காதலில் என்ன ‘நல்ல காதல், கள்ளக் காதல்..?’ என்பார்கள். எல்லாமே கள்ளம்தான். அந்த வகையில் இந்த படத்தில் ஏமாற்றிக் காதலித்த இருவர் என்ன ஆனார்கள் என்பதை கதையாக்கி தந்திருக்கிறார் இயக்குனர் அசோக்குமார் கலைவாணி.
பெற்ற மகள் காதலித்து அவளது வாழ்க்கை வீணாகப் போனதால், கணவனை விட்டு வீடு திரும்பிய அவளை தன் வசம் வைத்து காப்பாற்றுகிறார் பொள்ளாச்சியை சேர்ந்த பெரிய மனிதரான ஒய்.ஜி.மகேந்திரன்.
அதனால் பேத்தியையும், பேரனையும் சிறுவயதில் இருந்து கண்டிப்பாக வளர்க்கிறார். காதல் உள்ளிட்ட நவீனங்கள் எதுவும் வீட்டு பக்கம் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக அவர் இருக்க, பேத்திக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்.
இந்நிலையில் வாலிபனாக வளர்ந்து விட்ட பேரன் (நாயகன் சுதர்ஷன் கோவிந்த்) வேலை தேடி பட்டணதுக்கு வருகிறார்.
வந்த இடத்தில் ஆப் கிரியேட்டராகி காதலுக்கான ஆப் ஒன்றை உருவாக்க, அது தொடர்பான அனுபவத்துக்காக போலியாக ஒரு பெண்ணைக் காதலிக்க விரும்புகிறார்.
இன்னொரு பக்கம் ஆதரவற்றோர் விடுதியில் வளர்ந்த நாயகி அர்ச்சனா ரவி, திரைப்பட இயக்குனராக விரும்புகிறார். அதற்கான காதல் ஸ்கிரிப்ட் ஒன்றை உருவாக்க அவரும் ஒரு ஆணை சும்மானாச்சும் காதலித்துப் பார்க்க விரும்புகிறார்.
இந்த இருவரும் இப்படி போலியாக ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பிக்க… முடிவு என்ன ஆனது என்பதுதான் கதை.
அமிதாப்பச்சன் உயரத்தில் இருக்கும் நாயகன் சுதர்ஷன் கோவிந்த், தோற்றத்துக்கு பொருந்தாத அளவுக்கு அப்பாவியாக நடித்திருக்கிறார். எல்லாக் கலைகளும் கற்று வைத்திருக்கும் அவருக்கு நடிப்பு இன்னும் கை கொடுக்க வேண்டும்.
ஒரு தேர்ந்த இயக்குனர் நினைத்தால் அவரிடமிருந்து அற்புதமான நடிப்பை வாங்கி விட முடியும்.
நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவியும் அப்படியே. சுதர்சனுக்கு பொருத்தமாக ஓங்குதாங்காக இருப்பவர் நடிப்பில் இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டும். ஆனால் படம் முழுக்க வருவது அவருக்கு பிளஸ் பாயிண்ட்.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பிரதோஷ் மற்றும் நோபல் என்னென்னவோ செய்து நம்மை சிரிக்க வைக்க பார்க்கிறார்கள். சீரியஸான ஒரு கட்டத்தில் நம் நண்பனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். ஏதோ செய்வார்கள் என்று பார்த்தால் அதை அப்படியே மறந்து போகிறார்கள்.
கண்டிப்பான ஒரு தாத்தாவாக வரும் ஒய்.ஜி.மகேந்திரன் அந்த கண்டிப்பு தளரும் இடத்தில் கை விரல்களில் எல்லாம் நடித்திருக்கிறார்.
நிழல் போல் கடைசியாக வருகிறார் நிழல்கள் ரவி.
துணைப் பாத்திரங்களாக பயணித்திருக்கும் எம்.ஜெ.ஸ்ரீராம், ரெதிகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் படத்தை தங்கு தடை இன்றி நகர்த்த பயன்பட்டிருக்கிறார்கள்.
ராஜா பட்டர்ஜார்ஜி-யின் ஒளிப்பதிவும், அஸ்வின் ஹேமந்தின் பின்னணி இசையும் படத்தின் களத்தை நியாயப்படுத்தியிருக்கின்றன.
இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பின் பாதியை கையாண்டிருப்பதை போலவே முன்பாதியையும் கையாண்டிருந்தால் படத்தை முழுமையாக ரசிக்க முடிந்திருக்கும்.
ஒரு ஃபீல் குட் படத்தை தர முயற்சித்திற்கும் அவர், முன்பாதியை ஃபீல் செய்ய வைத்தும். பின் பாதியை குட் என்ற அளவிலும் இயக்கியிருக்கிறார்.
நீ ஃபார் எவர் – காதல் நாடகம்..!
– வேணுஜி