December 2, 2024
  • December 2, 2024
Breaking News
December 15, 2023

FIGHT CLUB திரைப்பட விமர்சனம்

By 0 207 Views

நமக்கு நன்றாகவே பழக்கப்பட்ட சென்னையின் பூர்வ குடிகள் வாழும் பகுதியில் நடக்கும் கதைதான். ஆனால் உறியடி விஜயகுமார் நாயகனாக நடிக்க, லோகேஷ் கனகராஜ் வெளியிடுவதால் பரபரப்பில் பற்றிக்கொண்ட படம்.

அரசியல் ஆதாயத்திற்காகவும் பண பலத்துக்காகவும் அவினாஷ், ஷங்கர் தாசுடன் சேர்ந்து போதை வஸ்துகளை விற்றுக்  கொண்டிருக்க, இளைய சமுதாயத்தை திருத்தி நல்வழிப்படுத்த தனக்குத் தெரிந்த குத்துச்சண்டை மற்றும் கால்பந்து வீரர்களாக மாற்ற ஆசைப்படுகிறார் அவினாஷின் அண்ணன் கார்த்திகேயன் சந்தானம்.

சிறு வயதிலிருந்தே அவரைப்போல ஆக வேண்டும் என்கிற ஆசையில் அவரை தன் குருவாகவே ஏற்று வளர்கிறார் நாயகன் விஜயகுமார்.

ஒரு கட்டத்தில் தம்பி அவிநாஷின் அடாவடி வேலைகள் பொறுக்காமல் கார்த்திகேயன் சந்தானம் கண்டிக்க, அவிநாஷும் சங்கர்தாசும் சேர்ந்து அவரை கொன்றுவிடுகின்றனர். இதில் அவிநாசி ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு சங்கர் தாஸ் அரசியல்வாதியாகிறார்.

ஜெயிலில் இருந்து திரும்பிய அவினாஷ், தன்னை ஏமாற்றிய சங்கர் தாசை பழிவாங்க, நேரடியாக களத்தில் இறங்காமல், ஃபுட்பால் ப்ளேயர் ஆக வேண்டும் என கனவோடு சுற்றித் திரியும் நாயகன் விஜய்குமாரைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் காரியம் சாதிக்கப் பார்க்கிறார்.

இறுதியில் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.

அப்பாஸ் ரஹ்மத்தின் இயக்கத்தில் தொழில்நுட்ப நேர்த்தி படத்தைத் தூக்கிப் பிடிக்கிறது. இன்டர்வல் ப்ளாக் இரண்டாம் பாதியின் மீதான நம்பிக்கை கொடுக்கிறது. எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இரண்டாம் பாதி சரியான ஆக்சன் ட்ரீட்.

தமிழ் சினிமாவில் தனுசுக்கு பிறகு பள்ளி, கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் அட்டகாசமாகப் பொருந்திப்போகிறார் விஜய்குமார்.  ஆக்ரோஷமான இளைஞராக, சண்டைக்காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

மோனிஷா மோகன் காதல் காட்சிகளுக்கான கேமியோவில் வந்து செல்கிறார். இரண்டாம் பாதியில் அவரை ஆளையே காணவில்லை.

கார்த்திகேயன், சங்கர் தாஸ், அவினாஷ், சரவண வேல் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இளையராஜாவின் ‘என் ஜோடி மஞ்ச குருவி’ பாடலின் துள்ளலிசையை அத்தனை அழகாக பயன்படுத்தி காட்சிகளுக்கு வித்தியாசமான பின்னணி இசையமைத்து படத்தின் வேகத்தை கூட்ட உதவி இருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.

ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார் லியோன் பிரிட்டோ. இவர்கள் இருவருடன் சேர்ந்து, படத்தை தரமாக வடிவமைத்ததில் எடிட்டர் கிருபாகரனின் பங்கு முக்கியமானது.

கோவிந்த் வசந்தா – லியோன் பிரிட்டோ – கிருபாகரன் சேர்ந்து படத்தை தரத்தை தூக்கிப்பிடித்து இருக்கிறார்கள்.

பெரும்பாலும் புதுமுகங்கள் என்றாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு படத்துக்கு பலம்.

படம் முழுவதும் சண்டையாகவே போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் தலைப்புக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

மட்டுமல்லாமல் டெக்னிக்கல் விரும்பிகளுக்கும் இந்த படம் சுவையான விருந்து.

பைட் கிளப் – ஆக்சன் மேளா..!