September 13, 2025
  • September 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிரித்விராஜ் நடிப்பில் மாஸ் ஆக்சன் படமாக வெளியாகும் ‘கடுவா’
June 29, 2022

பிரித்விராஜ் நடிப்பில் மாஸ் ஆக்சன் படமாக வெளியாகும் ‘கடுவா’

By 0 335 Views

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடுவா’. இந்த படத்தை பிரித்விராஜ் புரடக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். விவேக் ஓபராய் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜினு ஆபிரகாம் கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார்.

வரும் ஜூலை 7 ஆம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலக சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி, விடிவி கணேஷ், நடிகர்கள் ஆர்யா, ஜீவா, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பதி பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய பிரித்விராஜ், “மலையாள திரையுலகில் தொடர்ந்து புதுப்புது கதையம்சத்துடன் படங்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் மாஸ் ஆக்சன் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது மலையாளத்தில் இப்படி ஒரு மாஸ் ஆக்சன் படம் உருவாகாதா என ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கே கூட அந்த எண்ணம் தோன்றியது. அதன் விளைவாகத்தான் இந்த கடுவா திரைப்படம் உருவாகியுள்ளது.

இரண்டு வருடத்திற்கு முன்பே இந்தப்படம் தொடங்கப்பட்டாலும் கொரோனா தாக்கம், வெள்ள பாதிப்பு என பலவிதமான இடர்பாடுகளை கடந்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளது. நிச்சயம் ரசிகர்கள் தியேட்டரில் விசில் அடித்து ரசித்துப் பார்க்கும் ஒரு படமாக இது இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய பிரித்திவிராஜ் பான் இந்திய படங்கள், ஓவர்சீஸ் உரிமை, மாறிவரும் ஜானர் என பல விஷயங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதைத்தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கும் பிரத்தியோக பேட்டி அளித்தார் பிரித்விராஜ்.

இந்தப்படம் பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்க கூடிய கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரை பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது.

பிரித்விராஜ் முதல்முறையாக இயக்கிய லூசிபர் படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் இந்த படத்தில் மீண்டும் பிரித்விராஜ் உடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து இயக்குனர் ஷாஜி கைலாஷும் பிரித்விராஜும் இணைந்து உருவாகியுள்ள படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது கடுவா திரைப்படம்.