March 19, 2024
  • March 19, 2024
Breaking News
April 20, 2019

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனக் கண்ணோட்டம்

By 0 755 Views

கடந்த 40 வருடங்களாக நம் வாழ்வில் காதல், கல்யாணம், காதுகுத்தல், இறுதியாத்திரை என்று சகல நிகழ்வுகளில் மட்டுமல்லாமல் ஊர்ப்பயணங்களிலும் கைகோர்த்து வந்த ஒரே துணைவன் இளையராஜா மட்டும்தான்.

இதை நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்ட இப்படத்தின் இயக்குநர் சரவண ராஜேந்திரன் இசை ஞானி என்ற நடு உளியை அடித்து அதன்மீது எழுப்பிய காதல் கூடாரம்தான் இந்தப்படம்.

முதலில் ஒரு காதல் படத்துக்கான களம் அழகாக அமைந்து விட்டாலே உற்சாகம் தொற்றிக் கொண்டு விடும். அப்படித்தான் இதில் இந்திய சர்க்கஸ் கம்பெனி ஒன்று காதலுக்குக் களமாக, அதுவே படத்தை ரசிக்க ஆரம்பிக்க வைக்கிறது. 90களின் தொடக்கத்தில் நடக்கிறது கதை.

மேற்படி சர்க்கஸ் கம்பெனியின் உரிமையாளர் தன் மகளான ‘மெஹந்தி’யின் பெயரால் அதை நடத்திக் கொண்டிருக்க, அதுதான் ‘மெஹந்தி சர்க்கஸ்’. வட மாநிலத்தைச் சேர்ந்த அந்த சர்க்கஸ் கம்பெனி கொடைக்கானலில் டென்ட் அடிக்க, அங்கே மெஹந்தியைக் காணும் இளையராஜாவின் வெறியனான நாயகன் ‘ஜீவா’வுக்கு காதல் முளைக்க… முன்பாதியில் அவர்களைக் காதல் படுத்தும் பாடும் பின்பாதியில் அந்தக் காதல் படும் பாடும்தான் கதை.

ஆரம்ப காட்சியில் ஹீரோ சரக்கடித்துக் கொண்டிருக்க, இளையராஜாவின் இசையில் பாடலைப் பாடியவர் பெயரை ஒருவர் தப்பாகச் சொல்ல, அவரை ‘அடித்து’த் திருத்தும் ஹீரோ, தொடர்ந்து மற்றவர்கள் கேட்கும் ராஜா பாடல்களின் பாடக, பாடகியர் சந்தேகங்களுக்கெல்லாம் ‘உள்ளேன் ஐயா’ ஸ்டைலில் உடனுக்குடன் தீர்த்து வைப்பது ஜெட் வேக டேக் ஆஃப்..!

‘ஜீவா’வாக புதுமுகம் ரங்கராஜ். ‘மெஹந்தி’யாக ஸ்வேதா திரிபாதி. இருவருமே புதுமுகங்கள் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளாமல் படத்தில் ஒன்ற முடிகிறது.

வயதான தோற்றத்தில் ரங்கராஜ் அறிமுகமாவதால் அவரது இளமைத் தோற்றம் மிகவும் ரசிக்க வைக்கிறது. அசப்பில் இளவயது ரகுமான் போல் தோற்றமளிக்கும் அவர் முறையான அனுபவம் பெற்றால் முன்னவர் போலவே நடிப்பில் பிரகாசிக்க முடியும். கத்தி வீசக் கற்றும் காதலிமீது வீச முடியாமல் தவிப்பதிலும், ‘இனி அவளை இழக்கவே முடியாது’ என்று வரும்போது கண்ணைக் கட்டிக் கொண்டு அதே கத்தியை லாவகமாக வீசுவதிலும் மிளிர்கிறார்.

ஸ்வேதா முதல் பார்வையில் ரங்கராஜைக் கவர்ந்த அளவுக்கு நம்மைக் கவரவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால், போகப் போக கவர்ந்து விடுகிறார். நடிக்க அதிகம் வாய்ப்பில்லாத அவரது கேரக்டரைசேஷனை இன்னும் அழகு படுத்தியிருக்க முடியும்.

