பெண்ணியம் என்ற பெயரில் முன்பெல்லாம் சமுதாயத்துடன் ஒத்து வராத ஆதிக்க மனம் படைத்த பெண்களைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
அதிலிருந்து விலகி உண்மையான பெண்ணியம் என்றால் என்ன… ஒரு பெண்ணின் சக்தி எத்தகையது என்பதை நாம் நன்கு அறிந்த… நம்முடன் வாழ்ந்து வருகிற சாமானிய பெண்களின் மூலமே இப்போதெல்லாம் காட்டி வருவது ஆரோக்கியமான திருப்பம்.
அந்த வகையில் மலையாள சினிமா மூலம் இங்கு வந்திருக்கும் ஒரு சாமானியப் பெண்ணின் சக்தியைக் சொல்லும் படம் இது.
கேரளத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் 100 நாள் வேலை திட்டத்திற்கு பெண்களை ஒருங்கிணைப்பது, தொழில் முனைவோருக்கு வட்டிக்கு கடன் கொடுப்பது, இதெல்லாம் தாண்டி எங்காவது ஷூட்டிங் நடந்தால் அதில் நடிக்க துணைப் பாத்திரங்களை தயார் செய்து அனுப்புவது உள்ளிட்ட ஆல் இன் ஆல் அழகு ராணியாக வலம் வருகிறார் ஜகதம்மா என்கிற ஊர்வசி.
ஏழாம் கிளாஸ் மட்டுமே படித்தாலும் எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை என்று வளைய வருபவர்.
சங்கங்கள் செய்யும் வேலையை இவர் ஒருவரே செய்து விடுவதால் அவர்களது பகைமைக்கு ஆளாகி நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். அதற்கு முறையிட பஞ்சாயத்து தலைவர் அலுவலகத்திற்கு போனால் அவர்களும் கதவை சாத்த, இன்னொரு கதவு அவருக்காக திறக்கிறது.
அந்த பஞ்சாயத்து தலைவர் மரணம் அடைய அதற்கான தேர்தல் வருகிறது. இங்கும் ஒரு சிக்கல். இருபெரும் தேசியக் கட்சிகள் அந்தப் பதவிக்கு வேட்பாளர்களை நிறுத்த சுயேச்சையாக அதற்குப் போட்டியிடுகிறார் ஊர்வசி.
பலத்த போட்டிக்கிடையில் இவர் வென்று விட்டாலும் ஆதிக்க சக்திகள் சும்மா இருக்குமா..? அவருக்கு பல்வேறு வகையிலும் நெருக்கடி கொடுக்கிறார்கள். அதை அவர் எப்படி சமாளித்தார்? நினைத்தது போலவே மக்களுக்கு அவரால் நன்மை செய்ய முடிந்ததா என்பதெல்லாம்தான் மீதிக் கதை.
தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பான படபடப்புத் தனம் கலந்த அப்பாவிப் பெண்ணாக ஊர்வசி ஜொலித்திருக்கிறார். தன்னுடைய பாத்திரப்படைப்பை உணர்ந்து ஒவ்வொரு இடத்திலும் மற்றவர் நலனுக்காக அவர் வரிந்து கட்டிக்கொண்டு செய்யும் வேலைகள் வழக்கம் போலவே ரசிக்க வைக்கின்றன.
இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் கவர்ந்ததால்தான் இதில் நடிக்க ஒத்துக் கொண்டதுடன் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மாறி இருக்கிறார் ஊர்வசி என்பதும் புரிகிறது.
திருமணம் செய்து கொள்ளாத ஊர்வசியின் உடன்பிறவா தம்பியாக நடித்திருக்கும் கலேஷ் ராமானந்த், பாத்திரப் படைப்பிலும் சரி அவரது நடிப்பிலும் சரி… ரொம்பவே கவர்கிறார்.
இவர்களுடன் பிற பாத்திரங்களில் நடித்திருக்கும் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ராஜேஷ் சர்மா, ஜெயன் சேர்த்தலா, கலாரஞ்சினி, கிஷோர், ஜிபின் கோபிநாத், நோபி, வி.கே.பைஜு, ரேஷ்மி அனில், ஷைலஜா அம்பு, அஞ்சலி சத்யநாத் உள்ளிட்ட அனைவருமே தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
கேரள கிராமங்களில் எப்படி ஷாட் வைத்தாலும் நன்றாகத்தான் இருக்கும் என்றாலும் ஒளிப்பதிவாளர் அனில் நாயர் அழகியல் ஒருபுறமும் படத்தின் பரபரப்பு மறுபுறமும் ஆக உணர்ந்து படமாக்கி இருக்கிறார்.
கைலாஸ் மேனனின் பின்னணி இசையும், அந்த பரபரப்புக்கு துணை போவதாக அமைந்திருக்கிறது.
வழக்கமாகவே அரசியல் களம் சார்ந்த படங்களை எடுப்பதில் கேரள இயக்குநர்கள் வல்லவர்கள். அதில் இந்தப் பட இயக்குநர் ஷிவாஸ் விதிவிலக்கு இல்லை.
என்றாலும் ஒரு பெண்ணை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்திருப்பதில் வித்தியாசப்படுகிறார். துருத்திக் கொண்டு தெரியாமல் சமூகத்துக்கான செய்திகளை போகிற போக்கில் அதுவும் நகைச்சுவையாக தூவிக் கொண்டே போவதில் இயல்புத் தன்மை கெடாமல் படத்தை ரசிக்க முடிகிறது.
எல் ஜகதம்மா – ஜகஜால கில்லாடிம்மா..!
– வேணுஜி