கடலிலிருந்து பெருகி வந்த உபரி நீர் மீண்டும் கடலுக்குச் செல்லாமல் தங்கிவிடும் பரப்பை காயல் என்பார்கள். அந்த நீர் கடலைப் போல் அலைகளை எழுப்பி ஆர்ப்பரிக்காமல் அமைதியாக இருக்கும்.
அதனைப் போல ஒரு தேவையற்ற பிடிவாதத்தில் ஆர்ப்பரித்து இயல்பை இழந்த ஒரு குடும்பம் எப்படி உணர்ச்சிகள் அற்றுப் போகிறது என்பதைச் சொல்லும் படம் இது.
இதை எழுத்தாளர் தமயந்தி, தன் எழுத்துக்களுடன் இயக்கியிருப்பதிலும் கவனம் பெற்ற படமாக அமைகிறது.
கடல் சார் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நாயகன் லிங்கேஷ், ஒரு சமூகப் போராளியாகவும் இருக்கிறார். ஆனால் தாழ்த்தப்பட்ட பிரிவினராக இருக்கிறார்.
அவருக்கும் நாயகி காயத்ரிக்கும் காதல் உருவாக, அசிஸ்டன்ட் கமிஷனரக இருக்கும் காயத்ரியின் அப்பா ஐசக், அந்தக் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். ஆனால் இனப்பற்றுள்ளவராக இருக்கும் அம்மா அனுமோள், அந்தக் காதலை எதிர்ப்பதுடன் தங்கள் இனத்திலேயே காயத்ரிக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்க, எதிர்பாராத விபரீதம் நடக்கிறது.
அதில் உருக்குலைந்து போகும் ஐசக்குக்கும் அனுமோளுக்கும் கணவன் மனைவி உறவே சிக்கலாகிப்போக, இருவருக்குள்ளும் இணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு அவர்களின் குடும்ப நண்பரான மனவியல் மருத்துவர் ரமேஷ் திலக், அவர்களுடன் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்.
அந்த சுற்றுப் பயணத்தில் அவர்கள் கற்றது என்ன, பெற்றது என்ன என்பதுதான் படம்.
காயத்ரியின நடிப்புக்கும் அழகுக்கும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காதலனின் பரிவும் அப்பாவின் அன்பும் ஒருங்கே அமையப்பெற்றும் அவருக்கு வாழ்க்கை கைகூடாமல் போனது பரிதாபம்.
அவரது நினைவிலேயே காலத்தைக் கழிக்கும் லிங்கேஷ், உடன் பணி புரியும் ஸ்வாகதாவின் காதலை ஏற்க முடியாமல் தவிப்பதும் நன்று.
பெரும்பாலும் துணைப் பாத்திரங்கள் அல்லது வில்லன் வேடத்தில் நடித்து வந்த ஐசக்குக்கு ஒரு பாசம் மிகுந்த அப்பாவாக உணர்ச்சிபூர்வமான வேடம். அங்கங்கே ரகுவரன் நமக்கு நினைவுக்கு வரும் அளவில் அற்புதமாக நடித்திருக்கிறார்.
அனுமோள் நடிப்பைப் பற்றி நாடே அறியும். ஆனாலும் வில்லியான பாத்திரத்தில் வல்லிய நடிப்பைத் தந்திருக்கிறார்.
தன் உயரத்தை விட பண்பட்ட நடிப்பில் உயர்ந்து தெரிகிறார் ரமேஷ் திலக். அவரைச் சுற்றி சுற்றி வரும் ஸ்வாகதாவின் நடிப்பிலும் குறை இல்லை.
படத்தின் தலைப்புக்கு ஏற்ப பெரும்பான்மைக் காட்சிகள் நீரும் நீரைச் சார்ந்தும் படமாக்கப்பட்டிருக்கின்றன. நீரற்ற காட்சிகளை விரல் விட்டு எண்ணி வடலாம்.
எனவே ஒளிப்பதிவாளர் கார்த்திக் வைத்த அத்தனை ஷாடடுகளும் கவிதையாக விரிகின்றன. ஜஸ்டின் இசையும் உணர்வுபூர்வமாக ஒலிக்கிறது. எடிட்டர் பிரவீனின் ஆழ்ந்த படத்தொகுப்பம் படத்தின் தன்மைக்கு வலு சேர்க்கிறது.
வழக்கமாக பெண் இயக்குனர்கள் தங்கள் படங்களில் பெண்களை உயர்வாகப் பேசுவார்கள். ஆனால் இந்தப் படத்தைப் பொருத்த அளவில் ஒரு பெண்ணே… அதுவும் தாயே மகளுக்கு வில்லியாகிப் போனது ஆச்சரியம்.
அத்துடன் படத்தில் வரும் அனைத்து ஆண் பாத்திரங்களும் அப்பழுக்கற்றவர்களாக இருப்பதுவும் கூட… “அடடே..!”
இருந்தும் ஒரு நல்ல குடும்பத்தில் காவல் அதிகாரியால் தைரியமாக வளர்க்கப்பட்ட ஒரு பெண் இப்படி ஒரு முடிவை எடுப்பாளா என்ற கேள்வி எழாமல் இல்லை. அந்தக் கேள்வியை இயக்குனர் ஏன் கேட்டுக் கொள்ளவில்லை என்பதும் புரியவில்லை.
ஒரு கதை படிக்கும் உணர்வை படத்திலும் தந்த எழுத்தாளரைப் பாராட்டலாம்.
காயல் – சாதீயக் காயம்..!
– வேணுஜி