November 23, 2024
  • November 23, 2024
Breaking News
November 23, 2024

நிறங்கள் மூன்று திரைப்பட விமர்சனம்

By 0 8 Views

படத்தின் தலைப்பு கதையை சொல்லி விடுகிறது. அதர்வா முரளி, ரஹ்மான், துஷ்யந்த் – இந்த மூன்று பேரின் தேடல்கள்தான் கதை.

சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஏக்ப்பட்ட பட நிறுவனங்களின படிகள் ஏறி இறங்குகிறார் நாயகன் அதர்வா. ஆனால் வாய்ப்பு கிடைக்காத ஆற்றாமையில் போதை வஸ்துகளை நாடுகிறார்.

ஒரு ஸ்கூல் வாத்தியாரான ரகுமான் தன் மகள் அம்மு அபிராமியை காணவில்லை என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமாரிடம் புகார் தருகிறார். (சரத்குமாரின் தேடல் வேறு)

இச்சூழலில் அம்மு அபிராமியை லவ் செய்யும் துஷ்யந்த் காணாமல் போன அபிராமியைத் தேடி அலைகிறார்..

இந்த மூன்று சம்பவங்களும் வெவ்வேறு பாதைகளில் போனாலும் இறுதியில் ஒரு நேர்கோட்டில் வந்து இணைகிறது. அதுதான் நிறங்கள் மூன்று படத்தின் மொத்தக் கதை.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் எல்லாப் பாத்திரங்களும் வாழ்க்கையின் எதார்த்தத்தின் அடிப்படையில் புனையப்பட்டிருப்பது கதைக்கு  உயிரோட்டத்தை தந்திருக்கிறது.

அதர்வாவின் நடிப்பை குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும். நடிப்புத் திறனை காட்டக் கூடிய வாய்ப்பு கிடைத்து அதை சரியாகப் பயன்படுத்தி ஸ்கோர் செய்து இருக்கிறார் அதர்வா. தன்னுடைய கதையைத் திருடி விட்டார்கள் என்ற தகவல் வரும்போது அதிர்ச்சி, கோபம், அழுகை, விரக்தி என அடுத்தடுத்து அவர் காட்டும் உணர்ச்சிகள் டாப் கிளாஸ்.

ஆனால் போதையில் அவர் கடவுளைகூப்பிட, அந்தக் கடவுளும் அதர்வா வேடத்திலேயே வந்து லந்து பண்ணுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

இயக்குனர் கார்த்திக் நரேனின் லக்கி சார்ம் ஆன ரஹ்மான் நரேன் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்து இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தான் நடிப்பில் எப்போதும் ஜீனியஸ் என்பதையும் நிரூபித்து இருக்கிறார்.

அம்மு அபிராமியின் நடிப்பும் கிளைமாக்ஸ் காட்சியில் நன்று.

படத்தின் ஹைலைட்டே கார்த்திக் நரேன் அமைத்திருக்கும் திரைக்கதைதான். அத்துடன் எந்தக் குறையும் சொல்ல முடியாத எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு, கதை சொல்லல் ஆகியவற்றில் மிகவும் தேர்ந்து இருக்கிறார் கார்த்திக் நரேன்.

அடுத்தடுத்த சீன்கள் எப்படி இருக்கும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத வகையில் வைத்திருப்பது படத்தை விறுவிறுவென பறக்க வைக்கிறது.

ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் கருணா மூர்த்தி இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

துருவங்கள் பதினாறு படத்தில் தன்னை முதல் நிலை இயக்குனராக நிறுவிக் கொண்ட கார்த்திக் நரேன் அப்படத்தில் எப்படி ஒரு மாறுபட்ட கிளைமாக்ஸ் தந்தாரோ அதே போல் இதில் மற்றொரு மாறுபட்ட கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார்.

ஆனால் அதர்வாவின் கேரக்டருக்கான வடிவமைப்பு நெருடலாக இருக்கிறது. டைரக்டராகும் லட்சியம் கொண்ட இளைஞர்  எப்போதும் போதை வஸ்துகளை உபயோகிக்கும் காட்சிகளைப் பார்க்கும் நமக்கே ஒரு கட்டத்தில் அவர் மீதான மதிப்பு குறைந்து போகிறது.

சராசரிக்கும் கீழான இளைஞராக வெற்றி கிடைக்கவில்லை என்றால் உடனே போதை பொருட்களை உட்கொள்வது என்பதெல்லாம் தவறான முன்னுதாரணம். 

போதைப் பொருளில் திளைத்து, படைப்புக்கும் போதைக்கும் தொடர்பிருப்பதாகப் பேசுவது எல்லாம் தவறான விஷயங்களை நியாயப்படுத்துவது போல் அமைகிறது.

அத்துடன் அவர் குடும்பத்தை விட்டு பிரிவதற்கான காரணமும் சரியாக காட்டப்படவில்லை. அதேபோல, சரத்குமார் ரோல் பெரிதாக ஏதோ செய்யப் போகிறது என்று நினைத்தால் அது ஏமாற்றம் அளிக்கிறது.

இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்து இருந்தால் மீண்டும் ஒரு துருவங்கள் பதினாறு நமக்குக் கிடைத்திருக்கும். 

பதினாறை விட மூன்று சிறியதுதானே..? அந்த அளவில் திருத்திப்பட்டு கொள்ள வேண்டியதுதான்..!