August 8, 2022
  • August 8, 2022
Breaking News
September 17, 2021

ஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி

By 0 181 Views
இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’  இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
 
விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,
 
“இங்கே வந்திருக்கும் விஜய்ஆண்டனி அவர்களுக்கு நன்றி .இப்போது அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் அடிக்கும் போதும் இங்கு வந்திருக்கிறார் .அவர் ஒரு இசையமைப்பாளராகவும்
 நடிகராகவும்   இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர். கடுமையான உழைப்பாளி .எப்போதும் அவர் பேசும்போது பாசிட்டிவான வார்த்தைகளைப் பேசுபவர். பரபரப்பான நிலையில் இங்கே வந்திருக்கிறார்.
 
இந்தப் படத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் .அவர் ஒரு இயக்குநராக நடிகராக மட்டுமல்ல ஒரு மனிதராகவும் என்னை மிகவும் கவர்ந்து விட்டார் .அவரிடம் இந்தக் கதையை சொல்லி நான் விவரித்தபோது ,”அதெல்லாம் விரிவாக பேச வேண்டாம்.நான் உங்கள் படத்தில் இருக்கிறேன்” என்று சொன்னார் . அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது.
 
பருத்திவீரன் சரவணனிடம் இந்தப் படத்தின் பாத்திரத்தைப் பற்றி விவரித்த போது அவர் பயந்தார். என்னால் முடியாது என்று மறுத்துவிட்டார். அவர் ஏற்கவில்லை . பொதுவாக எல்லா படங்களிலும் கதாநாயகனைத் தான் சக்தி மிக்கவர்களாகக் காட்டுவார்கள்.ஆனால் இந்தப்படத்தில் வில்லனைச் சக்தி மிக்கவனாகக் காட்டுகிறேன்.
 
அந்தப் பாத்திரத்தைப் பற்றிப் புரிந்து கொண்டதும்  பிறகு ஒருவழியாக ஒப்புக்கொண்டார். டப்பிங் பேசி விட்டு ‘என்னைப் பார்க்க எனக்கே பயமாக இருக்கிறது “என்றார்.
 
கதாநாயகிகளுக்கு  எந்தப் பிரச்சினையும் இல்லை .நடித்து விடுவதோடு சரி. இந்த டப்பிங் பேசவோ ப்ரமோஷன் செய்யவோ  வரமாட்டார்கள். அதுதான் அவர்களது போக்காக  இருக்கிறது.
 
ஆனால் என்னுடைய கதாநாயகிகள் இனியாவும் சரி சாக்ஷி அகர்வாலும் சரி அப்படிப்பட்டவர்கள் அல்ல.நன்றாக நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இந்தப் படத்தின் விழா என்று சொன்னதும் ‘அடுத்த படத்தின் படப்பிடிப்பை இங்கேயே தொடங்கி விடலாமா?’ என்று சாக்ஷி அகர்வால் கேட்டார்.  அப்படிப்பட்டவர்கள்தான் என் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
 
இங்கே தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இருக்கிறார். அவர் எனது உறவினர் என்பதால் வரவில்லை ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்கிறார் .1993 -ல் விஜய் படத்திற்கு பைனான்ஸ் செய்தார்கள். அவர்கள் நினைவாக அவர்கள் பெயரிலேயே பி.வி கம்பைன்ஸ் சார்பில் அந்த படம் தயாரிக்கப்பட்டது.
 
பிறகு சேவியர் பிரிட்டோ ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரானார். அந்தப் படத்தை பெரிய அளவில் உயர்த்தினார்.
இங்கே வந்துள்ள கலைப்புலி தாணுவிடம் எப்போது பேசினாலும் “எங்கே வர வேண்டும் ?எப்போது வரவேண்டும் ?”என்று கேட்பார்.
 
‘ துப்பாக்கி’ படத்தை முதலில் நாங்கள் தொடங்கினோம். தவிர்க்க இயலாத காரணங்களால் தொடர முடியாமல் அவரைக் தயாரிக்கச்  சொன்னேன் .அந்தப் படத்தை பெரிய அளவில் வணிகம் செய்து பெரிய படமாக அவர் தயாரித்தார் .
 
