தமிழ்சினிமாவில் மரபுரீதியான ‘ரூல்’களை உடைத்தவர்கள் பட்டியலில் கண்டிப்பாக விஜய் ஆண்டனிக்கு இடம் உண்டு. எதிர்மறையான தலைப்புகளைக் கண்டாலே தூர ஓடும் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட பயமின்றி அப்படிப்பட்ட தலைப்புகளிலேயே படங்களை எடுத்து வெற்றியும் கண்டவர் முதல்முறையாக படத்தின் பத்து நிமிடக் காட்சியை படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட்டு புதிய பாதையையும் வகுத்தவர்.
அந்த வகையில் அவரது சொந்தப்பட நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஞ்சலி, சுனைனாவுடன் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்து மே 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘காளி’.
இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரது பாணியிலேயே படத்தின் 20 நிமிட காட்சிகளளை பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை படத்தின் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பகிர்ந்து கொண்டதிலிருந்து….
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் –
“ஆண்கள் மட்டுமே ஆளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ‘காளி’, சிறப்பாக வந்துள்ளது. நிச்சயம்வெற்றி படமாக அமையும்..!”
நாயகி ஷில்பா மஞ்சுநாத்.-
“இது தமிழில் என்னுடைய முதல் படம், இது என் முதல் மேடை. கிருத்திகா உதயநிதி என்னை அழைத்த போது வயதான, அனுபவமிக்க இயக்குனராக இருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு அழகான, இளம் இயக்குனராக அமைந்து படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்..!”
ஆர் கே சுரேஷ் –
“நான் ஒரு வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். நான் பார்த்த வரையில் சமீப காலங்களில் தர்மதுரை படமும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும் லாபத்தில் ஓவர்ஃப்ளோ கொடுத்த படங்கள். நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப்பெரிய பலமாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். கிருத்திகா அவர்களை பார்த்து பிரமித்தேன்..!”
நாயகி சுனைனா –
“இந்தப் படத்தின் மையக்கருத்தே அன்புதான். இந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தில் பணிபுரிந்தது பெருமை. விஜய் ஆண்டனி அவர்களை பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராகப் பார்த்திருக்கிறேன், இப்போது சிறந்த நடிகராக, தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார் அவர். இந்தப் படத்தில் வாய்ப்புத் தந்து என் பத்து வருடப் பயணத்தை இனிமையாக்கிய விஜய் ஆண்டனிக்கு நன்றி..!”
இயக்குனர் கிருத்திகா உதயநிதி –
“பெண்கள் தினத்தில்தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்குக் கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையைக் கேட்டார். எனக்கும் தயாரிப்பாளர் ஃபாத்திமாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது.
நான்கு கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன். பெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை. திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வாய்ப்புக் கொடுத்தால்வெளியே வந்து சாதிப்பார்கள்..!”
நாயகன் விஜய் ஆண்டனி –
“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர், இன்றும் மிகவும் எளிமையானவர். என் தேர்வு திறமையை மட்டுமே வைத்து அமைவதில்லை. கேரக்டரையும் பார்ப்பேன். அந்த வகையில் கிருத்திகா சிறந்த பெண்மணி. ஒளிப்பதிவாளர் ரிச்சர்டும் என்னுடைய ஜூனியர் தான். எல்லா வேலையையும் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்தார். இனி இவர்தான் என் படங்களின் முதல் தேடலாக இருப்பார்.
நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது. சண்டைக்காட்சிகளில் பாதிக்கு மேல் எனக்கு டூப்பாக ஒருவர் சண்டை போட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் அண்ணாமலை மறைவிற்கு பிறகு அந்த இடத்தை அருண் பாரதி நிரப்பி வருகிறார். அடுத்த படமான ‘திமிர் பிடிச்சவன்’ படத்தையடுத்து ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். அதிலும் இந்தக் கலைஞர்கள் நிச்சயம் இருப்பார்கள்..!”
இந்த சந்திப்பில் நாயகி அம்ரிதா, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், பாடலாசிரியர்கள் அருண் பாரதி, தமிழனங்கு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.