November 22, 2024
  • November 22, 2024
Breaking News
August 19, 2022

மேதகு 2 திரைப்பட விமர்சனம்

By 0 569 Views

மேதகு முதல் பாகத்துக்கும் இந்த இரண்டாம் பாகத்துக்கும் தொழில்நுட்ப ரீதியாக தொடர்பு இல்லாவிட்டாலும் முதல் பாகததை நினைவு கூரவே செய்கிறோம்.

முதல் பாகத்தில் 50 களில் தமிழர்கள் அனுபவித்த துன்பங்கள், அதைப் பார்த்து வளர்ந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 21 வயதுக்கு முன்னான வாழ்க்கை சொல்லப்பட்டு இருந்தது. 

இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் இரா.கோ.யோகேந்திரன்.

எதற்காக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் உருவானது..? அதன் நோக்கம் என்னவாக இருந்தது..? அதற்கு தமிழக மக்களும், சில தலைவர்களும் எப்படி ஆதரவு தெரிவித்தார்கள்… போன்ற வரலாற்றை மேதகு 2 தாங்கி வந்திருக்கிறது. 

புலிகளின் தியாக, வீர வரலாற்றை  கௌரவத் தோற்றத்தில் வரும் நாசர் விளக்குவதாக கதை அமைந்துள்ளது.

பிரபாகரன் வேடத்தில் நடித்திருக்கும் கவுரி சங்கர் ஏறக்குறைய அவரது சாயலில் இருக்கிறார். அழுத்தமான நடிப்பால் கவரவும் செய்கிறார். அவரது நடிப்புலக வாழ்வில் இதைவிட மதிப்பு மிக்க வேடம் கிடைக்காது.

தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் அதனால் ஏற்பட்ட இழப்புகள், தியாகங்கள் மட்டுமல்லாது அதற்கு இந்தியப்  பிரதமராக இருந்த இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் சொல்லப்படுகிறது.

குறிப்பாக எம் ஜி ஆர், விடுதலைப் புலிகள் அமைப்பை அழைத்துப் பேசி அவர்களுக்கு பண உதவி அளிக்கும் காட்சி, எப்படி தமிழகம் மட்டுமல்லாது இந்திய அரசும் அவர்களுக்கு பின்புலமாக இருந்தது என்பதை உணர்த்துகிறது.

யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கிய சம்பவம், நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடை பெற்ற கருப்பு ஜூலை கலவரம் – அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாக புலம் பெயர்ந்த துயர நிகழ்வு என்று முக்கியமான வரலாற்று சம்பவங்களைப்  பதிவு செய்திருப்பதைப் பாராட்டலாம்.

இயக்கத்துக்கு இங்கிருந்து உரத்த குரல் கொடுத்த தமிழ்நாட்டுத் தலைவர்களையும் அடையாளம் காட்டி இருப்பது சிறப்பு..!

ஆனால், முதல் பாகத்தைப் போல தொழில்நுட்ப ரீதியான ஆக்கம் இதில் இல்லை சொல்லியே ஆக வேண்டும். முதல் பாகமே குறையுடன் இருந்தத்தைக் குறிப்பிட்டிருந்தோம். அதைவிட குறைவாகவே இதில் இருக்கிறது.

ஒரு உன்னதமான போராளிகளின் வாழ்வை உலகின் கவனத்துக்குக் கொண்டு செல்லும்போது அது உலகத் தரத்தில் இருக்க வேண்டும் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். இதற்கான பொருள் செலவை உலகத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டு வரலாற்று ஆவணமாக இப்படிப்பட்ட படங்களை உருவாக்க முன்வர வேண்டும்.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகளில் இப்படத்தை வெளியிட வாய்ப்பில்லை. ஆனாலும் தமிழ்ஸ் ஓடிடி (tamils OTT) என்கிற புதிய ஓடிடி தளத்தில் இப்படம் காணக் கிடைக்கிறது. ஆனால், வெளிநாட்டு திரையரங்குகளில் இப்படத்தைத் காணலாம்.

மேதகு 2 – மேன்மை தங்கும் வரலாற்றுப் புதினம்..!