April 29, 2024
  • April 29, 2024
Breaking News
October 12, 2023

சமாரா திரைப்பட விமர்சனம்

By 0 472 Views

வரிசையான காட்சிகளில் கதை சொல்லும் யுக்திகளை மாற்றி ‘நான் – லீனியர்’ எனப்படும் ஒழுங்கற்ற காட்சிகளை அமைத்துக் கதை சொல்வது ஒரு பாணி. அதில் உச்சம் இந்தப் படம் என்று சொல்லலாம்.

இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் ஓரிடத்தில் பனிமலையில் சில உடல்கள் சிதறிக் கிடக்க அங்கே விசாரணைக்கு வருகிறார் காவல்துறை அதிகாரி ரகுமான்.

அதற்குப் பின் 60களில் பெர்லினில் நடந்த சில காட்சிகள் நாடகம் போல் காட்டப்படுகின்றன அந்த காட்சியில் வெறி பிடித்தது போல் நடந்து கொள்ளும் சிலரை கூண்டில் அடைத்து ஹிட்லரின் உத்தரவின் பேரில் எரித்துக் கொல்கிறார்கள்.

இவை இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அதே இமாச்சலப் பிரதேசத்தில் புதிதாக வரும் ஒரு பயணி சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து கொள்கிறார்.

இன்னொரு பக்கம் உடல் முழுவதும் தீயால் வெந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் பாலியல் தொழிலாளி ஒருவரை அழைத்து இச்சையை தீர்த்துக் கொள்ள முனைகிறார். ஆனால் மனசாட்சி உறுத்த அவர் அதைச் செய்யவில்லை. மாறாகப் பணம் வாங்க மறுத்த பாலியல் தொழிலாளி மீது அவரது கருணைப் பார்வை விழுகிறது.

இப்படி ஒவ்வொன்றுக்கும் தொடர்பில்லாத காட்சிகளாக கிட்டத்தட்ட முன்பாதிப் படம் முழுவதும் ஓடிவிட என்னதான் சொல்ல வருகிறார் இயக்குனர் சார்லஸ் ஜோசப் என்று யோசிக்கையில் இடைவேளை வந்து விடுகிறது.

ஆனால், இரண்டாவது பாதிப் படத்தில் அத்தனைக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி இந்தியாவின் மீது நடக்கவிருந்த ஒரு ‘பயோ வார்’ எனப்படும் ‘உயிரித் தாக்குதல் போரை’த் துல்லியமாக மற்றும் ஆராய்ச்சி பூர்வமாக சொல்லி முடிக்கிறார் இயக்குனர்.

ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் பகைவர்கள் மீது பயன்படுத்த ஹெச்.டி.டபிள்யூ என்ற வைரஸை சோதித்துப் பார்க்கும்போது அதன் விளைவு மிகக் கொடூரமாக இருப்பதால் அந்த சோதனைக்கு உள்ளானவர்களை எரித்துக் கொல்ல உத்தரவிடுகிறார் ஹிட்லர்.

உலகையே பயமுறுத்திய ஹிட்லரையே அச்சம் கொள்ள வைத்த அந்த வைரஸ் பாதுகாக்கப்பட்டு இப்போது இந்தியாவின் மீது ஏவ அனுப்பப்படுகிறது. அந்த பயோ வார் நடந்ததா, அதை ரகுமான் தடுத்தாரா என்பதுதான் படத்தின் சாரம்.

இது போன்ற கண்டிப்பான காவல் அதிகாரி வேடங்கள் ரகுமானுக்குப் பொருந்துவது போல் மற்ற எந்த நடிகருக்காவது பொருந்துமா என்று தெரியவில்லை. அதற்குக் காரணம் அவரது அபாரமான நடிப்புத் திறமைதான். கடைசி வரை அவர் என்ன பதவி வகிக்கிறார் என்பது இமாச்சல பிரதேச போலீசுக்கு தெரியாதது போலவே நமக்கும் தெரியவில்லை.

படத்தில் நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்தும் இன்னொரு நடிகர் உடல் முழுதும் வெந்த புராஸ்தட்டிக் மேக்கப் போட்டுக்கொண்டு நடித்திருக்கும் பினோஜ் வில்லியாதான். அந்தப் பனிப் பிரதேசத்தில் எப்படித்தான் இப்படி ஒரு கொடூரமான ஒப்பனை இட்டுக்கொண்டு நடித்தாரோ..?

இந்த ஆக்சன் திரில்லர் கதைக்குள் ஒரு பாசமான உணர்ச்சியையும் வைத்திருக்கும் இயக்குனரின் திறமை பாராட்டத்தக்கது. குண்டுவெடிப்பில் உடல் முழுவதும் வெந்து போன பினோஜை விட்டு மகளுடன் மனைவி விட்டுப் பிரிந்து போக, மகள் மீதான ஏக்கத்தில் இருக்கும் அவருக்குப் பின் பாதி படம் முழுவதும் மகளுடனேயே இருக்க நேர்கிறது.

பினோஜின் மகளாக நடித்திருக்கும் சஞ்சனா தீபும் வயதுக்கு மீறிய திறமையுடன் அற்புதமாக நடித்திருக்கிறார். அந்த அழகான பெண்ணுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விட அதன் விளைவுகளில் நாம் பதறிப் போக நேர்கிறது.

நடிகர் பரத்துக்கு ஆச்சரியமான ஒரு வேடம் இடைவேளைக்குப் பிறகுதான் அறிமுகம் ஆகிறார் என்றாலும் அவரது பாத்திரமில்லாமல் இந்தக் கதையே இல்லை.

அற்புதமான இந்தி நடிகரான தினேஷ் லம்பாவுக்கு சாதாரண ஒரு வேடம் கொடுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவு பனி மலை எங்கும் பரந்து விரிந்து படம் நெடுக நிறைந்து இருக்கிறது. தீபக் வாரியரின் பாடல்களுக்கான இசையை விட கோபி சுந்தரின் பின்னணி இசையே படத்தின் உணர்ச்சியை அற்புதமாகக் கடத்தி இருக்கிறது.

ஒரு ஆங்கிலப் படம் பார்த்த அனுபவத்தை தந்திருக்கும் இந்த படத்தின் வசனங்கள் பெரும்பாலும் டெக்னிக்கலாக இருப்பதால் அதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. அதை இன்னும் எளிதாக புரிய வைக்க முயற்சி செய்திருக்கலாம்.

லொகேஷனும், படப்பிடிப்பும் அத்தனை அற்புதம்.

பனிக்காட்டுக்குள் ஓநாய்க் கூட்டத்தை காவல்துறை துரத்திப் போகும் காட்சி திரில்லானது.

இந்தப் பட இயக்குனர் சார்லஸ் ஜோசப்பை நம்பி நம் முதல் நிலை ஆக்ஷன் ஹீரோக்கள் தாராளமாக தேதிகளை ஒதுக்கலாம். அப்படி ஒதுக்கினால் நல்ல அனுபவங்கள் நமக்குக் கிடைக்கக்கூடும்.

இருந்தாலும் தொடர்பில்லாத முதல் பாதிப் படத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் முழுமையாக ரசித்திருக்க முடியும்.

சமாரா – தேசம் பாதி… பாசம் மீதி..!