ஏதோ நகைச்சுவைப் படம் போல் ஒரு தலைப்பைக் கொண்டிருந்தாலும் படு சீரியஸான கதை சொல்லும் படம் இது. அதிலும் பணப்பரிவர்த்தனை தொடர்பாக என்னென்ன தந்திரங்கள், தில்லுமுல்லுகள் இருக்கின்றனவோ அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைக்கிற படமாக இதை நமக்கு அளித்திருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி.
சமீபகாலத் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் துல்கர் சல்மானை இந்தப் படம் உண்மையிலேயே லக்கி பாஸ்கர் ஆகியிருக்கிறது எனலாம்.
எண்பதுகளில் இருந்து 90கள் வரை பயணப்படும் இந்தக் கதையில் துல்கர் சல்மான் வங்கி காசாளராக வேலை செய்கிறார். ஆனாலும் தன் பெரிய குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற கடனாளியாகவே இருக்கிறார். இந்நிலையில் லாபம் சம்பாதிக்க அநேக திறமைகள் இருந்தும் முதலீடு இல்லாமல் அவஸ்தைப் படும் ராம்கியின் நட்பு கிடைக்க, வங்கிப் பணத்தை திருட்டுத்தனமாக அவரிடம் முதலீடு செய்து இருவரும் லாபம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் முடிவு என்ன ஆனது என்பது மீதிக் கதை.
கதை நடக்கும் காலகட்டத்திற்கு ஏற்ற கெட்டப்பில் வரும் துல்கர் ஆரம்பம் முதலே உற்சாகமாக இருக்கிறார். நடுத்தெருவில் வைத்து வட்டிக்காரன் அவமானப்படுத்திவிட அது தாளாமல் வங்கிப் பணத்தில் கைவத்து வெளியில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க ஆரம்பிக்கும் அவரது செயல் அவரளவில் நியாயமாகவே படுகிறது.
கையில் பணம் புழங்க ஆரம்பித்ததும் ஒரு பணக்காரன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி மாமதையுடன் நடந்து கொள்ள ஆரம்பிப்பவர், ஒரு கட்டத்தில் தன்னிலை உணர்ந்து நிதானமாகி விடுவது ஆறுதல் அளிக்கிறது. இந்த உணர்வு நிலை மாறுபாடுகளை மிக நேர்த்தியாகத் தன் நடிப்பில் காட்டி இருக்கிறார் துல்கர்.
துல்கர் மனைவியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி கணவனின் நிஜ முகம் தெரியும் கட்டத்தில் அதிர்ச்சியை நன்றாகவே வெளிப்படுத்துகிறார்.
நீண்ட இடைவெளி விட்டு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ராம்கி படத்தின் திருப்பத்துக்கு முக்கிய காரணியாக உதவுகிறார் . ஏதோ ஓரிடத்தில் அவர் வில்லனாக மாறி வடுவார் என்று நினைத்தால் கடைசிவரை நல்லவராக இருப்பதும் இயக்குனரின் நேர்மறை சிந்தனை.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அடையாளம் தெரியவில்லை. என்றாலும், பின்னணி இசை படத்தின் களத்தையும் காலத்தையும் நியாயப்படுத்தி இருக்கிறது.ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, எண்பதுகளின் காலத்துக்கு நம்மை ஒரு டைம் ட்ராவலே அழைத்துச் சென்று இருக்கிறார்.
படத்தில் பெரும்பாலும் செட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.
தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்ய ஆரம்பித்து விடும் துல்கர் ஏதோவொரு இடத்தில் சிக்கிக் கொள்வார் என்ற பதை பதைப்புடனே படம் நகர்கிறது. ஆனாலும் அத்தனை தவறுகளையும் தாண்டி தன்னைத் திருத்திக் கொள்வதில் துல்கரின் செயல்களை நியாயப்படுத்தி விடுகிறார் வெங்கி அட்லூரி.
படம் ஆரம்பித்து அரை மணி நேரத்துக்கு ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பது அசுவாரஸ்யத்தை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு வேகம் பிடிக்கிறது திரைக்கதை.
பணக்காரர்கள் ஆக பணத்தை எப்படி எல்லாம் கையாளலாம் அல்லது கையாடலாம் என்று சொல்லித் தருகிற படம்.
லக்கி பாஸ்கர் – மச்சக்காரன்..!
– வேணுஜி