March 19, 2024
  • March 19, 2024
Breaking News
September 16, 2021

டிக்கிலோனா திரைப்பட விமர்சனம்

By 0 399 Views
முன்பெல்லாம் ஹீரோக்கள் என்றால் போலீஸ் கதையில் நடித்தாக வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருந்தது. எல்லா ஹீரோக்களும் ஒரு படத்திலாவது போலீஸாக வந்தார்கள். கொஞ்ச காலத்துக்கு முன்பு அந்த விதி ஹீரோக்கள் என்றால் சிக்ஸ் பேக் வைத்தாக வேண்டும் என்று மாறி எல்லோரும் கிராபிக்ஸிலாவது சிக்ஸ் பேக் வைத்தார்கள். இது டைம் டிராவல் சீசன். 
 
டைம் ட்ராவல் செய்ய கால யந்திரத்தில் ஏறி கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் செல்லும் டிரெண்டில் சந்தானம் இப்போது அந்த யந்திரத்தில் நுழைந்திருக்கிறார். 
 
ஹாக்கி வீரராக வேண்டும் என்று நினைத்து வந்த சந்தானம், பெரியதாக ஜெயிக்க முடியாததால் மின்சார வாரியத்தில் லைன் மேனாக வேலை பார்த்து வருகிறார். 2020 ஆம் ஆண்டில் தான் காதலித்த பெண்ணையே கைப்பிடித்தாலும் திருமண வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருப்பதால் விரக்தியில் வாழ்ந்து வருகிறார்.
 
இந்த நிலையில், 2027ஆம் ஆண்டு ஒரு இடத்தில் மின்சாரப்பழுதை சரி செய்யப்போக அங்கே ஒரு அறிவியல் கூடம் இருப்பதைக் கண்டுபிடித்து அங்கே கால யந்திரம் இருக்கும் நிலையில் அதில் ஏறி கடந்த காலத்துக்குப் பயணப்படுகிறார். அவரது நோக்கம் 2020 ஆம் ஆண்டுக்கு சென்று தன்னுடைய திருமணத்தை தடுத்து நிறுத்தி அதன் மூலம் இப்போதைய விரக்தி வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றுவது.
அது முடிந்ததா என்பதை தன் நகைச்சுவைப் பாணியிலேயே சொல்லி இருக்கிறார்.
 
படம் முழுக்க அலட்டிக் கொள்ளாமல் தன் வழக்கமான பாணியிலேயே நடித்திருக்கிறார் சந்தானம். பல் இடங்களில் சிரிக்கவும், சில இடங்களில் சறுக்கவும் வைக்கிறது அவரது நகைச்சுவை. ஹீரோக்கள் இளைக்கலாம்தான். அதற்காக இப்படி தனுஷைவிட இளைத்ததில் சந்தானத்தின் கண்களில் ஜீவனே இல்லாமல் இருக்கிறது.
 
கதாநாயகிகளாக அனகா, மற்றும் ஸ்ரின் காஞ்வாலா. அவர்களில் அனகா கொஞ்சம் கூடுதல் அழகா.
 
மின்சார ஷாக்கில் யோகிபாபு, ஐன்ஸ்டீன் ஆவது நல்ல காமெடி. ஆனந்த் ராஜ் மற்றும் முனிஸ்காந்த் நகைச்சுவை படத்துக்கு பலம் சேர்க்கிறது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்தப்படத்தில் நடித்திருப்பதும் சுவாரஸ்யம்.
 
பெரிய நடிகர்களை வைத்து சீரியஸாக டைம் டிராவல் கதையை இயக்குவதே கடினம் என்றிருக்க, இயக்குனர் கார்த்திக் யோகி சந்தானத்தை வைத்து அதுவும் காமெடியாக  திரைக்கதையை கையாண்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். ஏற்கனவே நாம் பார்த்த பல டைம் டிராவல் கதைகள் நினைவுக்கு வந்து போவதைத் தவிர்த்திருக்கலாம்.
 
தன் இசையை யாரும் ரீமேக் செய்வதை விரும்பாத இளையராஜா தன் மகன் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு மட்டும் ஸ்பெஷல் பெர்மிஷன் கொடுத்து விட்டார் போலிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் ‘வச்சாலும் வைக்காம போனாலும்…’ ரீமேக் பாடல் ஆட்டம் போட வைக்கும் ரகம். அர்வியின் ஒளிப்பதிவும் நேர்த்தியாக இருக்கிறது.
 
டிக்கிலோனா – டைம் பாஸ் டிராவல்..!