April 25, 2024
  • April 25, 2024
Breaking News
February 20, 2021

கமலி from நடுக்காவேரி திரை விமர்சனம்

By 0 1211 Views
கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு சென்னை போன்ற பெருநகரத்தில் அமைந்திருக்கும் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி கற்பதென்பது எத்தகைய கடினமான விஷயம் என்பது கற்றறிந்தவர்களுக்குத் தெரியும்.
 
அப்படி நடுக்காவேரியிலிருந்து சென்னை ஐஐடியில் சேர கடின உழைப்பில் வந்த கமலி என்ற மாணவியைப் பற்றிய படம்தான் இது. கல்வியைப் பற்றிய படம் என்பதால் படமாக இல்லாமல் பாடமாக இருக்குமோ என்று ஐயமடையைத் தேவையில்லை. சினிமாவுக்குண்டான அத்தனை அம்சங்களும் படத்தில் தேவைக்கேற்ற அளவில் இருக்கின்றன.
 
சரி… நடுக்காவேரியைச் சேர்ந்த கமலி ஏன் சென்னை ஐஐடிக்கு வர வேண்டுமென்ற கேள்வி எழுகிறதலவா..? முதலில் லைனைக் கேளுங்கள்.
 
நடுக்காவேரியைச் சேர்ந்த கமலியாக வரும் ஆனந்தி கிராமத்தில் ஓரளவுக்கு வசதியான வீட்டுப் பெண்தான். வயதுக்கேயுரிய சிற்சில குறும்புகள் செய்தாலும் ப்ளஸ் ஒன் படிக்கும் அவர் படிப்பில் படு சுட்டி. ஆனந்தியின் தந்தை அழகம்பெருமாளுக்குப் பெண் குழந்தையை மேல்படிப்புக்கு அனுப்ப மனமில்லாமல் அவளுக்கு மணமுடிக்க நினைக்கிறார். ஆனால், மகனை மேற்படிப்பு படிக்க வைக்கவும் திட்டமிடுகிறார். ஆனால், அவனுக்குப் படிப்பு ஏறவில்லை.
 
இந்நிலையில் +2 தேர்வு முடிவு வர. அதில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற ரோகித்தின் பேட்டியை ஆனந்தி கேட்க நேர்கிறது. அவனது படிக்கும் ஆர்வத்தையும் நேர்மறையான பேச்சையும் கேட்கும் ஆனந்தி ரோகித்தை ரோல் மாடலாகக் கொள்வதுடன் மானசீகமாக காதலிக்க தொடங்கி அவரை சந்திப்பதற்காக சென்னை ஐஐடியில் சேர ஆசைப்படுகிறார். அதற்கான அவரது போராட்டம்தான் கதை.
 
டைட்டிலை மட்டுமல்லாமல் படத்தையும் தாங்கிப் பிடிக்கும் பாத்திரம் அமைந்திருக்கிறது ஆனந்திக்கு. அந்தப் பாத்திரத்தை மனதில் வாங்கி கமலியாகவே மாறியிருக்கிறார் அவர். தான் கொண்ட லட்சியத்துக்காக கடினமாக உழைக்கும்போதும்,,. நேரில் ரோகித்தைக் கண்டு படிப்பில் கவனம் குறைந்து காதலில் மூழ்கும்போதும்… அதன் காரணமாக சக மாணவ மாணவிகளின் அவமானத்தைப் பெறும்போதும், அதிலிருந்து தானே தன்னைத் தேற்றிக்கொண்டு கடினமாக உழைத்து சாதிக்கும்போதும்… அவரே தனி மனுஷியாகப் படத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறார். 
 
அப்பாவித்தனம், குறும்புத்தனம், அறிவுத்திறன் எல்லாவற்றுக்கும் ஆனந்தியின் முகமும், நடிப்பும், தோற்றமும் கனக்கச்சிதம். ரோகித்தை முதல்முறை நேரில் பார்க்கும்போது அந்த முகத்தில்தான் எப்படிக் காதல் பூக்கிறது..? அபாரம்..!
 
