தலைப்பைப் பார்த்தால் ஏதோ குழந்தைகளுக்கான படம் போல் தோன்றும். அதை மெய்ப்பிப்பதைப் போல் குழந்தைகள் தான் முக்கிய பாத்திரங்களையும் ஏற்று இருக்கிறார்கள்.
ஆனாலும் இது குழந்தைகளுக்கான படமாகத் தெரியாமல், அரசியல் நிகழ்வுகளை – குறிப்பாக… தமிழகத்து அரசியல் நிகழ்வுகளை நையாண்டி செய்திருக்கும் படமாக இருக்கிறது.
தமிழகத்தை ஆளும் கட்சியில் முதல்வராக இருக்கிறார் செந்தில். அவர் கட்சியைச் சேர்ந்த யோகி பாபு மற்றும் சுப்பு பஞ்சுவுக்கு இடையில் ஒரு பனிப்போர் இருந்து வருகிறது.
இந்த நிலையில் யோகி பாபுவின் மனைவி வயிற்றில் பிறந்த சிறுவன் இமயவர்மன், மற்றும் பானி பூரி விற்கும் பெண்ணிடம் சரசம் செய்யப் போய் அவளுக்கு பிறந்த அத்வைத் இருவருக்கும் யோகி பாபுவின் அரசியல் ரத்தமே ஓடுவதால் பள்ளியில் படிக்கும் இருவருமே ஒருவருக்கொருவர் சலிக்காமல் ‘அக்னி நட்சத்திரமா’க பள்ளியில் நடக்கும் பள்ளி மாணவர் தேர்தலில் வென்று அரசியல் செய்யத் துடிக்கிறார்கள்.
இமயவர்மனை தோற்கடிக்க அத்வைத், அதே பள்ளியில் படிககும் பிராமணச் சிறுமியான ஹரிகா பெடடாவைத் தேர்தலில் நிற்க வைக்கிறான்.
எதிரும் புதிருமாக இருந்த இருவரில் யார் வென்றார்கள் என்பது கதைக்களம்.
சிறுவர் சிறுமியரை சுற்றி நடக்கும் கதையாக இருப்பதால் யோகி பாபு போன்ற ஒரு நட்சத்திரம் இருந்துவிட்டால் படத்துக்கு பலமாக இருக்கும் என்று அவரை முன்னிலைப்படுத்தி விட்டார் இயக்குனர் என் .சங்கர் தயாள்.
யோகி பாபு எப்போது கால்ஷீட் கொடுக்கிறாரோ அப்போதெல்லாம் அவரை வைத்துப் படத்தை எடுத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. அவர்கள் எதிர்பார்த்தபடி யோகி பாபு படத்துக்கு பலமாகவே இருக்கிறார்.
உண்மையில் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் இமயவர்மனும் அத்வைத்தும் கூட சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
வேக வைத்துத் தோல் உரித்த பொட்டேட்டோ போல அழகாக இருக்கிறார் சிறுமி ஹரிகா பெடடா. அவரது அப்பாவாக வரும் பருத்திவீரன் சரவணனை ஒரு பிராமணராக ஏற்க முடியவில்லை.
செந்தில் காமெடி செய்திருப்பதை விட அவரை ரொம்பவும் காமெடியாக சித்தரித்திருக்கும் அவரது கதாபாத்திரம் கொஞ்சம் ஓவர்தான் . தமிழக முதல்வராக இருக்கும் அவருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல் சித்தரித்து இருக்கிறார்கள்.
இவர்களுடன் சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, வையாபுரி உள்ளிட்டோர் பிற பாத்திரங்களை நிறைவு செய்திருக்கிறார்கள்
சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் அமைந்த பாடல்கள், பின்னணி இசையும், ஜெ.லக்ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவும் ஓகே ரகம்.
அரசியல் நையாண்டிப் படம் என்பதால் அரசியலை ஒரு அளவுக்கு மேல் ஓவராகவே நையாண்டி செய்து இருக்கிறார் இயக்குனர் என்.சங்கர் தயாள்.
இறுதியில் இரு சிறுவர்களும் பெரியவர்களாகி என்னவாக ஆகிறார்கள் என்பதெல்லாம் அளவுக்கு மிஞ்சிய கற்பனை. அவர்கள் தயவால் யோகி பாபு இந்திய குடியரசுத் தலைவராகவே ஆகிறார். இதுவே பெரிய காமெடிதானே..?
குழந்தைகள் முன்னேற்றக் கழகம் அரசியல் படம் என்பதால் மைக் செட்டுடன் போகத் தேவையில்லை – சிரிக்க வேண்டும் என்கிற மைன்ட் செட்டுடன் போனாலே போதும்..!
– வேணுஜி