November 24, 2024
  • November 24, 2024
Breaking News
June 3, 2024

முடி திருத்தும் கலைஞராக வரும் விஜய் சேதுபதி எதைத் தேடுகிறார் – மஹாராஜா சுவாரஸ்யங்கள்

By 0 175 Views

ஆச்சு… இப்போதுதான் சேது உள்ளே வந்தது போல் இருக்கிறது… சேது என்கிற விஜய் சேதுபதி தன்னுடைய அரை சதத்தை சினிமாவில் நிறைவு செய்கிறார்.

அவரது 50 ஆவது படமாக வெளிவருகிறது நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் அமைந்த ‘மஹாராஜா.’ 

பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்த ‘குரங்கு பொம்மை’ பட இயக்குனர்தான் நித்திலன் சுவாமிநாதன்.

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ’காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். 

இப்படத்தில் நாயகியாக மம்தா மோகன்தாஸ், இயக்குநர் பாரதிராஜா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, அருள்தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட நடிக நடிகையர் நடித்திருக்கிறார்கள். 

குரங்கு பொம்மை படம் தந்த வெற்றி, இந்தப் படத்தின் டிரைலரையும் மிக எதிர்பார்க்க வைத்தது. அதற்கு ஏற்றாற் போல் ட்ரெய்லரில் விஜய் சேதுபதி லட்சுமி என்கிற யாரையோ அல்லது ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கிறார். அது நம் அதிகபட்ச எதிர்பார்ப்பை உறுதி செய்கிறது.

ஜூன் 14 ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் மற்றும் நாயகி மம்தா மோகன்தாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நித்திலன் பேசியதிலிருந்து…

“இந்தப் படத்தை நான் இயக்க முடிவானபோது  சேது அண்ணனின் 50 வது படம் என்று தெரியாது. படப்பிடிப்பு தொடங்கிய போது தான் தெரியும். அனைத்து படத்தையும் கவனமாகவே செய்தாலும் சேது அண்ணனின் 50 வது படம் என்பதால்  பொறுப்பு கூடியிருக்கிறது. 14 முறை ஸ்கிரிப்ட்டை மாற்றி மாற்றி சுவாரஸ்யப் படுத்தினேன்.

படத்தில் அவர் ஒரு சாதாரண மனிதனாக படிப்பறிவு அற்றவராக வருகிறார். அவர் வாழ்க்கையில் ஏதோ ஒன்றைத் தேடிப் போகும் போது அதன் மூலம் தான் யார்? என்பதை அவர் தெரிந்து கொள்கிறார் என்பதுதான் கதை.

“லட்சுமி யார்?” என்ற சஸ்பென்ஸ் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பயணிக்கும். ஆனால், அதைச் சுற்றி மேலும் பல சுவாரஸ்யங்கள் சஸ்பென்ஸாக படத்தில் இருக்கின்றன. சேது அண்ணனும் படத்தைப் பார்த்தார், அவருக்கு படம் மிகவும் பிடித்திருப்பதுடன், படத்தில் தன்னையும் பிடித்திருப்பதாகச் சொன்னார்

படத்தில் அவர் பெயர்தான் மஹாராஜா. முடி திருத்தும் கலைஞராக அவர் வருகிறார்.  வாழ்க்கையில் நாம் நிறைய பேரை சந்திப்போம், அதில் சிலர் நம் மனதுக்கு நெருக்கமாக இருப்பார்கள். அப்படி நான் பார்த்த மனிதர்களைக் கொண்டுதான் அப்படி ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தேன். மற்றபடி முடி திருத்தும் தொழில் பற்றியோ சாதி பற்றியோ படத்தில் எதுவும் பேசவில்லை..!

டிரைலரில் நான் காட்டி இருப்பது 20 சதவீதம் தான், மீதி 80 சதவீதத்தை படத்தில் பார்த்து ரசிக்க முடியும்..!”

நடிகை மம்தா மோகன் தாஸ் பேசியதிலிருந்து…

“நான் மலையாளத்தில் பிஸியாக இருப்பதால் தமிழில் அதிக படங்கள் நடிக்க முடியவில்லை. இடையில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்துக்காக அழைத்தார்கள். ஆனால், அந்தப் படப்பிடிப்பின் தேதிகள் தள்ளிப் போனபோது என்னால் தேதிகளை ஒதுக்க முடியாமல் அந்தப் படத்தில் நடிக்க இயலாமல் போனது. 

மஹாராஜா படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்ததால் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறேன். விஜய் சேதுபதியின் படங்கள் பலவற்றைப் பார்த்து அவரது நடிப்பை ரசித்திருக்கிறேன். அவருடன் நடிக்கப் போகிறோம் என்ற போது மகிழ்ச்சியுடன் நடிக்க ஒத்துக் கொண்டேன்.

படத்தில் ஆஷிபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தை சுற்றி நிறைய சஸ்பென்ஸ் இருப்பதால் இப்போதைக்கு இது பற்றி இவ்வளவுதான் சொல்ல முடியும்.

இந்தப் படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது என்னுடைய கேரக்டர் பற்றி மட்டும் தன் சொன்னார். ஆனால் நான் இப்போது முழுப் படத்தையும் பார்த்தபோது அதில் எனக்கு திருப்தி ஏற்பட்டு இருக்கிறது. படத்தின் சஸ்பென்ஸ் கடைசி வரை குறையாமல் இருக்கிறது எல்லோரும் இந்த படத்தை ரசிக்க முடியும்..!”

ரசித்து விட்டால் போச்சு..!