தமிழில் அனிமேஷன் படங்களின் முயற்சி எப்போதோ நடக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம்.
அப்படி ஒரு முயற்சியை 7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மணவியான அகஸ்தி உருவாக்கியிருப்பது அதைவிட ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றைக் கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும் வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல் பெரியவர்களும் அவர்களை எப்படி நடித்த வேண்டும் என்பதையும் சொல்கிறது படம்.
கதை இதுதான்…
கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் எனும் இருவர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்வதுடன் இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. குப்பனுக்கு சட்டி போன்ற வித்தியாசமான தோற்றத்துடன் மகன் பிறக்கிறான்.
இரண்டு குழந்தைகளுக்கும் முறையே சட்டிஸ்வரன், குண்டேஸ்வரன் என்று பெயர் சூட்டுகிறார்கள். குண்டானும், சட்டியும் தங்களது அப்பாக்களை போலவே நண்பர்களாக இருக்கிறார்கள்.
மற்றவர்களின் கேலிகளுக்கு வருத்தப்படாமல் நன்றாக படிக்கிறார்கள். அவர்களது கிராமத்தில் கோவில் நிலத்தை வைத்திருக்கும் பண்ணையார், அதிக வட்டி வசூலிக்கும் சேட்டு, பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரி என மூவரையும் புத்திசாலிதனமாக ஏமாற்றுகிறார்கள்.
இருவரும் செய்யும் சேட்டைகள் குப்பனுக்கும், சுப்பனுக்கும் தெரியவர குண்டானையும், சட்டியையும் மூங்கில் மரத்தில் கட்டி ஆற்றோடு விடுகிறார்கள். ஆற்றோடு போனவர்கள் என்ன ஆனார்கள் என்பது மீதிக் கதை.
கதை எழுதி தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த அனிமேஷன் படத்தை இயக்கியதாகச் சொல்லும் அகஸ்தி எதிர்காலத்தில் மிகச் சிறந்த அனிமேஷன் பட இயக்குனராக வர வாய்ப்பு இருக்கிறது.
அரங்கன் சின்னதம்பியின் திரைக்கதை வசனம் பாடல்கள் இந்த சிறுவர் படத்துக்கு பொருத்தமாக இருக்கின்றன.
அனிமேஷன் செய்தவர்களின் கைகளுக்கு மோதிரம் போடலாம். ஆற்றுக்குள் தண்டனைப்பயணம் போகும் குண்டான் சட்டியின் ஒரு நாள் கழிவதை வெயில் மற்றும் இருள் பரவும் காட்சிகளில் காட்டி அற்புதப்படுத்தி இருக்கிறார்கள்.
எம்.எஸ்.அமர்கீத்தின் இசையில் குண்டான் சட்டி பாடல் குதூகலத்துடன் ஒலிக்கிறது. பின்னணி இசை இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம்.
பி.எஸ்.வாசுவின் படத்தொகுப்பும் பலே..!
மகள் அகஸ்தியின் திறமை அறிந்து படத்தைத் தயாரித்திருக்கும் டாக்டர் எஸ்.ஏ.கார்த்திகேயன் பாராட்டுக்குரியவர்.
குழந்தைகளோடு பார்க்கக் கூடிய படம்…
குண்டான் சட்டி – குழந்தைகளின் லூட்டி..!