நயன்தாரா சினிமாவில் நடிகையாக அறிமுகமானது, தமிழ் சினிமாவில் நுழைந்து சில தடைகளுக்குப் பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்ததோடு, அவரது காதல் திருமணத்தைப் பற்றி விவரிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது ’நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond the Fairy Tale – நயன்தாரா – தேவதைக் கதைக்கு அப்பால்) என்ற ஆவணப்படம்.
நயன்தாராவின் ஆவணப்படம் என்ற உடன் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அவரது காதல் கதைகளை தான், ஆனால் இதில் அவர் தான் கடந்து வந்த காதல்கள் பற்றி மேலோட்டமாக மட்டுமே பேசியிருப்பதோடு, காதல் விவகாரங்களில் பெண்களை மட்டுமே குற்றம் சொல்கிறார்கள், என்ற விசயத்தை மட்டும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில் தான் பல அவமானங்களை கடந்து தான் முன்னணி நடிகையாக உயர்ந்தேன், என்பதை பதிவு செய்திருப்பவர், சினிமாவுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றியது பற்றி எந்த தகவலையும் பகிர்ந்துக் கொள்ளவில்லை.
விக்னேஷ் சிவனுடனான காதல் மற்றும் திருமணத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம் முழுக்க முழுக்க வியாபர நோக்கம் கொண்டதாக மட்டுமே இருக்கிறது. நயன்தாரா என்ற நடிகைப் பற்றிய சுவாரஸ்யமான விசயங்கள் மற்றும் இதுவரை மக்களுக்கு தெரியாத தகவல்களை துளிகூட சொல்லாத இந்த ஆவணப்படம் நயன்தாராவின் திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்தாலும், அதையும் முழுமையாக விவரிக்கவில்லை.
இயக்குநர் கெளதம் மேனன், ஒரு நடிகையின் ஆவணப்படத்தை ஒரு படைப்பாக அல்லாமல் நேர்காணல் போல் இயக்கியிருக்கிறார்.
நயன்தாரா பற்றிய ஆவணப்படமாக இருந்தாலும், இதில் அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் கவனம் ஈர்க்கிறார்.
நயன்தாரா தன்னிடம் காதலை சொன்ன போது, அவர் எத்தகைய மனநிலையில் இருந்தார், என்பதோடு, நயன்தாரா உடனான அவரது காதல் விசயம் வெளியே தெரிந்தவுடன் வந்த விமர்சனங்களை அவர் எடுத்துக்கொண்ட விதம், தற்போது அவர் மனைவி நயன்தாராவுக்கு ஏற்றபடி வாழ்வது, போன்றவற்றை நகைச்சுவையாக விவரித்து கைதட்டல் பெற்றுவிடுகிறார்.
’நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ ஆவணப்படம் முழுமையாக இல்லை என்றாலும், நயன்தாராவைப் பிடிக்கிறவர்களுக்குப் பிடிக்கும்..!