இன்றைய சினிமாவில் தமிழ் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்கள்தான் அகில இந்திய அளவில் கோலோச்சுகின்றனர். அவர்களில் ஒருவர் ‘ஸ்டன் சிவா’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று எல்லா முன்னணி ஹீரோக்களுக்கும் சண்டைக் காட்சிகள் அமைத்துப் பெயர் பெற்று வருகிறார்.
இப்போது இவர் நடிகரும் கூட. சின்னச் சின்னதாக கேரக்டர்களில் நடித்து வந்தவர் இப்போது வெளியாகி ஓடிக்கோண்டிருக்கும் விஜய் மில்டனின் ‘கோலி சோடா 2’ படத்தில் வில்லன்கள் மூவரில் முக்கியமானவர்.
மாஸ்டராக சேது, நந்தா, பிதாமகன் என்று வரிசையாக பாலா படங்களில் இவர் அமைத்த சண்டைக்காட்சிகள் இன்றும் நினைவில் நிற்பவை. கமல், கௌதம் மேனன் கைகோர்த்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்துக்கும் இவரே மாஸ்டர். ஆனால், அந்த செட்டில்தான் அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.
ஒரு காட்சியில் நடிக்கும் ஒரு நடிகருக்கு இவர் ஆக்ஷன் காட்சியைச் சொல்லித் தந்ததைப் பார்த்த கௌதம் மேனன், “இந்தக் கேரக்டர்ல நீங்களே நடிச்சுடுங்களேன்..!” என்று சொல்ல “மகிழ்ச்சியில திக்கு முக்காடிப் போனேன்..!” என்கிறார் சிவா.
“காரணம், நடிகனாகனும்கிறது என் நெடுநாளைய கனவு..!’ என்றவர் தொடர்ந்தார்.
ஆனால், ‘கோலி சோடா 2′ படத்தில் இவரை நடிக்க வைத்த விஜய் மில்டன் சொல்லும் காரணம் வேறு. “ஏன்னா சம்பளம் எவ்வளவு ஏது’ன்னு கேட்காம நடிப்பார் இல்லையா..?” என்று ஜோக்கடிக்கும் விஜய் மில்டன் சொன்ன உண்மைக் காரணம், “நான் அஸிஸ்டன்ட் கேமராமேனா இருந்தப்ப இவர் அஸிஸ்டன்ட் மாஸ்டரா இருந்தார். அப்பவே அபாரமா ஆக்ஷன் காட்சிகள் வைப்பார். அவரும், நானும் ஒண்ணாவே வளர்ந்ததுல ஒரு புதுமுக வில்லன் தேவைப்பட்ட இடத்துல இவர் பொருத்தமா இருந்தார்…” என்பதுதான்.
“கோலி சோடா 2’வில இவரைப் பார்த்த என் நண்பர் ஒருத்தர் இவரை ஹீரோவா வச்சு படமெடுக்கணும்னு ஒத்தக் கால்ல நிக்கிறார்..!’ என்று ஒரு காம்ப்ளிமென்ட்டையும் போட்டுவிட்டுப் போனார் விஜய் மில்டன். இப்போது வளர்ந்து வரும் இன்னொரு படத்திலும் மெயின் வில்லனாக நடிக்கிறாராம் ‘ஸ்டன் சிவா.’
“கோலி சோடா 2′ படத்துல ‘சீம ராஜா’ன்னு பேர் வச்சு சிவகார்த்திகேயனை சீண்டிட்டீங்களே..?” என்றால் “அது விஜய் மில்டன் படம் ஆரம்பிச்சப்ப வச்ச பேர். அதுக்குப் பின்னாடிதான் சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘சீம ராஜா’ டைட்டில் அனௌன்ஸ் பண்ணினாங்க..!’ என்கிறார்.
சொல்ல முடியாது. சீக்கிரமே சிவகார்த்திகேயனுக்கும் வில்லனாக ஆனாலும் ஆவார்..!