July 11, 2025
  • July 11, 2025
Breaking News
May 25, 2025

நரி வேட்டை திரைப்பட விமர்சனம்

By 0 73 Views

தமிழைத் தொடாத மலையாளப் படங்களே இல்லை என்னும் அளவுக்கு மலையாளப் படங்களில் தமிழின் தாக்கம் நிறைந்து விட்டது. அந்த வகையில் டொவினோ தாமஸ் ஹீரோவாகி இருக்கும் இந்தப் படத்திலும் தமிழின் முக்கிய இயக்குனரும் நடிகருமான சேரன் நடித்திருக்கிறார்.

தந்தையை இழந்த டொவினோ தாமஸ் தையல் வேலை செய்யும் அம்மாவின் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

படித்த இளைஞராக இருந்தாலும் தன் படிப்புக்கு ஏற்ற வேலை வந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்கிற கொள்கையுடன் சுற்றித் திரிகிறார். கூடவே காதலிக்கவும் செய்கிறார். 

அம்மா, தாய் மாமன், காதலி தரும் நெருக்கடிகளால் ஒரு கட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்குப் போகிறார். அவர் வேலைக்குச் சேர்ந்த நேரம் பழங்குடிகளுக்கும் அரசாங்கத்துக்குமான பிரச்சனை ஒன்று ஓடிக்கொண்டிருக்க, வயநாட்டில் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கும் அவர்களை அப்புறப்படுத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்ட போலீஸ் படையில் இணைகிறார்.

அங்கே அவரது தலைமைக் காவலராக சுராஜ் வெஞ்சரமூடுவும், உயர் அதிகாரியாக சேரனும் இருக்க, பழங்குடிகளின் உறுதி காரணமாக அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்படுகிறது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒரு கலவரத்தை ஏற்படுத்த என்னும் எண்ணும் சேரன் அதற்கு சுராஜை பலி கொடுக்கிறார். இதில் அதிர்ச்சி அடைந்த டொவினோ தாமஸ், சேரனை எதிர்க்க… முடிவு என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ். 

டொமினோ தாமசின் நடிப்பு பற்றி எப்போதும் நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. படத்தில் வரும் 30 வயதில் ஒரு இளைஞன் எப்படி நடந்து கொள்வானோ அப்படியெல்லாம் இருக்கிறது அவரது நடிப்பு. போலீசில் வேலைக்கு சேர்ந்த போது இள ரத்தம் காரணமாக அங்கங்கே கொதிப்பதிலும், எத்தனை பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவரை எதிர்க்கத் துணிவதுமாக அந்த பாத்திரத்தில் வாழ்ந்தே இருக்கிறார் டொவினோ.

சேரனையும் சொல்லியாக வேண்டும். நியாயப்படி அவர்தான் படத்தலைப்பில் இருக்கும் நரி. படத்துக்குள் தந்திர வேலைகள் செய்யும் அவர், மலையாளத்துக்குச் சென்று வில்லனானதில் தமிழில் அவர் சேர்த்து வைத்திருக்கும் பெருமை கொஞ்சம் தள்ளாடவே செய்கிறது. 

எல்லாம் நடிப்புதானே என்றால் உங்களை தமிழ் ரசிகர்கள் இதயத்தில் வைத்திருப்பதும்  அந்த நடிப்பால்தானே சேரன்..?

வழக்கமாக வில்லனாகவே நாம் பார்த்து பழக்கப்பட்ட சுராஜ் வெஞ்சரமூடு இதில் அப்பட்டமான நல்லவராக வந்து கவனத்தைக் கவர்கிறார். சிறிய வேடம் என்றாலும் நெஞ்சில் நிலைக்கத்தக்க வேடம் சுராஜ்க்கு.

இது முழுக்க காதல் கதையாக இல்லாமல் போனதால் ஹீரோயின் பற்றிப் பெரிதாக சொல்லிக்கொள்ள ஏதும் இல்லை. 

பழங்குடிகளாக நடித்திருப்பவர்களும் அவர்களை தலைமைச் தாங்கிச் செல்லும் அந்த வீரப் பெண்மணியும் மனதை விட்டு அகலாத பாத்திரங்கள். 

ஜேக்ஸ் பிஜாயின் இசையும், விஜய்யின் ஒளிப்பதிவும், எம்.பவாவின் கலை இயக்கமும் பாராட்டத்தக்கவை.

கேரள அரசியலில் அதிர்வை ஏற்படுத்திய நிஜக் கதையை தழுவி அபின் ஜோசப் எழுதிய கதைக்கு அனுராஜ் மனோகரின் அற்புத இயக்கம் ரசிக்க வைக்கிறது.

வணிகரீதியான படங்களுக்கு இடையில் இது போன்ற வரலாற்றுச் சுவடுகளாக உண்மை சம்பவங்களை படமாக்கி மக்களை விழிப்புறச் செய்வது கலைஞர்களின் மாபெரும் கடமையாகும். 

அந்தக் கடமையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் இந்த டீமுக்கு வந்தனங்கள். 

வணிகரீதியாக முதல் பாதி கொஞ்சம் மெதுவாக செல்கிறது என்பதை தவிர வேறு எந்தக் குறையும் இல்லை.

நரி வேட்டை – காலக் கண்ணாடி..!

– வேணுஜி