ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் தெலுங்குப் படவுலகில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்து ‘நடிகையர் திலகம்’ என்றறியப்பட்ட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு.
அவர் வாழ்க்கை முடிந்த எண்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கும் கதை. அப்போதுதான் பத்திரிகையில் சேர்ந்த சமந்தா, சாவித்ரியின் வாழ்வைக் கட்டுரையாக்கச் செய்யும் ஆய்வில் அப்பாவின் முகம் கூடத் தெரியாமல் அம்மாவின் அரவணைப்பில் ஒரு நடிப்பு விலாசம் பெற சாவித்ரி மேற்கொண்ட போராட்டம், அந்தப் போராடத்துக்குள் ஜெமினி கணேசனுடன் காதல் மலர்ந்து அவரைக் காதல் கடிமணம் புரிவதுடன் அந்தக் காதலுக்காகவே அனைத்தையும் இழப்பதிலிருந்து அவரது வாழ்க்கை விரிகிறது.
அந்த மணவாழ்க்கை தந்த பரிசாக அவருக்கு உச்ச நடிகையாகக் கிடைக்கும் புகழ் ஏற்றம், அரண்மனை போன்ற வீடு வாங்குவதில் தொடங்கி அள்ளிக்கொடுக்கும் வள்ளலாக, அனைத்தையும் சாதிக்கும் தாரகையாக, தயாரிப்பாளராக, இயக்குநராக அடுத்தடுத்த அவரது சாதனைகள் வியக்க வைக்க, ஆனால், அந்த ஏற்றமே காதல் வாழ்வில் விரிசலை ஏற்படுத்தி, தோல்வி முகத்தைத் தொட்டு மரணப்படுக்கை வரை கொண்டு செல்வது வரை போகிறது.
இந்த அற்புதமான கதையைக் காவியமாக்க முயன்றிருக்கும் இயக்குநர் நாக் அஸ்வின் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு முதலில் பாராட்டுகளைத் தெரிவித்தாக வேண்டும்.
அடுத்த பாராட்டு, சொன்னாலும், சொல்லாமல் விட்டாலும் நடிகையர் திலகமாகவே வாழ்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷுக்குதான். என்ன ஒரு அர்ப்பணிப்பான நடிப்பு..? ஒருசில காட்சிகளில் அப்படியே தோற்றத்தில் மட்டுமல்லாமல் மேனரிசம், நடிப்பிலும் சாவித்ரியின் பிம்பமாகவே தோன்றியிருக்கிறார் கீர்த்தி.
ஏற்கனவே திருமணம் ஆனவராக இருந்தாலும் ஜெமினியை மணம் புரிந்து தன் காதலே உலகமாய் வாழ்ந்தும், தன்னைவிட்டு இன்னொரு பெண்ணை அவர் நாடிச்செல்லும் வேளையில் நிஜ சதி சாவித்ரியாகிக் காட்டும் உக்கிரம் கீர்த்தியின் நடிப்புத் திறமையைப் பூர்த்தி செய்கிறது.
நமக்கு நன்றாகத் தெரிந்த ஜெமினி கணேசனின் தோற்றத்துக்கு துல்கர் சல்மான் அத்தனைப் பொருந்தி வரவில்லையென்றாலும், கேரக்டரைசேஷனில் வென்றுவிடுகிறார் மனிதர். சாவித்ரியுடனான உறவை ஊரார் தவறாகப் பேச, ஊரறிய தன் மனைவிதான் அவர் என்பதை உரக்கச் சொல்லும் காட்சியே அதற்கு சாட்சி.
ஜெமினி கணேசனின் ஈகோதான் சாவித்ரியின் வாழ்க்கைக்கு எமனானது என்று சொன்னாலும், அதை ஜெமினியின் மீது நமக்குக் கோபம் வராமல் சொல்லியிருக்கும் இயக்குநரின் திறமை நன்று.
சமந்தா ஒரு கட்டுரையைச் சமர்ப்பிக்கும் பத்திரிகையாளராக மட்டும் வெல்லாமல், சாவித்ரி வாழ்வை முன்மாதிரியாகக் கொண்டு தன் காதலிலும் வெல்வது நல்ல திரைக்கதை.
சமந்தாவின் காதலுக்கு இலக்காகும் விஜய் தேவரகொண்டாவுக்கு அவர் வைத்திருக்கும் ‘விக்’ போலவே கேரக்டரும் மனதில் பொருந்தவில்லை. பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, ராஜேந்திரபிரசாத் அனுபவ நடிப்பில் அள்ளிக் கொள்கிறார்கள். சின்ன வயது நாகேஸ்வர ராவாக அவரது பேரன் நாகசைதன்யா ‘நச்’ பொருத்தம்..!
இரண்டு காதல் கதைகளை மாற்றி மாற்றித் தந்ததில் நேரம் கடந்து கொண்டிருப்பது தெரியாத நீளத்தை இயக்குநர் கவனிக்கவே இல்லை போலும். அதுவே மிக நீளமான படமாக மாறி நம் பொறுமையைச் சீண்டிப் பார்க்கிறது.
ஒளிப்பதிவும், இசையும் ஓகே. டப்பிங்கிலிருந்து காட்சிகள் வரை எல்லாவற்றிலும் படர்ந்திருக்கும் ‘தெலுங்கு வாடை’ சாவித்ரியிடமிருந்து நம்மை அன்னியப்படுத்துவது உணரமுடிகிறது.
இருந்தாலும், சொல்லியாக வேண்டிய ஒரு திரைத் தாரகையின் சரித்திரத்தை ரசனையுடன் சொல்ல முடிந்த அளவில் இந்தப் படம் இந்திய சினிமாவுக்கு இணையற்ற சமர்ப்பணம்.
நடிகையர் திலகம் – நம்பகமான ஆவணம்..!