கும் எளிய மனிதர்களின் பேராசையே ஏமாற்ற நினைக்கும் தவளைகளைக் கூட திமிங்கலங்களாக மாற்றி விடுகிறது.

இந்த.லைனை வைத்து இன்னொரு ‘ சதுரங்க வேட்டை’ ஆட நினைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.கார்த்தீஸ்வரன். அதில் இன்னொருவரை நடிக்க வைப்பானேன் என்று தானே ஹீரோவாகவும் நடித்து விட்டார்.

அப்படி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு 10,000 கோடி ரூபாய் புரட்டுகிறது அவர் தலைமையேற்கும் ஐந்துபேர் கொண்ட மோசடி கும்பல். 

பின்னர் போலீசில் சிக்கி மறுநாள் தூக்கு மேடைக்குப் போகும் நிலையில் தன் கதையைத் தானே பிளாஷ்பேக்காக சொல்ல படம் விரிகிறது. அவர் செய்த மோசடிகள் எல்லாம் அடுக்கடுக்காக சொல்லப்பட, கடைசியில் என்ன ஆகிறது என்பது கிளைமாக்ஸ்.

அசப்பில் ஆரம்பகால விஜய் சேதுபதி போல இருக்கிறார் நாயகன் கார்த்தீஸ்வரன்…

ஆனால், இன்னும் நடிப்பில் தேறி, நல்ல ஸ்கிரிப்டுகளைத் தேர்ந்தெடுத்தால் இன்னொரு சேதுவாக உருவெடுக்கலாம்.

ஆனால், பெரும் கோடீஸ்வரனாக வருபவர் இன்னும் கொஞ்சம் கெட்டப்பில் கவனம் செலுத்த வேண்டாமா..? படு லோக்கலாக இருக்கிறது அவர் தோற்றம்.

அவரது ஐவர் குழுவின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. ஆதவன் உள்பட எல்லோரும்  தேவையில்லாத ஆணிகளாக இருக்கிறார்கள். அவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டாலாவது பரவாயில்லை. அடித்த பணத்தில் ஷேர் கொடுக்கும் அளவுக்கு அவர்கள் சாதனை என்ன என்பது புரியவில்லை.

ஹீரோவைப் பொறி வைத்துப்பிடிக்கும் காவல் அதிகாரி வேடம் ஶ்ரீநிதிக்கு. அவர் கையால் அடி வாங்கும் அக்யூஸ்டுகள் பாக்கியவான்கள் என்ற அளவில் அழகாக இருக்கிறார் ஶ்ரீ.

இவர்களுடன் பிளாக்பாண்டி, லிவிங்ஸ்டன், மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்டோர் பிற பாத்திரங்களை இட்டு நிரப்புகிறார்கள்.

‘சக்சஸ் பார்ட்டி’ பாடல் மற்றும் அதிரடி பின்னணி இசையில் ஶ்ரீகாந்த் தேவாவின் அடையாளம் தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ் தன் வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார். ஆனால், டி ஐயில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

ஆனாலும் பிளாஷ் பேக் காட்சிகளை ஏஐ  யில் செய்திருப்பது லேட்டஸ்ட் சிந்தனை.

தான் ஏன் ஏமாற்றுக்காரனாக மாறினேன் என்பதற்காக கார்த்தீஸ்வரன் சொல்லும்  முன்கதை பரபர…

எழுதி இயக்கியும் இருக்கும் அவரது புத்திசாலித்தனம் ஸ்கிரிப்டில் தெரிகிறது. 

அவர் ஶ்ரீநிதியிடம் மாட்டிக்கொண்ட வேளையில் பொது வெளியில்  நம்மை சுற்றி இருக்கும் சமுதாயம் எப்படி நாம் அறியாமல் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது நிறைய யோசிக்க வைக்கிறது.

ஆனால் அவர் லோக்கலாக ஏமாற்றி இருந்தால் பரவாயில்லை இந்திய அளவில் பத்தாயிரம் கோடி சுருட்டுவதை அரசு எந்திரம் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா என்ன..? அத்துடன் கடைசியில் எந்த நீதியும் சொல்லப்படாமல் விட்டிருப்பதும் குறைதான். நீள நீளமான காட்சிகளுக்கும் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம்.

நிர்வாகம் பொறுப்பல்ல – (ஏ)மாற்றம் ஒன்றே மாறாதது..!

– வேணுஜி