வேல ராமமூர்த்தி பாதிரியாராக வந்தாலும் வழக்கமான முறைப்புடன் வருவது எந்த நேரம் யாரைத் தூக்கிப்போட்டு மிதிப்பாரோ என்றே இருக்கிறது. ஆனால், அவருக்கு இன்னொரு முகம் வைத்து ‘காதல் சவுக்கிதாரா’க்கிவிட்டார்கள்.

சரக்கடித்துவிட்டு தன்னிடம் இருக்கும் ஒரு லேடீஸ் வாட்சுக்கு அவர் கொடுக்கும் முத்தம் ‘திடுக்’கிட வைக்கிறது. அவர் சிபாரிசுக் கடிதம் கொடுத்தனுப்பும் வீட்டில் ஒரு பெண்ணும், அவர் மகனும் மட்டும் இருப்பதில் அவருக்கும், அவர்களுக்குமுண்டான தொடர்பு பற்றியும் சந்தேகிக்க வைக்கிறது.

மற்றபடி இந்தக் கதையில் அவர் ஏன் இறக்க வேண்டும் என்பதும் புரியவில்லை.

ஜாதிவெறியரான ரங்கராஜின் அப்பாவாக வரும் மாரிமுத்து வழக்கம்போல நடிப்பில் மிரட்டியிருக்கிறார். இந்த சின்னக் காதல் கதைக்குள்… வரும் சின்ன எபிசோடுக்குள் அவர் திருந்தும் காட்சிகளும் இருப்பது சமூகப்பார்வையில் நல்ல எண்ணமாக இருந்தாலும் கதையோடு ஒன்றாத துருத்தலாகத் தோன்றுகிறது.

பிற படங்களில் நம் வெறுப்பைச் சம்பாதித்த ஆர்ஜே விக்னேஷ் இதில் அங்கங்கே சிரிக்க வைப்பதை ரசிக்க முடிகிறது.

சைலன்ட் வில்லனாக வரும் விகாஷ் ரசிக்க வைக்கிறார். சர்க்கஸில் கத்தி வீசும் வீரராக வரும் அவர் காதலுக்கு வீசும் கத்தியும் கூர்மையாகவே இருக்கிறது. அந்த அமைதியான முகமே வில்லனாகும்போது வேறு மாதிரியாகத் தோன்றுவது சிறப்பு. அவரைப் போலவே மெஹந்தியின் அப்பாவாக வரும் சன்னி சார்லஸும் மனத்தில் பதிகிறார்.

யுகபாரதியின் பாடல்கள் சிறப்பானவை. ஆனால், ‘வெள்ளாட்டுக் கண்ணழகி… என்று நாயகியைப் பார்த்து நாயகன் பாடுவதாக எழுதியிருப்பது பாராட்டா, நையாண்டியா..? உணர்வற்று கொடூரமாக இருக்கும் வெள்ளாட்டுக் கண்களை ஒரு அழகான பெண்ணின் கண்களோடு எப்படி ஒப்பிட முடிந்தது கவிஞரே..?

செல்வகுமாரின் ஒளிப்பதிவு காட்சிக் கவிதைகளாகி விரிகின்றன. நமக்குத் தெரிந்த ஒரு ஊரையே தெரியாத ஊர் போலக் காட்டியிருப்பது அற்புதம். இளையராஜா ஓங்கி ஒலிக்கும் படத்துக்கு இசையமைக்கிறோம் என்று ஷான் ரோல்டன் உணர்ந்தாரா தெரியவில்லை. எந்த மெனக்கெடலும் இல்லாமல் அவருக்கு என்ன வருமோ அதைப் பாடல்களில் இசைத்திருக்கிறார். ஆனால், பின்னணி இசையில் சிறப்பு சேர்த்திருப்பதை மறுக்க முடியாது.

இளையராஜாவின் ‘எடுத்தாண்ட’ இசைக்கு அடுத்தபடியாக ராஜுமுருகனின் வசனங்கள் இந்தப்படத்தின் இரண்டாவது பலமாகியிருக்கின்றன. ஆனால், அவரும் காதல் என்ற ‘உணர்ச்சிக்கு’ அடிமையாகி வசனங்களை எழுதியிருப்பதாகவே தோன்றுகிறது.

தன் தலைக்கு மேலிருக்கும் கத்தியாக ‘கர்த்தரை’ பாதிரியார் வேலராமமூர்த்தி சொல்கிறார். கர்த்தர் ஒரு பாதிரிக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக முடியுமா..? அப்படியானால் விரும்பாமல்தான் அந்த வேலையை அவர் செய்கிறாரா தெரியவில்லை.

