தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அஇஅதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்து கூறிவருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், “இது அவரவர்களின் சொந்தக் கருத்து என்றும் கட்சியின் கருத்து அல்ல என்றும் கூறினார். எனினும், இது போன்று பொது வெளியில் கருத்துத் தெரிவிப்பது கட்சியைப் பலவீனப்படுத்தும் … ” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அஇஅதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலைச் சின்னம் என்ற மூன்று தாரக மந்திரங்களை முன்வைத்து செயல்படுவதாகவும் யார் முதலமைச்சர் என்பதை உரிய நேரத்தில் கட்சி முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பிஜேபி தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் சென்னையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாரதிய ஜனதா துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அந்தக் கட்சியின் தேசியத் தலைமையோ தமிழகத் தலைமையோ இது பற்றி எதுவும் கூறாத நிலையில், துரைசாமியின் கருத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
கூட்டணி பற்றி தேர்தல் சமயத்தில் தான் முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே திட்டவட்டமாகக் கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், அஇஅதிமுக என்பது ஒரு வளர்ந்த ஆலமரம் என்றும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அந்த மரம் அழியாது என்றும் ஜெயக்குமார் கூறினார்.
அமைச்சர் ஜெயக்குமாரே திமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக அந்தக் கட்சியினர் சிலர் கூறியிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ” கடல் வற்றினாலும் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் நான் என்றுமே அதிமுகதான்” என்று குறிப்பிட்டார்.
நடிகர் எஸ்.வி. சேகர், தேசியக் கொடியை அவமதித்தது குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி பற்றி அவதூறாகப் பேசியது தொடர்பாகவும் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், சிறைக்குச் செல்லவேண்டும் என்பது எஸ்.வி.சேகரின் நீண்ட நாள் ஆசை என்றும் தேவைப்பட்டால் அரசாங்கம் அவரது ஆசையை நிறைவேற்றி வைக்கும் என்றும் கூறினார்.