நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முதல்முறையாக இயக்கும் வாய்ப்பு பாரதிராஜாவுக்குக் கிடைத்த போது சிவாஜி கணேசன் வயோதிகத்தின் தொடக்கத்தில் இருந்தார். எனவே அவரை வைத்து வழக்கமான காதல் கதையைப் புனைய முடியாத பாரதிராஜா, வாழ்ந்து முடித்த ஒரு மனிதன் மீது வாழத் தொடங்கிய பெண்ணொருத்தி கொண்ட காதலை ‘முதல் மரியாதை’யாகக் கொடுத்தார்.
அப்போதே அதைக் காதல் என்று சொல்ல அவருக்கே தயக்கமாக இருக்க, அது காதலுக்கும் மேலான புனிதம் என்றெல்லாம் சொன்னார். ஆனால், படம் அந்த நியாயத்தைத் தாங்கி நின்றது. இன்றளவும் அப்படி ஒரு படத்தை நாம் தமிழ்த்திரையில் பார்க்கவில்லை என்றே சொல்ல முடியும். இப்போது எதற்கு அந்தக் கதை என்று கேட்கலாம்.
அதை ஒப்பீடு அளவிலாவது வைத்துக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தை பாரதிராஜாவே இந்தப் படத்தலைப்பில் சூட்டி இருப்பதைப் பாருங்கள். அதாவது, இதுவும் வயது கடந்த ஒருவன் மீது வாழத் தொடங்கிய பெண் வைத்த… வைத்த… (அது காதலா என்று சொல்லவே முடியாத தயக்கம் படத்தில் கடைசி வரை அவருக்கு இருந்தே இருக்கிறது…) உறவைச் சொல்கிற கதையை அவர் இதில் சொல்கிறார்.
காரணம், முதல் மரியாதையில் சிவாஜி கணேசன் இருந்ததைவிட இதில் பாரதிராஜா வயோதிகராக இருப்பதும், அதில் ராதாவை விட இதில் நட்சத்திரா என்ற பேரிளம்பெண் நடித்திருப்பதும் ஆகும். ஆனால், அவர் இந்தப் படத்துக்கு எடுத்துக்கொண்டிருக்கும் லைன் அற்புதமானது.
‘வாழ்க்கை அனுபவம் மிகுந்த ஒரு வயோதிகன், பத்து நாள் நேரும் பயணத்தில் வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் தலைப்பட்ட ஒரு இளம்பெண்ணுக்கு வாழ்வின் மீதான பிடிப்பை ஏற்படுத்துகிறார்…’ என்பதுதான் அது.
அதுவும் ஏறக்குறைய அரை நூற்றாண்டாக கரிசல் காடு, செம்மண் பூமி என்றே கதை சொல்லிப் பழக்கப்பட்டுவிட்ட பாரதிராஜா, இந்த முறை சாம்பல் மண் பூத்த ஐரோப்பிய கான்கிரீட் காடுகளில் நின்று அந்தக் கதையைச் சொல்ல தலைப்பட்டிருக்கிறார்.
இயக்குநர் இமயம் என்றே நாம் கொண்டாடும் அவரது இயக்கம் பற்றி இனிமேல் நாம் விவாதிக்க வேண்டியதில்லை. அதேபோல் ஏகப்பட்ட நடிக, நடிகையரை உருவாக்கிவிட்ட அவரது நடிப்பின் மீதும் நாம் சந்தேகம் கொள்ளவும் தேவையில்லை. ‘இதில் என்ன..?’ என்பது மட்டும்தான் மீதமுள்ள ஒரே கேள்வி.
படம் முழுக்க இவர்கள் இரண்டு பேர் மட்டும்தான். அதுவே பலம் என்று நினைத்திருக்கிறார் பாரதிராஜா. ஆனால், திரைக்கதை சுவாரஸ்யப்பட்டிருந்தால் அவர் நினைத்தது சரியாகவே இருந்திருக்கும்.
தமிழ்நாட்டிலேயே தன் பெயர் ‘வெண்பா’ என்று பெண்ணொருத்தி சொன்னால் கொஞ்சம் புருவம் உயர்த்தி அவளைப் பார்ப்போம். ஆனால், ஆங்கிலம் மட்டுமே புழங்கும் லண்டன் மாநகர வெள்ளை சத்தத்தில் ‘வெண்பா’ என்ற தமிழ்ப்பெயர் கேட்டால் எப்படி பூத்துப் போவோம். முதல் முதலில் அந்தப்பெண்ணின் பெயர் அதுதான் என்று பாரதிராஜாவுக்குத் தெரியவர, ஏதோ கள்ளிக்காட்டில் ‘கருத்தம்மா’ பெயரைக் கேட்டதைப் போல் லேசாக ஒரு முறுவல் பூக்கிறார். அவ்வளவே..!
