தேர்தலுக்காக நாங்கள் வகுத்துள்ள திட்டங்களை ஆசியாவில் வேறு எந்த கட்சியும் வகுக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஐந்தாம்கட்டமாக கோவையில் நடைபெறும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மசக்காளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:
“நமது வெற்றிக்கு ஆதரவாக செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இது சினிமாக்காரனைப் பார்ப்பதற்காக கூடும் கூட்டம் என சிலர் சொல்கிரார்கள். ஆனால், அது பொய் என்பது மக்களுக்குத் தெரியும். அதை தேர்தலில் நீங்கள் நிரூபிக்க வேண்டும்.
மக்கள் நலன், எதிர்காலத்தில் அக்கறை கொண்டு பல அரிய திட்டங்களை வகுத்துள்ளோம். எங்களது திட்டத்தை ஆசியாவில் வேறு எந்தக் கட்சியும் செய்யவில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனக் கூறியபோது அதை பலர் கிண்டல் செய்தார்கள்.
ஆனால், குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், பல கொடுமைகளை அனுபவித்து வரும் பெண்களுக்கு ஊதியம் என்பது அவசியம் எனக் கருத்து தெரிவித்திருக்கிறது.
வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்துள்ளோம். பரமக்குடி, சேலத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் கோவையிலும் தொடரும்.
வீட்டுக்கு ஒரு கணினி எனும் திட்டத்தை அறிவித்தபோது, நாங்களும் இலவசம் தருவதாக கூறினர். ஆனால், இது இலவசம் அல்ல. பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசின் உதவி.
மக்கள் என்னுடன் உரையாட இந்தக் கணினி ஒரு கருவியாக அமையும். இது நடுத்தரகர்களை அகற்றும். இதன்மூலம் லஞ்சம் குறைய வாய்ப்புள்ளது. இதுபோல பல திட்டங்களை மக்கள் நலனுக்காக வகுத்துள்ளோம்..!”