இன்றைய நகரத்துப் பின்னணி கொண்ட வாழ்க்கையில் தாத்தா பாட்டி உறவுகளெல்லாம் அர்த்தமற்றுப் போய்விட… ஏன் அறிமுகமில்லாமலேயே போய்விட, தமிழ்க்குடியின் அத்தியாவசிய உறவாக அமைந்த மூன்றாம் மூத்த உறவின் பெருமையைச் சொல்லியிருக்கிறது இந்தப்படம்.
கூடவே எந்த உறவுகளும், உறவு மறுப்புகளும் குடும்ப உறுப்பினர்களின் நன்மைக்காக மட்டுமே என்ற கருத்தையும் ஆழமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்வக்கண்ணன்.
கிராமத்து வாழ்க்கையில் பெரும்பாலும் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு பாட்டி தாத்தாமார்களுக்கே இருக்கிறது. அப்படி பாட்டிக்கும், பேத்திக்குமான ஒரு உறவை கடந்த தலைமுறையில் ‘பூவே பூச்சூடவா’ சொன்னதுபோல் இந்தத் தலைமுறைக்கு ஒரு தாத்தா பேரன் கதையை வாழ்க்கையும், வழக்குமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
தமிழ்நாட்டின் எந்த மண்ணுக்கும் இந்தக் கதை பொருந்தும் என்றாலும் கதை நடப்பதாக இயக்குநர் காட்டும் நெல்லை மாவட்ட வாழ்வும், வழக்கும் மண்மணக்கிறது. அதுவே கதையின் நம்பகத்தன்மையை உறுதியும் செய்கிறது.
எல்லோரும் கடந்து வந்திருக்கக் கூடிய கதைதான் என்பதால் தனியாகக் கதை என்றில்லாமல் ஒரு அப்பா – மகள், ஒரு தாத்தா – பேரன், ஒரு காதலன் – காதலிக்கான உறவுகளை ஒரு வாழ்க்கை எப்படியெல்லாம் நிர்ப்பந்தப்படுத்துகிறது என்பதுதான் ஒருவரிக்கதை.
உழைத்துக் கருத்த தன் பரந்த தோளில் குடும்பத்தை முழுவதுமாகச் சுமக்கும் பொறுப்பில் கதைக்காவும், ஒட்டுமொத்த படத்தைத் தாங்கும் பாத்திரப் பொறுப்புமாக வருகிறார் பூ ராமு. அவரை நாம் பார்த்த ‘பூ’வுக்குப் பின் மறக்க முடியாமல் அமைந்த உன்னதமான பாத்திரப்படைப்பு இதில்.
பாசம் காட்டும்போது நேசம், பரிவு காட்டும்போது பதவிசு, கண்டிப்பான முடிவெடுக்கும்போது கறார்த்தனம் என்று வாழ்வின் இன்ப துன்பங்களை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார் ராம். வாழவும் வழியில்லாமல், சாகவும் துணிவில்லாமல் இரண்டு குழந்தைகளுடன் வீடேறி வந்து நிற்கும் மகள் செந்தியின் கண்ணீர் துடைத்து அவளை ஏற்க மறுக்கும் மகனிடம் அவளும் என் ரத்தம்தான் என்று அரவணைப்பதில் ஒரு தாயுள்ளம் கொண்ட தந்தையாக உயர்கிறார் அவர்.
அதேபோல் பேரனின் காதல் விவகாரம் தெரிந்து அதை மறுக்க வைப்பதில் தொடங்கி கைமீறும் நிலையில் அதை முடித்து வைக்கக் கிளம்பி முடியாமல் திரும்பும் கையறு நிலையில் அப்பாவிக் கிழவனாகவும் பரிதாபப்பட வைக்கிறார் அவர்.
அவரது பேரனாக நடித்திருக்கும் புதுமுகம் இளங்கோவும் அசத்தியிருக்கிறார். இளம் வயதிலேயே சோதனைகளைத் தாங்கி வளர்ந்த பிள்ளை என்பதை உடல் மொழியினாலும், உறுக்கமான உணர்வுகளாலும் புரிய வைத்திருக்கிறார்.
நாயகி அஞ்சலி நாயரும் அப்படியே. வாளிப்பான உடற்கட்டும் வனப்புமாகத் தெரிந்தாலும் இளங்கோவின் மேல் அவர் கொண்ட காதல் காலத்துக்கும் அழியாது என்று புரியவைத்திருக்கும் நடிப்பில் நெகிழ வைக்கிறார்.
ராமுவின் மகளாக வரும் செந்தி, மகனாக வரும் மைம் கோபி மற்றும் ஐந்து கோவிலான், அஜய் நட்ராஜ் ஒவ்வொருவரும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள் என்றால் அந்தப் பெருமை இயக்குநர் செல்வக்கண்ணனின் அசாத்திய இயக்கத்தையே சேரும்.
இளையராஜா போன்ற ஒருவர் இசைத்திருக்க வேண்டிய இந்த வாழ்வியல் படத்துக்கு ஒப்புவமை இன்றி தன்னால் முடிந்த அற்புத பங்களிப்பைச் செய்திருக்கும் இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளினும் பாராட்டுக்குரியவர். வைரமுத்துவின் பொருள் பொதிந்த பாடல்களைக் கேட்கும் போதே புரியவைத்துப் பரவசம் கொள்ள வைத்திருக்கிறார்.
அதேபோல் ஒரே இடத்தில் தெரிந்த பாத்திரங்களினூடே கதை நகரும் சோர்வு தெரியாமலிருக்க, ஒரு செழித்த கிராமத்தின் வனப்புகளால் ஈடு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி.
வாழ்க்கைக் கதைகள் என்றாலே அதன் படத்தொகுப்பை இவர் ஒருவரால்தான் கையாள முடியும் என்றாகிவிட்ட மு.காசிவிஸ்வநாதனின் கைவண்ணமும் அருமை.
அழிக்கப்பட்டு வரும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சரி… வழக்கொழிந்து வரும் தமிழ்க்குடிகளில் உறவுகளின் மேன்மைக்கும் சரி… ஒரு ஆவணமாக இந்தப்படம் திகழ்கிறது.
படைத்த செல்வக்கண்ணனுக்கும், அவருக்காகத் தயாரித்த 50 நண்பர்களுக்கும் வந்தனங்கள்..!
நெடுநல்வாடை – நெடுங்காலம் வீசும்..!