கஜா தன் கொடுங்கரங்களால் கலைத்துப் போட்ட தமிழகப் பகுதிகளைச் சீரமைக்க பல துறையினரும் உதவிகள் செய்து வருவதைப் போலவே திரைத்துறையிலிருந்தும் பலர் முன்வந்து உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
இதில் கடந்த வாரம் ஜோதிகா நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காற்றின் மொழி’ தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு நூதன திட்டத்தைத் தன் உதவியாக மட்டுமல்லாமல், ரசிகர்களும் சேர்ந்து உதவும் முகமாக அறிவித்திருக்கிறார்.
அந்த உதவி அவர்கள் மொழியில் கீழே…
“காற்றின் மொழி’ திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
இந்த சமயத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ‘டெல்டா’ பகுதி மக்களுக்கு நீங்கள் ‘காற்றின் மொழி’ திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம்.
இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு ‘காற்றின் மொழி’ டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் ‘கஜா’ புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.
நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்..!”
நல்ல திட்டம்தானே?!