என்னை அன்புடன் “அண்ணே…” என்றழைத்த நா.முத்துக்குமாரை நாமிழந்த மூன்றாவது நினைவு தினமின்று. (ஆகஸ்டு 14) காலம் கார்கால மேகம் போல வேகத்துடன் கடந்துகொண்டேதான் இருக்கிறது.
முதல் முதலில் நான் முத்துக்குமாரை சந்தித்தது (நாம் தமிழர்) சீமானின் வீட்டில். நான் அப்போது தினமணி நாளிதழில் எழுதிக் கொண்டிருந்தேன். என்னை சீமான் “ஐயா…” என்று அழைக்க நானும் அவ்வாறே அவரை அழைப்பேன்.
அவர்கள் இருவரும் இப்போதிருக்கும் உயரங்களில் அப்போது இல்லை. ஒரு இயக்குநராக மட்டும் சீமான் அறியப்பட்டிருந்த காலம். அவர் தங்கியிருந்த சாலிக்கிராமம் வீடு வந்தவர்கள் தங்கிச் செல்லும் ஒரு சத்திரம் போல் இருந்தது.
சினிமாக் கனவுகளை சுமந்துகொண்டு சென்னை வந்த பெரும்பாலான இளைஞர்கள் அந்த வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். தென் மாவட்டங்களிலிருந்து சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்தவர்களிடம் மாற்றுத்துணி இருக்கிறதோ இல்லையோ, அண்ணன் அறிவுமதி, ஐயா சீமானின் இல்ல முகவரிகள் நிச்சயம் இருக்கும். அவர்கள் வந்து சேரும் புகலிடங்களும் அவையாகத்தான் இருந்தன.
அவர்களுக்கு எங்கோ ஒரு வாய்ப்பை இருவரும் பெற்றுத் தந்து உண்ண உணவும், இருக்க இடமும் தந்து கொண்டிருந்தார்கள். ஐயா சீமான் வீட்டில் இருந்தவர்களுடைய ஒட்டுமொத்த அடையாளம் ‘சீமானின் தம்பிகள்’ என்பது.
ஐயா சீமானின் வீடு எப்போதும் திறந்தே இருக்கும். வீட்டினுள் நிறைய இளைஞர்கள் புழங்கிக் கொண்டிருப்பார்கள். சிலர் இரவு ஷூட்டிங் முடிந்து தூங்கிக் கொண்டிருப்பார்கள். சிலர் வேலை தேடியோ, வேலை காரணமாகவோ கிளம்பிக் கொண்டிருப்பார்கள்.
எந்தப் பெரிய இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்தவரும் சீமான் வீட்டில் கால் பதித்தவராகவே இருந்தார். அவர்களில் ஒருவராகவே சீமானும் இருப்பார். அவருக்கென்று சிறப்புச் சலுகைகள் ஏதும் அந்த வீட்டில் இருந்ததாக எனக்கு நினைவில்லை.
உணவருந்தும் நேரம் வந்தால் யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்கள் சென்று மளிகைச் சாமான்கள் வாங்கி வருவார்கள். யாரோ சமைப்பார்கள். அப்போது அங்கிருக்கும் யாவரும் உணவு அருந்தலாம். அப்படிப் பலமுறை நான் அங்கு சாப்பிட்டிருக்கிறேன். (எனக்காக, ஸ்பெஷலாக ஐயா சீமான் தன் கையால் சமைத்துப் போட்டதை பின்னொரு பதிவில் சொல்கிறேன்…)
அங்கே வைத்துதான் முத்துக்குமார் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் யார் என்று எனக்குத் தெரியாது. அறிமுகம் இல்லை. ஒடிசலான தேகத்துடன் சின்னப்பையனாக இருந்தார். வந்தால் நிறைய ஜோக்குகள் சொல்வார். சிட்டுக்குருவி ஒன்று வீட்டுக்குள் வந்து செய்தி சொல்லி விட்டுச் செல்வதைப் போல் அதிரடியாக வருவார். கொஞ்சம் பேசி ஜோக்கடித்து விட்டு அவசரமாகச் சென்று விடுவார். ஒருவித பரபரப்புடன் இருந்த அவர் எங்கோ உதவி இயக்குநராக இருக்ககூடும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். (பாலுமகேந்திராவிடம் இருந்ததைப் பின்னால் அறிந்தேன்…)
‘அண்ணனின் நண்பர்’ என்ற மரியாதையுடன் அங்கிருந்த தம்பிகள் என்னிடம் நெருங்கிப் பழகியதில்லை. பார்த்தால் புன்னகைப்பதுடன் சரி. அப்படிப் பலர் இன்னும் கூட பெயர் தெரியாமல் என்னைப் பார்க்கும்போது நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ‘சீமானின் தம்பிகள்’-. அவ்வளவே…
அதே அளவுடன்தான் முத்துக்குமாரும் நானும் பார்த்தால் சிரித்துக் கொள்வோம். அவர் வந்தாலே சிரிப்பு மழைதான். ஒரு கவிஞருக்கான எந்த அடையாளமும் அவரிடத்தில் நான் கண்டதில்லை. அவரை சிரிக்க வைக்கும் ஒரு நபராகவேதான் பார்த்தேன். சிரிக்க வைக்கும் நபர்கள் அபார திறமை உள்ளவர்களாக பொதுப்புத்தியில் அறியப்படுவதில்லை.
