தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ அரசியல் படம் போல் இருக்கிறது என்று நினைத்து விட வேண்டாம். ரிவஞ்சுடன் கூடிய ஆக்சன்தான் இந்த படத்தின் களம்.
சமூகம் கண்டுகொள்ளாமல் விட்ட இளைஞர்களை சமூக விரோத கும்பல்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன என்று சொல்லி இருப்பதுடன் ஊடகங்களில் வெளியாகும் பொய் கூட எப்படி உண்மையாகி விடுகிறது என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் அப்பு கே.சாமி. அவரே படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பதுடன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
டார்க் லைட் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுப்பிரமணியன்.எஸ் தயாரித்திருக்கும் இந்தப்படம் 311 OTT மற்றும் 311channel.com என்ற இணையத்தில் நேரடியாக வெளியாகியிருக்கிறது.
கதை இதுதான்…
ஒரு கிராமத்தில் 44 பேர் கொலை செய்யப்பட்டதாக தொலைக்காட்சி ஒன்றில் அதே கிராமத்தை சேர்ந்த அருள் அன்பழகன் விவரிக்கிறார். அதன் உண்மைத் தன்மையை விசாரிக்காமல் பரபரப்புக்காக அந்த செய்தியை அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதோடு, அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியான நாயகன் அப்பு கே.சாமியிடம் விளக்கமும் கேட்கிறது.
இதற்காக களத்தில் இறங்கும் அப்பு கே. சாமி, அருள் அன்பழகன் கூறிய தகவல்கள் அனைத்தும் பொய் என்பதை தெரிந்து கொள்வதுடன் கொலை சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன? என்பதைக் கண்டுபிடித்து விவரிப்பதுதான் இந்தப் படத்தின் கதை.
படத்தின் எல்லா முக்கிய பொறுப்புகளிலும் பங்கு வகுத்திருப்பதோடு ரிக்கவரி பாண்டி மற்றும் போலீஸ் அதிகாரி ஜான் என்ற இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் அப்பு கே.சாமி, இத்தனை பொறுப்புக்கிடையிலும் குறை தெரியாமல் நடித்திருப்பத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.
போலீஸ் அதிகாரியாக மிடுக்குடன் நடித்திருப்பதோடு ரிக்கவரி பாண்டி வேடத்தில் காமெடி, காதல் என அனைத்து ஏரியாவிலும் புகுந்து புறப்பட்டு தன்னுடைய அடையாளத்தை பதித்திருக்கிறார் அவர்.
அருள் அன்பழகனை தொலைக்காட்சி பேட்டியில் பார்க்கும்போது அப்பாவி என்று தோன்றுகிறது அதற்குப் பிறகு அவரது உண்மை முகம் தெரிய ‘ அடப்பாவி ‘ என்று ஆகிவிடுகிறது.
கொஞ்ச காலமாக தமிழ் சினிமாவில் தலைமறைவாக இருந்த பவர்ஸ்டார் சீனிவாசன் இரண்டு காட்சிகளில் வந்து தலை காட்டி இருக்கிறார்.
நாயகியாக நக்ஷத்ரா ராவ். பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலேயே ஹீரோயின்களுக்கு வேலை இல்லை எனும் போது இவருக்கு இந்த சிறிய படத்தில் எப்படி வேலை இருக்கும்? இருந்தாலும் பழகிய முகம் போல் வந்து போகிறார்.
பெரிய மனிதராக வரும் ஜாக்சன் பாபு தனது இயல்பான வில்லத்தனத்தால் கவனிக்க வைக்கிறார்.
நிழல்கள் ரவி, ஆதேஷ் பாலா தங்கள் அனுபவ நடிப்பால் அவர்கள் ஏற்ற வேடங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
பெரும்பாலான நடிகர்கள் புதுமுகங்களாக இருந்தாலும் தானும் நடித்துக் கொண்டு அவர்களையும் வேலை வாங்கி இருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.
கவியரசனின் ஒளிப்பதிவுக்கும் ஸ்டுடியோஸின் இசைக்கும் இன்னும் கூட கொஞ்சம் பட்ஜெட் ஒதுக்கி இருக்கலாம்.
இதுபோன்ற ஆக்ஷன் படங்களில் கதையும் திரைக்கதையும் தெளிவாக இருந்தால் மட்டுமே அது கடைக்கோடி ரசிகன் வரை சென்று சேரும். அந்த வகையில் திரைக்கதையில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார் இயக்குனர் என்பதையும் சொல்லியாக வேண்டும்.
இருந்தாலும் சமூக அக்கறையோடு படத்தை இயக்கியிருக்கும் அப்பு கே.சாமிக்கு வாழ்த்துகள்.
இந்தப் படத்தில் பெற்ற அனுபவங்களை வைத்துக்கொண்டு குறைகளைக் களைந்தால் எதிர்காலத்தில் ” அப்பு கே. சாமி எனும் நான்…” என்று சொல்லும் அளவில் சினிமாவில் அவர் பெயர் வாங்கலாம்.