அதற்குப்பிறகு விஜய்யின் வணிக மதிப்பு பெரிய அளவில் மாறியது. இங்கே வந்திருக்கும் இயக்குநர் ராஜேஷ் , பொன்ராம்  என் பள்ளி மாணவர்கள் என்று நான்  சொல்வதில்  மகிழ்ச்சி .என் என்னிடம் உதவியாளர்களாக வருபவர்கள் தங்களுக்கு திறமை இல்லை என்று சொல்வார்கள். நேரத்தை மதித்துநடந்து கொள்ளுங்கள். நான் உங்களை திறமைசாலியாக உருவாக்கிக் காட்டுகிறேன் என்று நான் சொல்வேன்.
 
‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சாட்சி’ ,’நான் சிகப்பு மனிதன்’ ,  ‘நீதிக்கு தண்டனை’ போன்று எனக்கென்று ஒரு வகையான பாணியில் படங்கள் எடுத்து வந்தேன். ஒரு குடும்பம் ,சென்டிமெண்ட், கிரைம், திரில்லர் இப்படித்தான் படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.அதில் சட்டம் எப்படி புகுந்து விளையாடுகிறது என்கிற வகையில் படம் எடுப்பேன்.’ சட்டம் சந்திரசேகர்’ என்ற பெயரே எனக்கு இருந்தது .
 
என் மகன் நடிக்க ஆசை பட்டதால்  1992-ல் என் பாணியை மாற்றிக்கொண்டேன்.
 
‘ரசிகன்’,’ விஷ்ணு ‘ போன்ற படங்களை இளைஞர்களுக்காக எடுத்தேன். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு  என்னுடைய பழைய பாணியில் சோஷியல் த்ரில்லரை சமூக அக்கறை கொண்ட படமாக எடுத்திருக்கிறேன். எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ  அப்போதெல்லாம் நான் மீண்டும் பிறந்து வருவேன் என்று கீதையில் சொல்லப்பட்டுள்ளது. அதே கருவை மையமாக வைத்து ‘நான் சிகப்பு மனிதன்’ எடுத்தேன்.
 
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படமும் அப்படி ஒரு கருவை வைத்து உருவாகியிருக்கிறது. நிச்சயம் இந்தப் படத்தில் ஒரு புது விஷயம் சொல்லி இருக்கிறேன். இதுவரை தமிழில் வராத விஷயத்தை நான் சொல்லியிருக்கிறேன். சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை ,தீயவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது.அது கேட்கப் படுகிறதா இல்லையா என்பதுதான் கதை. 
 
அமெரிக்காவில் கூட ஒரு சிறுவன் கடவுளுக்கு கடிதம் எழுதி வெள்ளை மாளிகையில் இருந்து உதவி வந்ததாக சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் படித்தேன்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்தப் படம் போன லாக் டவுன் கொரோனா காலத்தில் தொடங்கப்பட்டது .
 
அதாவது போன ஆண்டு மே மாதம் முதல் ஐந்து மாதங்கள் நான் சேவியர் பிரிட்டோவின் ரிசார்ட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு தங்கியிருந்தேன். அப்போது என்ன செய்வது? என்னால் உழைக்காமல் இருக்க முடியாது .அப்போது  தனி ஒருவனாக என்னால் உருவாக்கப்பட்டது தான் இக்கதை.செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்கி முடித்துவிட்டோம்.
 
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு பட விழாவில் பேசினேன் விஜய்க்கு எப்படிப் பெயர் வைத்தேன் என்று .விஜய் என்றால் வெற்றி என்ற அடையாளத்தில் வைத்தேன் என்று கூறி இருக்கிறேன் 
 
உடனே அப்பா பிள்ளை சண்டை என்கிறார்கள். ஆமாம்… எங்களுக்குள் சண்டைதான். இது எல்லா குடும்பத்திலும் நடப்பது தான் .குடும்பத்தில் அப்பா பிள்ளைகள் சண்டை போட்டுக்கொள்வார்கள். பிறகு  கட்டி அணைத்துக் கொள்வார்கள். இது சகஜமானதுதான்.
 
விஜய் ரகசியம் என்று ஏதேதோ சொல்கிறார்கள் .விஜய் பற்றி ஏதாவது சொல்லித் தங்களுக்குப் பார்வையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் .
 
இதைப் பார்க்கும்போது விஜய் பெயரைச் சொன்னால் பார்வையாளர்கள் கூடும் அளவிற்கு விஜய்  வளர்ந்திருக்கிறார் என்று அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது நல்ல மேடை நல்லதைச் சொல்வோம் .அன்பை விதைப்போம் .அன்பை அறுவடை செய்வோம்..!”