தமிழ்நாட்டில் நேற்று 2,279 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் 7,960 பேரும், தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை சுமார் 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டடும் 9 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டும் உள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் தீவிரமாவதை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதிய நிபுணர் குழுவை தலைமை செயலாளர் உருவாக்கி உள்ளார்.
அந்த குழுவில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மைக்குழு செயலாளர், சுகாதாரத்துறை இயக்குனர், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி மற்றும் மருத்துவர்கள் என 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அந்த நிபுணர் குழு தமிழகத்தின் தற்போதைய கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
அதன்பிறகு தலைமை செயலாளரிடம் அந்த நிபுணர் குழு சில பரிந்துரைகளை வழங்க உள்ளது. அதன் அடிப்படையில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
தமிழகத்தில் மீண்டும் முழுமையான ஊரடங்கு வர வாய்ப்பு இல்லை. ஆனால், மத்திய அரசு வலியுறுத்துவதால் சில கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்படும் என்று தெரிகிறது.
அந்தக் கட்டுப்பாடுகள் 6-ந் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படலாம் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.