தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் வருவதில்லை, புதிய படங்கள் ரிலீஸ் இல்லை. இந்நிலையில் தியேட்டர் அதிபர்கள், கடந்த 6 மாத காலமாய் வருமானம் இல்லாமல் சொல்லொண்ணாத் தவிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
தியேட்டர் ஊழியர்களுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுக்க வேண்டும், தியேட்டரை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும், வளாகம் இருளில் மூழ்கி விடாதபடி மின் விளக்குகளை இரவு முழுவதும் எரிய விட வேண்டும். அதற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
காலையிலும் இரவிலும் (2 ஷிப்ட்டுகள்) பணியிலிருக்கும் செக்யூரிட்டிகளுக்கு (காவலர்கள்) சம்பளம் கொடுக்க வேண்டும்.
இப்படி ஒரு நிலைமை. இது குறித்து யோசித்த சென்னை ஆற்காடு சாலையில் உள்ள கமலா தியேட்டர் மேனேஜ்மெண்ட் அப் பகுதிக்கு (ஃபோரம் மால், விவேக் அண்ட் கோ, வாசன் ஐ கேர் வாகனப் போக்குவரத்து நிறைந்த பகுதி) வருபவர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டுப் போக, இடம் கொடுக்கலாமே…? என்று யோசித்திருக்கிறார்கள்.
அதன்படி கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு வாடகை ரூ.15; மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.10 வசூலிக்க ஆரம்பித்தும் விட்டார்கள். இது பொதுமக்களுக்கு குறைந்த கட்டணம், அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குதாம்.
இந்த நல்ல மனசுக்கு ஆகவே சீக்கிரம் தியேட்டர்கள் திறக்கட்டும்.