நட்பையும், காதலையும் சரியாகச் சொல்லும் படங்கள் ரசிகர்களை ஏமாற்றுவதில்லை. அந்த வகையில் இந்த ‘நேத்ரா’ படமும் அதையே சொல்லி களம் இறங்கியிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக நடிகராகிவிட்ட இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படம் அவரது வழக்கமான பாணியிலிருந்து விலகி அவருக்கு வித்தியாசமான களத்தைத் தந்திருக்கிறது.
கதை முழுவதும் வெளிநாட்டில்தான் நடக்கிறது. ஆனால், வெளிநாடு போகிறோம் என்றாலே அதுவே போதும் என்று இயக்குநர்கள் நம்புவதுதான் தப்பாகப் போய்விடுகிறது.
வினய், சுபிக்ஷா, தமன் குமார் மூவரையும் நட்பு சேர்த்துவைக்க, சுபிக்ஷாவுக்கும் தமனுக்கும் காதல் வந்து வினய்யை விலக்கி வைக்கிறது. இந்நிலையில் சுபிக்ஷாவுக்கு வீட்டில் திருமணம் நிச்சயிக்கிறார்கள். விஷயம் கேள்விப்பட்டு தமன் – சுபிக்ஷா காதலைச் சேர்த்து வைக்க கனடாவிலிருந்து வரும் வினய் திட்டப்படி சுபிக்ஷாவும் தமன்குமாரும் கனடா செல்கிறார்கள்.
கும்மிடிப்பூண்டிக்கு தேடிச்சென்ற ஒருவர் இல்லையென்றாலே எப்படி இருக்கும்..? ஆனால், இவர்கள் இருவரும் கனடா சென்ற சமயம் வினய் ஆஸ்திரேலியா போய் விடுகிறார். போன இடத்தில் ‘பூவா’வுக்கு என்ன செய்வதென்று தமன் ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக சில நாட்களிலேயே அவர் காணாமல் போகிறார்.
காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கும் சுபிக்ஷாவுக்கு அவர் தமனுடன் வரவில்லை என்றும் தனியாகத்தான் வந்தார் என்றும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியைக் கொடுக்கிறார்கள். இதன் பின் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் திருப்பம்.
படத்தின் ஹீரோ வினய்தான். வில்லனும் அவரேதான். நண்பர்களின் காதலுக்கு உதவுவதாகச் சொல்லிய அவரேதான் இருவரும் பிரியக் காரணமாகவும் இருக்கிறார். படுபயங்கரமான வில்லத்தனத்தை அவரது கேரக்டரைசேஷனில் கொடுத்து மில்க் சாக்லேட் போலிருக்கும் வினய்யை வில்லனாக்க முயன்றிருக்கிறார்கள். அவரும் ஒருமாதிரி வில்லனாகி விடுகிறார்.
அப்பாவி தமன்குமாருக்கு சுபிக்க்ஷாவைக் காதலிக்க நேரம் கொடுக்காமல் அவரைக் கடத்திவிடுகிறார்கள். அதன்பின் தனியறையில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படுகிறார். அவர் கண் எதிரிலேயே தன் காதலி ரசிக்கப்படுவதைப் பார்க்க நேர்வது அந்தோ பரிதாபம்..!
அப்பழுக்கில்லாமல் தெரியும் சுபிக்ஷாவுக்கு மிகையில்லாத நடிப்பு கைகொடுத்திருக்கிறது. நம்பி வந்த காதலனைப் பறிகொடுத்துவிட்டு தவிப்பவர் ஒரு சந்தர்ப்பத்தில் வினய் மீதே சந்தேகம் கொள்வது நல்ல நகர்த்தல்.
வினய்யின் உதவியாளராக வரும் ரித்விகாவுக்கு அதிக வேலையில்லை. ரோபோ சங்கர், ‘மொட்ட’ ராஜேந்திரன் நகைச்சுவையை புதிதாக யோசிக்காமல், பழைய படங்களைக் கிண்டலடிப்பது எடுபடாத காமெடியாக அமைகிறது.
பின்னணி இசையில் அடையாளம் தெரியும் ஸ்ரீகாந்த் தேவா, பாடல்களுக்கான இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். வந்தவாசி அவுட்டோர் லொகேஷன் என்றாலே அசத்திவிடும் இன்றைய ஒளிப்பதிவு ட்ரெண்டில் கனடாவின் அழகை இன்னும் கூட மேம்படுத்திக் காட்டியிருந்தால் அட்லீஸ்ட் வெளிநாட்டுப் பயண அனுபவமாவது கிடைத்திருக்கும்.
நல்ல ஒரு த்ரில்லர் கதை கிடைத்தும் திரைக்கதையில் அதற்குரிய சுவாரஸ்யங்கள் இல்லை. தமன் காணாமல் போகும் வரை சரியாகப் போகும் படம் அதற்கு மேல் நகரப் பாடுபடுகிறது.
நேத்ரா – நெருங்கிய நண்பனாக இருந்தாலும் “பாத்றா..!” என்கிறது..!