அதேபோல் போகிற வழியெல்லாம் ஒரு மடத்தலைவர் போல் ஜனனம், மரணம் என்று பேசிக்கொண்டு போகிறாரே தவிர வாழ்வின் மீதான பற்றுதலுக்கென்று அதன் சுவாரஸ்யங்களை எங்குமே சொல்லிப் போகவில்லை அவர். அதில அவரது சொந்தக் கதைகளையாவது சொல்லிக்கொண்டு வந்திருக்கலாம்.
படத்தில் நிமிர்ந்து உட்கார வைக்கும் இரண்டு எபிசோடுகள்… லண்டன் வாழ்க்கை எப்படிப்பட்டது என்று தெரியாமல் பாரதிராஜாவின் மனைவி மௌனிகா தன் பேரனைப் பிடித்துத் தலையில் வலுக்கட்டாயமாக அவனுக்கு எண்ணெய் தேய்த்து தீபாவளிக் குளியலுக்கு ரெடி பண்ண, அவனை பாட்டி ஏதோ டார்ச்சர் செய்வதாக நினைத்து பேத்தி போலீஸுக்கு போன் செய்து, அவர்கள் வந்து பாட்டியைக் காவல் நிலையம் அழைத்துச் செல்வது…
இன்னொன்று… தன் ஓல்ட் ஏஜ் ஹோம் பங்காளி ஜோ மல்லூரியின் அந்திமக் கால விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, அதற்காக பாரதிராஜா மேற்கொள்ளும் பயணம் நட்சத்திராவுக்கு வாழ்க்கையை போதிக்கும் பயணமாக அமைய, அதன் முடிவில் இரண்டு விஷயங்களும் ஒரே புள்ளியில் முடியும் அற்புதம்…
இந்த சுவாரஸ்யங்களுடன் முழுப்படமும் நகர்ந்திருந்தால் தலைப்புக்கு மெத்தப் பொருத்தமாக அமைந்திருக்கும்.
மற்றபடி இங்கிலாந்து, ஸ்காட்லாந்தின் நகரம், கிராமம் என்று பயணப்படும் கதையில் ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவனின் கேமரா பரந்து விரிந்திருக்கிறது. என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் ‘கோடி கோடியாய்…’ பாடலும், அதன் இசையும் வசீகரிக்கின்றன.
ராதா அளவுக்கு மூக்கு, காது உதடுகள் என்று துடித்து நடிப்பது நட்சத்திராவுக்கு சாத்தியமில்லை என்றாலும், ‘முழுப்படத்திலும் அற்புதமான பாடி லாங்குவேஜில் வசீகரிக்கும் அந்த சின்னஞ்சிறு பெண்ணுக்கு ஒரு இளமையான ஜோடியைக் கொடுக்காமல் மொத்த ஸ்பேஸையும் அள்ளிக்கொண்டது நியாயமா இமயமே..?’ என்று கேட்காமல் இருக்கத் தோன்றவில்லை.
இந்த வயதிலும் ரஜினி எப்படி ஆடுகிறார், ஓடுகிறார், பாடுகிறார் பாருங்கள் என்று எப்படி ரஜினி படத்தை இன்னும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ அப்படியே பாரதிராஜாவின் இந்தப்படத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டே கடக்க வேண்டியுள்ளது. ஒரு காட்சியில் யூத்புல்லாக… ஒரு ஸ்டைல் நடை நடக்கும்போது தியேட்டரில் கைதட்டால் பறக்கிறது.
இவ்வாளவும் செய்துவிட்டு கடைசியில் ‘எஞ்சியுள்ள வாழ்க்கையுடன் மீண்டும் சந்திக்கிறேன்…’ என்கிறார் பாரதிராஜா. இந்த மனிதனின் தன்னம்பிக்கையை எந்த ஸ்கேல் கொண்டு அளப்பது..?
மீண்டும் ஒரு மரியாதை – தாத்தாவின் திருமணத்தை ஆல்பத்தில் பார்த்து, அறுபதாம் கல்யாணத்தை வீடியோவில் பார்த்து எண்பது வயது பூர்த்தியை நேரில் பார்த்த நிறைவு..!