படத்தின் தலைப்பைப் பார்த்தால் பாக்கெட் நாவல் தலைப்பு போல இருக்கிறதா..? கிட்டத்தட்ட கதையும் பாக்கெட்டில் வைக்கும் துண்டுப் பேப்பர் அளவுக்கானதுதான்.
தன் மூன்று சகோதரிகளுக்கு மணமுடித்து அவர்களுக்கு ஒரு நல்வாழ்க்கையை ஏற்படுத்திவிட்டு பின் துபாய் சென்று விடுகிறார் நாயகனாக வரும் யுவன் பிரபாகர்.
அங்கே சம்பாதித்த பணத்துடன் சொந்த ஊருக்கு செல்வந்தராக வருகிறார். தங்கள் வாழ்க்கையை சீராக அமைத்துக் கொடுத்த அண்ணனுக்கு சகோதரிகள் ஒரு பெண்ணைப் பார்த்து மணமுடித்து வைக்கிறார்கள்.
மணமான ஒரே வாரத்தில் மனைவி அவரை விட்டு பிரிந்து காதலனுடன் சென்று விட்டதாக அவர் சொல்ல, உடன் இருப்பவர்கள் அதை நம்புகிறார்கள். ஆனால், அவரது கொழுந்தியாள் மட்டும் அதை நம்ப மறுக்கிறாள். ஏனென்றால் அக்கா ஒழுக்கமானவள் என்பது அவளுக்குத் தெரியும்.
இதே நேரத்தில் இன்னொரு பக்கம் யுவன் பிரபாகர், தங்கள் கணவர்களுக்கு துரோகம் செய்யும் பெண்களாகப் பார்த்து மாறுவேடத்தில் சென்று அவர்களைக் கொல்கிறார். இதன் முடிவு என்ன ஆனது என்பது மீதிக் கதை.
நடிப்பின் மீது தீராக் காதல் கொண்டிருப்பார் போல, யுவன் பிரபாகர். என்ன வந்தாலும் வரட்டும் என்று அவரே பணம் போட்டுப் படமெடுத்து கதாநாயகனாக நடித்தும் விட்டார்.
அவர் பணம், அவர் படம் இதில் நாம் கருத்து சொல்ல என்ன இருக்கிறது..?
சமந்து, ஜெயா இருவரும் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரஞ்சன், பிரேம் ராஜ், பிரபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்
இவர்கள் எல்லோருமே புதுமுகங்களாக இருக்க இவர்களுடன் தெரிந்த முகங்களும் வேண்டும் என்பதற்காக அம்பானி சங்கர், பெஞ்சமின், கராத்தே ராஜா , போண்டாமணி ஆகியோரைப் படத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார் கதை எழுதி இயக்கியிருக்கும் பிரபு.
இந்திரஜித்தின் இசையும், செந்தில் மாறன் ஒளிப்பதிவும் பட்ஜெட்டுக்கு ஏற்றாற் போல் பக்குவமாகப் பங்களித்து இருக்கின்றன.
கதையாகக் கேட்பதற்கு பரவாயில்லையே என்று இருக்கும் இந்தப் படம் செய் நேர்த்தியில் சற்று பின்னடைவு பெற்றிருப்பதன் காரணம் பட்ஜெட்டும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிக நடிகையரின் அனுபவமின்மையும்தான்.
யுவன் பிரபாகர் படத்தில் போட்டு தள்ளும் பெண்கள் எல்லாம் அவருடன் துபாயில் வேலை பார்த்த நண்பர்களின் மனைவிகள் தான். அவர்களில் ஒரு பெண் கூடவா உத்தமியாக இல்லை என்ற கேள்வி நம் மனதில் எழ அதையே ஒரு வசனமாக்கி அவரை விட்டுப் பேசவும் வைத்து விட்டார் இயக்குனர்.
திரைத்துறை அனுபவத்தை முறையாகப் பெற்று அடுத்த படத்தில் இவர்கள் பரிமளிப்பார்கள் என்று நம்பலாம்.
இருந்தாலும் நூற்றுக்கணக்கான படங்கள் படமாக்கப்பட்டு இன்னும் வெளியாகாமல் தேங்கிக் கிடக்கும் வேளையில், எழுதிய கதையைப் படமாக்கி தியேட்டர் வெளியீடு வரை கொண்டு வந்திருக்கும் இவர்களின் தன்னம்பிக்கையையும், முயற்சியையும் பாராட்டியே ஆக வேண்டும்.
இந்தப் படத்தின் படி பார்த்தால் சம்பாதிப்பதற்காக தொலைதூரம் செல்பவர்கள் எல்லாம் வீட்டில் சர்வைலன்ஸ் கேமராவைப் பொருத்திவிட்டு தான் செல்ல வேண்டும் போல் இருக்கிறது.
கொலை தூரம் – சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு..!