October 30, 2024
  • October 30, 2024
Breaking News
March 28, 2024

நேற்று இந்த நேரம் திரைப்பட விமர்சனம்

By 0 329 Views

ஷாரிக் ஹசன், திவாகர் குமார், நிதின் ஆதித்யா, அரவிந்த், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா உள்ளிட்ட விஸ் காம் முடித்த இளைஞர் குழு ஒன்று ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறது.

சென்ற இடத்தில் ஷாரிக்கைக் காணவில்லை என்று அரவிந்த் போலீசுக்கு சொல்ல, விசாரணை வளையத்துக்குள் வருகிறது இளைஞர்கள் குழு.

தொடர் விசாரணையில் ஷாரிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு இன்ஸ்பெக்டர் வர, இறுதி நாள் விசாரணையின் போது புகார் கொடுத்த அரவிந்தையும் காணவில்லை. இப்படியாக போகிற மர்டர் மிஸ்டரி கதை இது.

முதல் காட்சியிலேயே படத்தின் ஹீரோவான ஷாரிக்கைக் காணவில்லை என்ற நிலையில் விசாரணையின் போது ஒவ்வொருவரும் சொல்லும் பிளாஷ்பேக்கில் தான் ஷாரிக் வந்து போகிறார் எனினும் முழுப் படத்திலும் அவரைப் பார்க்க முடிகிறது.

ஷாரிக்கைப் பார்ப்பதற்கு இளவயது ஷாருக்  போலவே இருக்கிறார். திறமையை இன்னும் வளர்த்துக் கொண்டால் உண்மையிலேயே ஷாருக் கான் போல வரலாம்.

ஆனால் என்ன… இந்தப் படத்தில் கொஞ்சம் உமனைசராகவும் வில்லன் போலவும் வருகிறார்.

ஷாரிக்கின் காதலியாக வரும் ஹரிதாவுக்கு கிட்டத்தட்ட படத்தின் ஹீரோயின் போன்ற வேடம் ஆனாலும் ஷாரிக் ஒரு கட்டத்தில் ஹரிதாவைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்வது ஹரிதாவைப் போலவே நமக்கும் ஷாக்தான்.

மற்றபடி திவாகர் குமார், நிதின் ஆதித்யா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாகவே பங்களித்து இருக்கிறார்கள்.

படத்தில் விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டராக வருபவர் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். ஆனால் விசாரணையின் போக்கை வைத்து அவர் யூகிப்பதெல்லாம் நமக்கே சிரிப்பு வரும் அளவில்தான் இருக்கிறது.

இது போன்ற விசாரணைக் கதைகளில் எல்லாம் முதல் கட்ட விசாரணையில் நாம் தெரிந்து கொண்டவை எல்லாமே இரண்டாவது கட்ட விசாரணையில் மாறிப் போய்விடுவது வழக்கம். அப்படித்தான் இங்கும் நடக்கிறது.

இறுதியில் ஒரு கட்டத்தில் ஷாரிக்கைக் கொல்வதற்கு நண்பர்கள் அனைவரும் முடிவெடுப்பதாக வருவது நம்ப முடியாததாக இருக்க… அதற்கும் ஆன்டி கிளைமாக்சில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர்.

கதையை எழுதி இயக்கி இருக்கும் சாய் ரோஷன் கே.ஆர், ஸ்கிரிப்ட் அளவில்  நன்றாகவே எழுதி இருக்கிறார் ஆனால் ஒரு இயக்குனராக அதைப் படமெடுக்கும் போதுதான் பட்ஜெட் பற்றாக்குறையாலோ என்னவோ சாதாரணமாகப் படமாக்கி விட்டார்.

குறிப்பாக ஒவ்வொரு விசாரணையின் போதும் சீட்டையும் மாற்றாமல் ஷாட்டையும் மாற்றாமல் எல்லோரும் எந்தெந்த இடத்தில் உட்கார்ந்தார்களோ அங்கேயே உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டே இருப்பது மிகவும் அலுப்பைத் தருகிறது.

இதில் எல்லாம் கொஞ்சம் பட்ஜெட் கூட்டி கவனத்தை ஈர்த்து இருந்தால் சிறந்ததொரு படமாக இது இருந்திருக்கும்.

‘விஷால் எம்’மின் கேமராவும் பட்ஜெட்டுக்குப் பணிந்து பவ்யமாக படம் எடுத்து இருக்கிறது.

‘கெவின் என்’னின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் அப்படியே ஆனால் பாடகர்களின் குரல்கள் கிணற்றில் ஒலிப்பது போல் சத்தம் குறைவாக கேட்பது ஏன் என்று தெரியவில்லை.

இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம் என்கிற அளவில் உருவாகி இருக்கிறது நேற்று இந்த நேரம்..!