எப்படியாவது காசு சேர்க்க வேண்டும் என்கிற ஆசையில் நாயகன் கவின் ஒரு டிடெக்டிவாக பேர் பண்ணிக்கொண்டு அதை வைத்து பிளாக் மெயில் செய்து சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்.
அதேபோல் இன்னொரு பக்கம் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் பெண்களை வைத்து வியாபாரம் செய்யும் ஆண்ட்ரியா சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக திடீர் எம் எல் ஏ வாக மாறிய பவன், எதிர்வரும் தேர்தலுக்காக மக்களுக்கு கொடுக்க வேண்டிய 440 கோடி ரூபாய் பணத்தை ஆண்ட்ரியாவை நம்பி ஒப்படைக்கிறார்.
சூப்பர் மார்க்கெட் பிசினஸ் வழியாக அதை எளிதாக பட்டுவாடா பண்ண முடியும் என்று அவர் நினைப்பது அதற்குக் காரணம்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக எம்ஆர் ராதா மாஸ்க் அணிந்த சிலர் அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் துப்பாக்கி சகிதம் நுழைந்து அந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுகிறார்கள்.
அந்த விஷயம் போலீசுக்கு போனால் பிரச்சனையாகிவிடும் என்பதால் பிரைவேட் டிடெக்டிவாக இருக்கும் கவினிடம் பணத்தை கண்டுபிடிக்கும் வேலையை ஒப்படைக்கிறார் ஆண்ட்ரியா.
ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் அதிர்ஷ்டவசமாக ஒரு பங்கு கவினிடம் வந்து சேர்ந்திருக்க… மீதிப் பணத்தை கவின் கண்டுபிடித்தாரா, அந்த கொள்ளைக்கான பின்னணி என்ன என்பதெல்லாம்தான் மீதிக் கதை.
கவின் வழக்கம்போல வருகிறார். வழக்கம் போல நடிக்கிறார். வழக்கம் போல டுபாக்கூர் வேலைகள் செய்கிறார்.
அந்தக் கொள்ளைக்கு சம்பந்தமில்லாதவராக இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட இடங்களில் எல்லாம் அவர் அதிர்ஷ்டவசமாக அல்லது துரதிஷ்டவசமாக மாட்டிக் கொள்வதை ரசிக்கலாம்.
ஆண்ட்ரியாவை இத்தனை குளோசப்பில் இதுவரை யாரும் காட்டியதில்லை. அதனால் அந்த முகத்தில் அழகுக்கு மீறிய ஆபத்து இருப்பதை இந்தப் படத்தில் கண்டுகொள்ள முடிகிறது.
அரசியல்வாதி பவனும் அவர் வழக்கப்படியே வந்து வில்லத்தனம் செய்கிறார்.
ருஹானி சர்மா வரும் காட்சிகள் எல்லாம் வண்ணமயமாக இருக்கின்றன. ஆனால் அவரது முடிவை ரசிக்க முடியவில்லை.
இவர்களுடன் சார்லி, கல்லூரி வினோத், அர்ச்சனா ஆகியோர் நடிப்பும் கதைக்கு உதவுவதையும் ரசிக்கலாம். அதிலும் அர்ச்சனாவின் பேராசை சிரிக்கவும் வைக்கிறது.
ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவைப் பார்த்து பல காலம் ஆகிறது. அந்தக் குறையை தன் வண்ணமயமான ஒளிப்பதிவின் மூலம் இதில் நிறை செய்திருக்கிறார் அவர்.
ஜிவி பிரகாஷின் இசையும் படத்துக்கு பலம் தான். ஆனால் ஒலிப்பதிவு அங்கங்கே மேலும் கீழுமாக போய் வருவதை கவனித்திருக்கலாம்.
அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் அருமையான ஒரு லைனை பிடித்து அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதையும் அமைத்திருக்கிறார். ஆனால் “கதைதான் ஹீரோ… கதாநாயகன் அல்ல…” எனும்படியான கிளைமாக்ஸ் காட்சிகள் ஹீரோயிசத்தை குறைக்கின்றன.
மாஸ்க் – வஞ்சகர் உலகம்..!
– வேணுஜி