அவர் சொன்ன ஒரு ஜோக்கை திடீரென்று நினைத்துக் கொண்டு தனியாளாக நடுச் சாலையில் சிரித்துக் கொண்டிந்தேன் ஒருமுறை. பார்த்தவர்கள் என்ன நினைத்தார்களோ..?
இடையில் நா.முத்துக்குமார் என்ற பாடலாசிரியர் சினிமாவில் பரவலாக அறியப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது கூட அது இவர்தான் என்று எனக்குத் தெரியாது. வெளியே தெரியும் புகழ் வெளிச்சம் எதையும் சீமான் ஐயா வீட்டுக்கு வந்தவர்கள் காட்டிக் கொண்டதில்லை. அதன் பிறகும் வழக்கம்போலவே அவர் வந்து போய்க்கொண்டும், ஜோக்கடித்துக் கொண்டும் இருந்தார். வெளியே ஒரு முத்துக்குமாரை நான் தெரிந்து வைத்திருந்தேன். நேரில் இவரைத் தெரியும். இருவரும் ஒருவர்தான் எனத் தெரியாதிருந்தது வினோத அனுபவம்.
வெளியே பரவலாக அறியப்பட்டிருந்த முத்துக்குமாரின் பேட்டி ஒன்றை தற்செயலாக ஒரு பத்திரிகையில் பார்க்க நேர்ந்து அதில் அவரது படத்தைப் பார்த்து “அட… இந்தத் தம்பியா முத்துக்குமார்…? இவர் இவ்வளவு நன்றாக பாட்டெழுதுவாரா..?” என்று ஆச்சரியப்பட்டேன். அதன்பிறகான சந்திப்புகளில் அவர் மீதான என் மரியாதை கூடியிருந்தது.
அதன் காரணமாகவே அவருடன் நான் பேச ஆரம்பிக்க, அவரும் “அண்ணே…” என்று அன்பு பாராட்ட நட்பு சீமான் ஐயா வீட்டுக்கு வெளியிலும் தொடர்ந்தது.
அவரது உழைப்பும், வளர்ச்சியும் அவரது பரபரப்பு போலவே அசுர கதியில் நடைபெற்றது. முன்னணிப் பாடலாசிரியர்களில் ஒருவராக அவர் இடம்பெற்ற வேளையில் கரு.பழனியப்பனின் திருமணம் அண்ணாநகரில் நடைபெற்றது. அப்போதும் சீமானுடன் அவர் வந்திருந்தார். மணமேடைக்கு செல்லும் வரிசையில் முதலில் சீமான், அடுத்து நான், என் பின்னால் முத்துகுமார் என்று நின்றிருந்தோம்.
எனக்குப் பின்னால் நின்றிருந்ததால் என் காதுகளுக்குப் பின்னால் முடிகள் சில நரைத்திருந்ததைக் கண்ணுற்ற அவர் அவரையறியாமல், முதல்மரியாதை படத்தில் வரும் சிவாஜி சொல்லும் வசனப் பாடலான “காதோரம் நரைச்ச முடி கதை முடிவைக் காட்டுதடி…” என்றதைப் பாடினார். கவிஞராயிற்றே… பட்டென்று அவர் வாயில் ‘சிச்சுவேஷன் சாங்’ வந்துவிட்டது.
பிறகு அதன் பொருள் உணர்ந்து சுதாரித்து, “அண்ணே… அப்படியே மனசுல வந்தது. சொல்லிட்டே. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க…!” என்றார். நான் சிரித்துக் கொண்டேன். நானும் ‘டை’ அடிக்க முடிவு செய்தது அதன் பிறகுதான்..!
