தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது முதுமொழி. அப்படி கவுன்சிலர் ஆகி அரசியல் குறுக்கீடுகளால் தன் கிராமத்துக்கு நல்லது செய்ய முடியாமல் போன தாய், தான் மகனை ஐ ஏ எஸ் ஆக்கி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கிறார்.
குட்டி பாய்ந்த அந்த 16 அடி என்ன என்பதுதான் கதை.
எரிந்த சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை உயிர் பிழைக்கும் என்பார்கள். அந்த வகையில் கர்ப்பிணியான கவுன்சிலர் தாயை சதிகாரர்கள் உயிரோடு எரிக்க, அந்த வேதனையில் பிறக்கிறார் நாயகன் விஜய் ஆன்டனி.
ஒரு உயிர்தான் தப்பும் என்ற நிலையில் தாயையும் பிழைக்க செய்கிறது அவர் பிறந்த நம்பிக்கை.
இன்று இருக்கும் உச்ச நட்சத்திரம் யாராக இருந்தாலும் இப்படி ஒரு அறிமுகம் கிடைத்தால் விட்டுவிட மாட்டார்கள். அங்கே ஜெயிக்கிறது இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனின் நம்பிக்கை.
ஆனால், இப்படி ஒரு அறிமுகத்துக்கு விஜய் ஆண்டனி தாங்குகிறாரா என்பதுதான் கேள்வி.
நெருப்பில் பூத்த பீனிக்ஸின் கோபமும் ஆற்றலும் எப்படி இருக்கும்? அப்படி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் “எங்க வீட்டு சாவி உங்க வீட்ல கொடுத்துட்டு போனாங்களா..?” என்று கேட்கும் பக்கத்து வீட்டு அங்கிள் போலவே வருகிறார் அவர்.
எந்த இடத்தில் கோபம் கொள்ள வேண்டுமோ அங்கே இல்லாமல் எங்கே பொறுமை காக்க வேண்டுமோ அங்கே காக்காமல் தப்பு தப்பாக செய்து இலக்கை கோட்டை விட்டு, பின் கிடைத்த படிப்பினையில் இன்னும் உயரம் போகிறார் என்கிறது திரைக்கதை.
கூலி வேலை செய்ய ஊரு விட்டு ஊர் வருபவர் கூட தாயை ஒண்டியாக ஊரில் விட்டு விட்டு வர மாட்டார். அதுவும் சமூகக்கடமை ஆற்றவும் தாயின் சபதத்தை நிறைவேற்றவும் வரும் விஜய் ஆன்டனி இப்படியா தாயை ஒற்றையில் விட்டுவிட்டு சென்னை வருவார்..? அது மட்டுமல்லாமல் அவரை எரித்த சதிகாரர்கள் அதே ஊரில் பழி தீர்க்க அலையும்போது..?
இதுபோன்ற லாஜிக்குகளை திரைக்கதையில் நேர் செய்திருந்தால் காலத்துக்கும் பேசப்பட்டிருக்கும் படமாக இருந்திருக்கும்.
அதேபோல விஜய் ஆண்டனிியை அடுத்த உயரத்துக்கு கொண்டு செல்லத்தக்க படம் இது. அவர் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமே..?
நடனம், ஆக்ஷன், காதல், நடிப்பு எல்லா இடங்களிலும் அவர் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும். அல்லது அவர் இயல்புக்கு தோதான கதைகளில் அவர் நடிக்க வேண்டும்.
இன்னும் மாணவன் போல தோற்றமளிக்கும் விஜய்யே கல்லூரி பேராசிரியராக வரும்போது, இவர் கல்லூரியில் படிக்கிறார் என்பது நம்பும்படியாக இல்லை.
அவரை எப்படியாவது காதலில் வீழ்த்தவென்றே ஆத்மிகா வருகிறார். வேறு ஏதும் வேலை இல்லை அவருக்கு.
படத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வில்லன்கள். அதில் கே.ஜி.எப் வில்லன் தோற்றத்திலேயே பயமுறுத்தி மிரட்டி இருக்கிறார். சூப்பர் சுப்பராயன், சூரஜுடன் நல்ல கேரக்டர்களில் மட்டுமே நாம் அறிந்த பூ ராமுவும் வில்லனாக வருவது ஆச்சர்யம். அவரும் கொடுத்த வேலையில் பொருந்தி இருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் அம்மாவாக வரும் திவ்ய பிரபாவின் நடிப்பைச் சொல்லியாக வேண்டும். நேர்த்தியான நடிப்பு அவருடையது.
படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அதனை இயக்குனர் இலகுவாகக் கையாண்டுள்ளார்.
ஒரு கவுன்சிலரின் அதிகாரம் என்ன, அவர் பதவியால் என்னவெல்லாம் நன்மை செய்ய முடியும் என்ற உண்மையும், அப்படி செயல்பட்டால் விளையும் நன்மைகளையும் மக்களுக்கு செலவிடும் பணத்தின் வெளிப்படைத் தன்மை போன்ற விஷயங்களிலும் பாராட்ட வைக்கிறார்.
திரைக்கதையில் மட்டும் தடுமாறாமல் இருந்திருந்தால் படத்தை இன்னும் ரசித்திருக்க முடியும். அந்த முதல்வர் மேட்டர் ஏற்கனவே நாம் சுயேச்சை எம் எல் ஏவில் பார்த்தது.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். ஆனால், ஹரீஷ் அர்ஜுனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து அதை நேர் செய்து இருக்கிறது. என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு நேர்த்தி.
அர்ஜுன் ஒரு நாள் முதல்வர் ஆனது போல் விஜய் ஆண்டனியை பத்து நாள் முதல்வர் ஆக்கி அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர். இன்னும் ஐந்து ‘ ரீல் ‘ நீண்டிருந்தால் அவர் பிரதமராகவும் ஆகி இருக்கக் கூடும்.
கோடியில் ஒருவன் – ஒரு தாயின் சபதம்..!