இன்று பிற்பகலில் சென்னை கமலா திரையரங்கில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ என்ற படத்தின் ஆடியோ வெளியீடு நடக்க இருந்தது.
ஆடியோவை வெளியிட கமல்ஹாசன் அழைக்கப்பட்டிருந்தார். எனவே இந்த நிகழ்ச்சி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
விருந்தினர்கள் மற்றும் மீடியாக்களுக்கு நேற்றிலிருந்து அழைப்பு அனுப்பப்பட்டு கொண்டிருக்க இன்று காலை திடீர் என்று சில நேரங்களில் சில மனிதர்கள் டீமிடம் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது.
அதில் இன்று காலை பெய்த மழையின் காரணமாக விருந்தினர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் அந்த நிகழ்வை ஒத்தி வைத்திருப்பதாகவும் அது எப்போது நடக்கும் என்பதை பிறகு தெரிவிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
அடாத மழை, வெள்ளத்துக்கு எல்லாம் எந்த நிகழ்ச்சியும் இப்படி ஒத்தி வைக்கப்பட்டதாக சினிமா வரலாற்றில் இல்லை என்கிற அளவில் இன்று காலை பெய்த சாதாரண மழைக்கே ஒரு விழா ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருந்தது.
அதற்கான விடை சற்று முன் தான் கிடைத்தது.
விழாவின் முக்கிய விருந்தினராக எதிர்பார்க்கப்பட்ட கொண்டிருந்த கமலஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் காரணமாக மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆக, அதன் காரணமாகத்தான் விழா ஒத்திவைக்கப்பட்டதே ஒழிய இந்த மழையின் காரணமாகவோ விருந்தினர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அதனால் தொல்லை என்பதற்காகவோ இந்த விழா ஒத்தி வைக்கப்படவில்லை.
கிடைக்கிற வாய்ப்பை எப்படி எல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் பாருங்கள்…
பல நேரங்களில் பல மனிதர்கள் இப்படித்தான்..!