ஒரு துறையில் பரிமளிப்பதே ஆகப் பெரிய விஷயம் என்றிருக்க, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் ஆண்டுகொண்டிருந்த நிலையில் சிறிய வயதில் திரை இசைத்துறைக்குள் வந்து வெற்றி பெற்றவர் ஜி.வி.பிரகாஷ்.
பெரும்பாலும் அனைத்து பெரும் இயக்குநர்களுடனும் பணிபுரிந்த அவர், இசையில் பெற்ற வெற்றியையும் மீறி நடிகனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது அரிய சாதனை என்றே கொள்ளலாம். ஆனால், அந்த வெற்றியில் ஒரு கரும்புள்ளி என்றால் அது ஆதிக் இரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம்தான்.
‘படம் இமாலய வெற்றி. ரசிகர்கள் கொண்டாடினார்கள்…’ என்றெல்லாம் ‘புள்ளிவிவர பண்டிட்கள்’ ஆடிட் ரிப்போர்ட் சப்மிட் பண்ணலாம். (மதுக்கடைகளை பொதுமக்கள் விரும்பி வந்து வாங்கிக் குடிக்கிறார்கள் என்பதற்காக மதுவை ஆதரிக்க முடியுமா..?)
இரட்டை அர்த்தங்களுடன் ‘கெட்ட வார்த்தை’ப் படமாக அமைந்த அந்தப்படத்தில் நடித்ததில் ஜிவியின் புகழ் மங்கியது என்றே சொல்ல வேண்டும். அவரைக் குடும்பத்துடன் ரசித்தவர்களைக் குறைய வைத்த படம் அது.
இப்போது விஷயம் என்னவென்றால் அதே ஆதிக் இரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ‘காதலைத் தேடி நித்யா நந்தா’ என்ற படத்தில் ஜி.வி.நடிப்பதாக அறிவிப்பு வந்திருப்பதுதான். மீண்டும் ஒரு கெட்டவார்த்தைப் படமா என்று நம்மை ஐயுற வைக்கிறது அறிவிப்பு. இந்தப்படமும் அப்படித்தான் என்றால் ஜி.வி.தன் பெயரைப் பெரிய அளவில் கெடுத்துக் கொள்வார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஒருபக்கம் ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் என்று மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் ஜி.வி, இப்படி கீழத்தரமான படங்களில் நடித்த புகழை அதற்குப் பயன்படுத்துவது நியாயமேயில்லை.
“இது நித்யா நந்தா என்ற காதலர்களின் காதல் போராட்டக் கதைதான்… இது ஜனரஞ்சகமான படமாக இருக்கும்..!” என்று ஆதிக் தரும் ஒற்றைவரி விளக்கம் நியாயமானதாக இருந்தால் நல்லது.
இல்லாவிட்டால் ஜி.விக்கு ஏற்படும் அவப்பெயரை யாராலும் காப்பாற்ற முடியாது..!