காதலின் வலி பற்றிப் பேசும் சர்க்கஸ் குள்ளர் ஒருவர் “எனக்கும் இதயம் ஒரே அளவுதான்…” என்கிறார். காதலுக்கும், இதயத்துக்கும் என்ன சம்பந்தம்..? (இதை வழக்கமான சினிமா எழுத்தாளர் எழுதியிருந்தால் ‘லலலா லலலா…’ என்று பிஜிஎம் போட்டு கைத்தட்டி விட்டுக் கடந்து விடலாம். ஆனால், ராஜு முருகன் போன்ற தேர்ந்த… கான்டெம்பரரி எழுத்தாளர்கள் உணர்ச்சிக்கு அடிமையாகி எழுதும்போது நெருடுகிறது…)

கடைசியில் “பெண்ணின் மனசுல இருக்கிறவன்தான் உண்மையான புருஷன்…!” என்று வரும் ஒரு வசனம் தூக்கி வாரிப் போடுகிறது. ஆனால், தியேட்டரில் கைத்தட்டுகிறார்கள். இதுவும் சினிமா ரசிகனின் உணர்ச்சியைத் தூண்டி விடும் உத்திதான்.

அப்படியானால் தாலி கட்டி காலமெல்லாம் அவளுடன் வாழும் கணவனுக்கு என்ன பொறுப்பு..? யாரைக் காதலித்தாலும் மணமான பின் கணவனை மட்டும் சிந்தையில் ஏந்திக் கொண்டு வாழும் வழக்கம் கொண்ட நம் குடும்பத்துப் பெண்கள் இந்த வசனத்தை ஒத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியுமா ராஜு முருகன்..?

மேற்படி வசனத்துக்குக் கைத்தட்டிய புண்ணியவான்கள் கவனத்துக்கு… வீட்டுக்குப் போய் உங்கள் மனைவிமார்களின் மனதில் யார் இருக்கிறார்களென்று தெரிந்து கொண்டு (அனேகமாக அடி விழும்…) மீண்டும் வந்து இன்னொரு முறை கைத்தட்டுங்கள்…

கதையில் சொல்லப்படுவது போலவே கத்திவீசும் பயிற்சிக்கு ஐந்தாண்டுகள் தேவைப்படும் நிலையில் தன் காதலுக்காக அதை ஐந்தே வாரங்களில் கற்றுக்கொண்ட ஹீரோ, அதை அப்போதே நிரூபிப்பது சரியா அல்லது மும்மடங்கு கால அவகாசத்தில் காதலி இன்னொருவன் மனைவியாக பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்து முடித்தபின் வந்து அதை மெய்ப்பித்து ‘ஹீரோயிஸம்’ காட்டுவது சரியா..?

அம்மாவின் ‘கடைசி’ ஆசைக்காக ஹீரோயினின் மகள் அவளது கடந்தகாலக் காதலனைக் கூட்டி வந்தாலும் அவளது மனதில் அவளைப் பெற்ற அப்பா இடம்பெறவே மாட்டாரா..? பருவம் வந்துவிட்ட அவளுக்கு இனி அப்பாவுமாக அம்மாவின் கடந்தகாலக் காதலனே நீடிக்க முடியுமா..? முக்கியக் கேரக்டரான அந்த மகளின் பார்வையில் கதை கடக்காததும் மேம்போக்கான சிந்தனை.

திரையில் காட்டப்படுவது மட்டுமே காதல் – அந்தக் காதலில் காதலர்களை சேர்த்து வைத்துவிட்டால் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என்ற சாமானிய சினிமா சிந்தனை, அற்புதக் காவியமாகி இருக்க வேண்டிய இந்தப் படத்துக்கு முட்டுக் கட்டையாகி இருக்கின்றது.

அதனாலேயே கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய இந்தப்படம், பாராட்டப்பட வேண்டிய முயற்சியாக மட்டுமே நின்று விடுகிறது.

பாராட்டுகள் சரவண ராஜேந்திரன்..!

(கதை ‘ராஜுமுருகன்’ என்று காட்டுகிறார்கள். அவர் சுஜாதாவின் ‘விரும்பிச் சொன்ன பொய்கள்’ நாவலைப் படித்திருக்க மாட்டார் என்று நம்புவோம்…)

– வேணுஜி