பெரிய பட்ஜெட் படங்கள்தான் இரண்டாவது பாகம் தயாரிக்க வேண்டுமா, சின்ன பட்ஜெட் படங்களால் முடியாதா..? என்று களமிறங்கி இருக்கிறார் இயக்குனர் திருமலை.
அதற்கு அவர் எழுதி இருக்கும் கதையும் சிறியதுதான்.
இளமை துடிப்புள்ள மூன்று இளம் ஜோடிகள் காட்டுப்பகுதிக்கு தனிமையில் இருக்க சுற்றுலா செல்கிறார்கள். அங்கே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் டெண்டுகள் அடித்து தங்க, அந்த இடத்தில் மர்மமான முறையில் அமானுஷ்யத்தில் சிக்குகின்றனர்.
இளஞ்ஜோடிகள் என்பதால் அவர்களின் இளமை கொண்டாட்டத்தையும், அழகையும் பார்வையாளர்களுக்கு விருந்தாக்கி விட்டு அவர்களுக்கு பிரச்சினை தருவது எது..? என்பதை இரண்டாம் பாகத்தில் விளக்குவதாக சொல்லி முதல் பாகம் முடிக்கிறார் அவர்.
காட்டுக்குள் செல்லும் இளஞ்ஜோடிகளுக்கு வழிகாட்டியாக சுமன் ஷெட்டி நடித்திருக்கிறார். அவர் அகால மரணம் அடைவது அதிர்ச்சி.
இதில் நடித்திருக்கும் மூன்று ஜோடிகளும் அவரவர் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
படத்துக்குள் வரும் பிளாஷ்
பேக் எபிசோடு நெகிழ வைக்கிறது. சாமி கும்பிட போன இளம் ஜோடிக்கு ஏற்படும் பயங்கரம் அதிர வைக்கிறது.
விஜய் வில்சன் மற்றும் எம்.கண்ணன் ஒளிப்பதிவு காட்டை சுதந்திரமாக சுற்றி வளைத்திருக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் கவிஞர் விவேகா, ஏக்நாத், சொற்கோ ஆகியோரின் பாடல் வரிகள் கவனிக்க வைக்கின்றன.
பின்னணி இசை பயமுறுத்தும் விதமாக அமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு நன்றி சொல்லும் முகமாக அவரையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து விட்டார் இயக்குனர் திருமலை.
விவேக் சுப்ரமணியன் வசனம் கதைக்கு மிகாமல் பயணித்திருக்கிறது. அங்கங்கே வசனங்கள் லிப் சிங்க் இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பதை தவிர்த்து இருக்கலாம்.
ஒரு சிறிய பட்ஜெட்டுக்குள் இளைஞர்களைக் கவர எப்படி படம் எடுக்கலாம் என்று புரிந்து வைத்திருக்கும் திருமலை சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் போல் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வைத்திருப்பாரோ..?
மான் வேட்டை – நடுங்க வைக்கும் இன்ப சுற்றுலா..!