அதன்பின் அவரது அலுவலகத்தில் சிலமுறை சந்தித்தித்திருக்கிறேன். அங்கு வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் அவர் பாடல் எழுதிக் கொண்டிருக்கும் படங்களின் பட்டியல் இருந்தன. அது ஒரே நேரத்தில் நூறு படங்களைத் தாண்டியதாக இருந்து பிரமிக்க வைத்தது. அந்தப் பலகையில் எழுத இடமில்லாமல் கீழிருந்து மேலாகவெல்லாம் இருக்கும் இடங்களில் படப்பட்டியல் நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்டிருக்கும். எப்படித்தான் அத்தனைப் பாடல்கள் எழுதினாரோ..?
பாடல்கள் மட்டுமா..? கவிதைகள், நூல்கள், தொடர்கள் மட்டுமல்லாது ஆய்வுக் கட்டுரையும் சமர்ப்பித்து பேராசியராகவும் ஆகி கல்லூரிக்கும் சென்று பாடங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அத்தனைத் துரித வளர்ச்சியை யாரிடத்தும் நான் என் வாழ்வில் கண்டதில்லை. அத்தனை உயரங்கள் தொட்டும் அவர் பழக்கமும் தொடர்பும் எந்த மாறுதலுக்குள்ளாகாமல் இருந்தது. அதுவே அவரை யாராலும் இழக்க இயலாத இடத்தில் வைத்திருந்தது.
அவர் இருந்த காலத்தில் இரண்டுமுறை அவர் மரணித்ததாக வதந்திகள் வந்தன. முதல்முறை பதறிப்போய் அவர் தம்பி ரமேஷ்குமாரிடம் நானும், நண்பர்களும் விசாரித்தோம். அவர் போனில் அண்ணனைத் தொடர்பு கொள்ள முத்துக்குமார் எடுக்காததால் இன்னும் பதற்றம் அதிகமானது. அவரும் பரபரப்புடன் அலுவலகம் சென்று பார்த்து அவர் தூங்கிக் கொண்டிருப்பதாகத் தகவல் சொன்னதும்தான் எங்களுக்கு நிம்மதி வந்தது.
அடுத்த முறையும் அதே போன்ற வதந்தி. என் மனைவி ஆசிரியையாக இருக்கும் பள்ளியில் அப்படிக் கேள்விப்பட்டு என்னிடம் விசாரித்தார்கள். நான் விசாரித்து அது வதந்தி என்றேன். அது எப்படி அவரைப் பற்றி மட்டும் அப்படி வதந்திகள் ஒன்றல்ல, இரண்டுமுறை வந்தன என்பது இப்போதும் புரியவில்லை. மூன்றாவது முறை வந்தபோது அது வதந்தியாக இல்லை.
கடைசி வருடங்களில் அவர் கொஞ்சம் உடல்நலம் குன்றியேதான் இருந்தார். மேடைகளில் பேச வந்தபோது நடையில் சிரமம் இருப்பது தெரிந்தது. பழைய பரபரப்பு இல்லாதிருந்தது தெளிவாகவே தெரிந்தது. ஆனாலும், அவர் தவிர்க்காமல் விழாக்களுக்கு வந்துகொண்டிருந்தார்.
கடைசியாக நான் பார்த்துப் பேசியது ஐயா பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவுக்கு இறுதிமரியாதை செலுத்த முத்துக்குமார் வந்திருந்தபோது. அப்போதுதான் அவரிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். தனக்கு மஞ்சள் காமாலை வந்திருந்ததைச் சொல்லி “இப்போது குணமாகி விட்டது. பிரச்சினை ஒன்றும் இல்லை..!” என்றார் தெளிவாக.
ஆனால், பிரச்சினை தீரவில்லை என்பதை அவர் மறைவுச் செய்தி சொன்னது. அப்போதும் அது வதந்தியாக இருக்காதா என்று மனம் ஏங்கியது.
இருந்த 41 ஆண்டுகளுக்குள் 1500 பாடல்கள் எழுதினார் எனத் தகவல். அத்துடன், கவிதைகள் மற்றும் நூல்கள். இரண்டு தேசிய விருதுகள், அதிகபட்ச பிலிம்பேர் மற்றும் எண்ணற்ற விருதுகள் என்று பரபரப்புக்குக் குறைவில்லாமலேயேதான் இருந்தார்.
அவர் மறைந்தும்கூட வெளியாகும் படங்களில் அவர் எழுதிய பாடல்கள் திடீர் திடீரென்று முளைத்துக்கொண்டே இருப்பது காலத்தை வென்ற கவியாக தம்பி ‘நாகராஜன் முத்துக்குமார்’ இருப்பதைக் காட்டுகிறது.
இப்போதெல்லாம் அவரது ஜோக்குகளை நினைத்தால் எனக்கு சிரிப்பு வருவதில்லை..!
– வேணுஜி