November 21, 2024
  • November 21, 2024
Breaking News
December 15, 2023

கூச முனிசாமி வீரப்பன் டாகுமெண்டரி சீரிஸ் விமர்சனம்

By 0 329 Views
இந்தியாவெங்கும் பிரபலமான வனக் கொள்ளையன் வீரப்பனின் வரலாற்றை பலரும் திரைப்படமாகவும், டிவி தொடராகவும் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
 
ஆனால் அவை யாவுமே வீரப்பனைப் பற்றிக் காதால் கேட்டதும், பத்திரிகைகளில் படித்ததுமான விவரங்களுடன் அவரவர்களுடைய கற்பனையை சேர்த்து உருவாக்கப்பட்ட புனைவுகளே ஆகும்.
 
ஆனால் இப்போது ஜி5 தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரிஜினல் டாக்குமென்டரி சீரிஸான ‘கூச முனிசாமி வீரப்பன்’ தொடர்தான் உண்மையிலேயே வீரப்பனைப் பற்றிய முழுமையான உண்மையான தகவல்களைக் கொண்ட தொடராகும்.
 
காரணம் வீரப்பன் யார், அவன் எப்படி இருப்பான் என்று தெரியாத காலகட்டத்தில் அவனை உலகுக்கு முதல் முதலாக தெரிவித்த பெருமை நக்கீரன் கோபாலையே சேரும். நக்கீரன் இதழ்தான் முதல் முதலில் வீரப்பனைப் பற்றிய புகைப்படங்களையும் உண்மையான தகவல்களையும் வெளியிட்டது.
 
பல தருணங்களில் வீரப்பனை நேரில் சென்று சந்தித்த நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் வெளியிட்ட தரவுகளே வீரப்பனைப் பற்றிய உண்மைக்கு சான்றாக அமைந்தன. அதில் அவர் காட்டுக்குள் வீரப்பனை எடுத்த வீடியோக்களும் அடங்கும்.
 
அந்த ஒரிஜினல் வீடியோக்களுடன், நக்கீரன் கோபால், வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள், வீரப்பனைப் பற்றிய தகவல் சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள், பாதிக்கப்பட்ட மக்களின் நியாயத்துக்குப் போராடிய வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்ற பலரது நேரடியான பேட்டிகளுமாக இடம் பெற்றுள்ள இந்த டாக்குமென்டரி தொடரே வீரப்பனைப் பற்றி உருவான அக்மார்க் தொடர் என்று சொல்லலாம்.
 
ஆறு எபிசோடுகளாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தொடர் கூச முனிசாமி வீரப்பன் தொடரின் முதல் பகுதியாக விரிகிறது. இதன் அடுத்த பகுதி விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.
 
மற்ற தொடர்களில் வீரப்பனாக யாரோ ஒரு நடிகர் வேடம் தரித்து நடித்திருப்பார். ஆனால் இந்தத் தொடரில் நிஜ வீரப்பனே நம்முடன் பேசுவதாக அமைந்திருக்கும் இந்த வீடியோ பேட்டிகள் நம்பகமானவையாகவும் வீரப்பனின் எண்ண ஓட்டங்களை நம்மால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் அமைந்திருக்கிறது.
 
நக்கீரன் கோபாலே சொல்வது போல், இது வீரப்பனைப் புகழ்ந்து சொல்வதற்காக தயாரிக்கப்பட்ட தொடர் அல்ல- வீரப்பன் வேட்டையில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு பல அரசுகள் மாறியும் இன்றுவரை நியாயமான நிவாரணம் கிடைக்காமல் இருப்பதால் அவர்களுக்கு உரிய நிவாரணம் பெறும் விதத்தில் நீதி கேட்டு உருவாக்கப்பட்ட தொடர் என்றே இதனைக் கொள்ளலாம்.
 
வனத்தில் இருக்கும் மக்களை அரசு இயந்திரம் எவ்வாறு துன்புறுத்துகிறது என்பதைப் பற்றி பல படங்களிலும் புனைவுகளாகப் பார்த்து கண்ணீர் சிந்தி இருக்கிறோம். ஆனால் இதில் காட்டப்பட்ட அத்தனை நிகழ்வுகளும் உண்மையானவையாகவே இருக்க அந்த மக்கள் சிந்திய ரத்தமும், கண்ணீரும் நம்மை நிலைகுலைய வைக்கின்றன.
 
அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று போலீஸ்காரப்பிலும், வெளியானதை விட கொடுமையாக நடந்தேறியது என்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் சமூக போராளிகள் சொல்வதையும் கேட்கும் போது நமக்கு பகீர் என்று இருக்கிறது.
 
ஒரு டாகுமென்டரி தொடர் என்றால் கொஞ்சம் அசுவாரசியத்துடன்தான் நாம் பார்க்க நேரிடும். ஆனால் மிகச்சிறந்த ஒரு வணிகப் படத்துக்கு ஈடான வகையில் இதன் உண்மைக் கதையே அமைந்திருப்பதால் விறுவிறுப்பாக சென்று முடிகின்றன 6 எபிசோடுகளும்.
 
உண்மையான வீடியோக்களுடன் அங்கங்கே காட்சிகளாக சேர்க்கப்பட்டிருக்கும் படங்களும் கூட இயல்புக்கு மிகாமல் அமைந்திருப்பதில் இந்தத் தொடரின் இயக்குனர் சரத் ஜோதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
 
அதேபோல் இந்தத் தொடரை தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் நக்கீரன் கோபாலின் மகள் பிரபாவதியின் தீரத்தையும் பாராட்டியாக வேண்டும்.
 
இந்தத் தொடரில் வீரப்பன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி கூறிய கருத்துக்கள் பரபரப்பானவையாக இருக்கின்றன. அதேபோல் கலைஞர் கருணாநிதி பற்றி வீரப்பன் கூறியிருக்கும் கருத்துக்களும் கவனிக்கத்தக்கவை.
 
அத்துடன் ரஜினி பற்றி வீரப்பனின் அபிப்பிராயம் அத்தனை துல்லியமாக இருக்கிறது. எங்கோ காட்டுக்குள் மறைந்து திரிந்த ஒரு கிராமத்து மனிதனால் எப்படி எத்தனை துல்லியமாக அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளைப் பற்றி சொல்ல முடிந்திருக்கிறது என்பது மிகப் பெரிய ஆச்சரியம்.
 
ஓரிடத்தில் மலையாள சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை பற்றியும் நடிகர்களுக்கு வாக்களிக்கும் தமிழக மக்களின் மனநிலை பற்றியும் கூறி இருப்பது நம்மை நிறையவே யோசிக்க வைக்கிறது.
 
ஜெயசசந்திர ஹாஷ்மி, பிரபாவதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து உருவாக்கி உள்ள இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.