ஆனந்தியை அவரது லட்சியத்துக்குத் தயார் செய்யும் வேடத்தில் நீண்ட நாள் கழித்து பிரதாப் போத்தன் நடித்திருக்கிறார். உண்மையில் சொல்லப்போனால் நம்பி என்கிற அவரது கேரக்டர்தான் படத்தின் முதுகெலும்பு. ‘நம்பி பிரம் நடுக்காவேரி’ என்றே தலைப்பு வைத்திருக்கலாம். பிரதாப்பும் பாத்திரமாகவே மாறி நடிப்பில் நெகிழ வைக்கிறார்.
 
நாயகனாக வரும் ரோகித்தை ஒரு நடிகராகவே உணர முடியவில்லை. அவரை ஒரு அதிபுத்திசாலியான மாணவராகவே உணர்கிறோம்.  
 
இதுவரை வில்லத்தனமாகவும், சதா கத்திக்கொண்டும் படங்களில் வரும் அழகம்பெருமாளுக்கு இதில் பாசமுள்ள தந்தையாக பொறுப்பான வேடம். இந்தப்படத்தில் நடித்ததற்கு அவரும் பெருமைப்படலாம். இமான் அண்ணாச்சி கலகலப்பூட்டினாலும், கடைசியில் அழகம்பெருமாளுக்கு நியாயத்தை போதிக்கிறார்.
 
ஆனந்தியின் பள்ளித் தோழியாக ஸ்ரீஜா, ஐஐடியில் அறைத்தோழியாக அபிதா வெங்கட் இருவரும் அந்தந்தப் பாத்திரங்களில் அப்பட்டமாகப் பொருந்தி இருக்கிறார்கள். 
 
இந்தப்படத்தின் சிறப்பம்சமே அனைத்து நடிக நடிகையரும் அந்தப் பாத்திரங்களுக்கு மாற்று தேவைப்படாமல் பொருத்தமாக இருப்பதுதான். அதன் காரணமாகவே இந்தப்பட இயக்குநர் ராஜசேகர் துரைசாமியை முதல்நிலை இயக்குநர்கள் வரிசையில் வைக்கலாம்.
 
அத்துடன் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தை முன்னிறுத்தும் ஒரு முயற்சியை சலிப்பில்லாமல் ரசிக்கத்தக்க விதத்தில் எடுத்திருக்கும் அவருக்கு விருதுகள் கொடுத்து அரசும், படத்தை வெற்றிப்படமாக்க கல்வியில் அக்கறை செலுத்தும் ரசிகர்களும் ஊக்கப்படுத்த வேண்டும்.
 
குடும்பத்துடன் பார்க்கத் தோதான படம் என்பதால் பெற்றோர் அவசியம் தன் குழந்தைகளுடன் இந்தப் படத்தைக் கண்டுகளிக்க வேண்டும்.
 
தீனதயாளனின் இசையில் பாடல்கள் எல்லாமே மெலடி ரகம். பின்னணி இசை படத்தின் தன்மையைப் பிரதிபலிக்கிறது. நடுக்காவேரியின் கிராமப் பசுமைக்குள்ளும், சென்னை ஐஐடி வளாகத்திலேயே படம் பிடித்திருப்பதில் கல்விச் சூழலுக்குள்ளும் ஜெகதீஷ் இளங்கோவனின் கேமரா பயணப்பட்டு நம்மைப் படம் பார்க்கும் உணர்வில்லாமல் நிஜத்தைப் பார்க்கும் உணர்விலேயே வைக்கிறது. 
 
பின்பாதி குறிப்பாக கிளைமாக்ஸ் க்விஸ் போட்டி இறக்கை கட்டிப் பறக்கிறது. அதே வேகம் முன் பாதியிலும் இருந்திருந்தால் மொத்தப் படத்தையும் கொண்டாடி இருக்கலாம். இவ்வளவு நல்ல படத்தை இடைவேளையில் உணர முடியாதது ஒன்றே குறை. 
 
கமலி – கைத்தட்ட வைக்கிறாள்..!