யானை வளர்க்கும் நாயகர்களை பற்றிய கதைகள் சமீபத்தில் தமிழ் படங்களில் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் எதிலும் பழங்குடியினராக வரும் விமல் ஒரு யானையை வளர்க்கிறார். அதன் பெயர்தான் சேனா.
அந்த யானைக்கு திடீரென்று மதம் பிடித்து காட்டுக்குள் சென்று விடுகிறது.
இது ஒரு புறம் இருக்க விமல் வசிக்கும் பகுதியில் இருக்கும் மலை கிராமத்து கோவிலில் யாழ் ஈஸ்வரன் சிலையை வனத்துறை அதிகாரி கபட முறையில் களவாட நினைக்கிறார்.
காட்டுக்குள் போன யானையே விமல் கண்டுபிடித்தார் மற்றும் களவு போகவிருக்கும் சிலையை அவர் காப்பாற்ற முடிந்ததா என்பதெல்லாம் படம் சொல்லும் விஷயங்கள்.
விமல் கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக வந்து போகிறார். பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக நடித்திருப்பவர் அதற்காக சிறிதும் மெனக்கெடாமல் வழக்கம் போல் நடிக்க தெரியாமல் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, வீர பெண்ணாக கம்பீரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்தாலும், வீரத்தை வெளிக்காட்ட வேண்டிய காட்சிகளில் அடங்கிப் போகிறார்.
யோகி பாபு வரும் காட்சிகளில் நகைச்சுவை எடுபடவில்லை. வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், வழக்கம் போல் கோமாளித்தனமாக நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் கபிர் துஹான் சிங், கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அல்ஃப்ரெட் ஜோஸ், காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சுபாங்கி ஜா, விமலின் மகளாக நடித்திருக்கும் சிறுமி இலக்கியா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.டி.ஆர், காட்சிகளை படமாக்கிய விதம் படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு, படத்திற்காக செய்யப்பட்ட செலவுகளை திரையில் காட்டியிருக்கிறது.
இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். உதய் பிரகாஷ் U P R-ன் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
மூன்று விதமான கதைகளை கொண்ட திரைக்கதையை பெரும் தடுமாற்றத்துடன் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன்,
எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன், தான் சொல்ல வந்ததை தெளிவு இல்லாமல் சொல்லியிருப்பதோடு, காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் சரியான முறையில கையாள தவறியிருக்கிறார்.
தலைப்பு மற்றும் கதைக்களம் கவனம் ஈர்த்தாலும் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வனின் திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் எந்தவிதத்திலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க வில்லை.