இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 27,892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது.
6185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் எனினும் கொரோனாவின் பாதிப்பு குறையாததால், அறிவித்துள்ளபடி மே 3-ந்தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கப்போவதாக சில மாநிலங்கள் அறிவித்து உள்ள சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் தமிழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் நோய்த்தொற்றின் தாக்கம், பாதிப்புகள் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட்டது. அத்துடன் ஊரடங்கை எப்படி விலக்குவது? கட்டுப்பாடுகளை எப்படி தளர்த்துவது? பொருளாதார நடவடிக்கைகளை எப்படி ஊக்குவிப்பது? என்பது குறித்தும் முதல்வர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான நிதித்தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்றும் முதல்வர்கள் கேட்டுக்கொண்டனர். மாநில நிலவரங்களை கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, விரைவில் புதிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related