நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குனர் சரண் தற்போது தனது புதிய படமான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படப்பிடிப்பைத் துவக்கியிருக்கிறார். இதில் பிக் பாஸ் புகழ் ஆரவ் நாயகனாகிறார். அவருடன் தமிழுக்கு அறிமுகமாகவிருக்கிறார் தெலுங்கு கிளாமர் குயீன் நடிகை காவ்யா தாப்பர்.
இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது’ “என் முந்தைய திரைப்படங்களில் நான் ஃபேண்டஸியை முயற்சி செய்ததில்லை. இந்த மார்க்கெட் ராஜா MBBS படத்தில் அதை செய்ய இருக்கிறேன், இதில் ஆக்ஷன் மற்றும் காமெடியும் இருக்கும்.
கமல் சார் நடித்து நான் இயக்கிய ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தின் தலைப்புக்கும், இந்த தலைப்புக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அந்த படத்துக்கு முதலில் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்று தான் பெயரிடப்பட்டது, ஆனால் பின்னர் ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ என்று மாற்றினோம்” என்றார்.
Market Raja MBBS
நடிகர்கள் தேர்வு பற்றி சரண் கூறும்போது, “கதை பெரம்பூர் பின்னணியில் அமைந்துள்ளது. இதில் கதாநாயகன் ஒரு ரயில்வே ஒப்பந்ததாரர் மற்றும் ஒரு உள்ளூர் தாதா. அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற தோற்றம் உள்ள ஒருவரை தேடினேன். ஆரவ் என் மனதில் முதல் தேர்வாக தோன்றினார்.
காவ்யா தாப்பர் தெலுங்கு நடிகை. நான் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தும் 18 வது நாயகியாக அவர் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவர்களுடன் நாசர், ராதிகா சரத்குமார், சாம்ஸ், ஆதித்யா, யோகி பாபு, பாகுபலி புகழ் பிரபாகர் மற்றும் சில பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். படம் நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த கலவையாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.
சைமன் கே கிங் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். சரண் தனது இளைய சகோதரர் கே.வி.குகன் உடன் முதன் முறையாக இணைகிறார்.