April 26, 2024
  • April 26, 2024
Breaking News
August 31, 2022

நட்சத்திரம் நகர்கிறது திரைப்பட விமர்சனம்

By 0 686 Views

ஒரு காலத்தில் பெண்களின் உணர்வுகளை கூட ஆண்களே எழுதிக் கொண்டிருந்தார்கள். உழவனின் பிரச்சனைகளை, உட்கார்ந்து யோசிப்போர் சிந்தித்து எழுதிக் கொண்டிருந்தார்கள். காலம் மாறி பெண்ணின் கைக்கு பேனா வந்ததும், ஏர் பிடித்தவன் கையில் எழுதுகோல் வந்ததும் அவர்களின்  அனுபவங்கள் உதிரமும், உணர்ச்சியுமாக  நம்மிடம் பேசத் தொடங்கின.

அப்படித்தான் ஒடுக்கப்பட்டோரின் குரலை அவர்களே பதிவு செய்ய காலம் கனிந்து வந்திருக்கும் இன்றைய வேளையில் அதைச் செம்மையாக முன்னெடுத்து வருகிறார் பா.ரஞ்சித். அவர் இயக்கும் படங்களாகட்டும், தயாரிப்பில் உருவாகும் படங்களாகட்டும் ஒடுக்கப்பட்டோரின் வலியை, அரசியல் குரலாகவும், குமுறலாகவும் வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த நட்சத்திரம் நகர்கிறது படத்தின் வாயிலாக இதுவரை காதலுக்கு எதிரியாக இருந்த இனம், மதம் இவற்றுடன் கூடிய அரசியலை இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார் பா.ரஞ்சித். என்னதான் ஒடுக்கப்பட்டவரை வேறுபாடு கருதாமல் அருகில் இருத்திக் கொண்டாலும் எங்கோ ஓரிடத்தில் காலம் காலமாக புரையோடி போயிருக்கும் ஆதிக்க இனத்தவர்களின் ஒடுக்கும் சிந்தனை எப்படியோ வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது என்பது இந்தப் படத்தின் பதிவாக இருக்கிறது.

அதனூடே காதலின் பல பரிமாணங்களையும் இன்றைய நாட்டு நாகரிக நடப்பின்படி நூல் பிடித்துக் காட்டியிருக்கிறார் அவர். 

இதுவரை வெளியான பா.ரஞ்சித்தின் படங்களில் அவர் பேசும் அரசியலில் ஒரு இனத்தைத் தூக்கிப் பிடிப்பதன் மூலம் மற்ற இனங்களைக் காயப்படுத்தும் போக்கு இருப்பதாக விமர்சிக்கப் பட்டது. ஆனால், இந்தப்படத்தில் மாற்று இனத்தவரும் மனம் மாறும் வாய்ப்பு இருப்பதை அழுத்தமாக அவர் சொல்லி இருப்பது ஆரோக்கிய அரசியல் சிந்தனையின் அடுத்தக்கட்ட நகர்வு.

அதனால் அவர் இயக்கிய மற்றப் படங்களில் இருந்து இந்தப்படம் ரொம்பவே வித்தியாசப் பட்டிருக்கிறது.

பெண்ணியம் தூக்கலாக இருக்கும் துஷாராதான் கதையின் நாயகி. அவரே தன்னைப் பற்றி சொல்வதைப் போல் வாழ்வில் பல கட்டங்களிலும் இனத்தின் பெயரான அடக்குமுறையால் சில்லுகளாக சிதறுண்டாலும், அத்தனை சில்லுகளையும் ஒன்று திரட்டி தானே உறுதிப்பட்ட ஒரு கண்ணாடியாகத் தெரிகிறார் அவர்.

தன் மனம்போல் வாழக்கூடிய தன்மை படைத்த அவரது காதல்கள், சனாதன உலகத்துக்கு கலாச்சார அச்சுறுத்தலாக தெரிந்தாலும் அதைத் தாண்டி தன் மனம் போல் வாழ்க்கையை ஒரு பெண் அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அந்த பாத்திரத்தின் மூலம் நமக்கு உணர்த்தி இருக்கிறார் இயக்குனர். 

ஜெயராம் காளிதாஸ், கலையரசன் போன்றவர்கள் துஷாராவின் காதலுக்காக ஏங்கிக் கிடப்பது போல காட்டி இருப்பது மட்டும் சற்றே மிகையாகத் தோன்றுகிறது.

ஆனால், இந்த பாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு துஷாரா நடித்திருக்கும் ஆற்றலும், அதை வெளிக்கொண்டு வந்திருக்கும் பா. ரஞ்சித்தின் இயக்கத் திறனும் வியக்க வைக்கின்றன.

ஜெயராம் காளிதாஸ் தன் பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து மிகச் சரியாக நடித்திருக்கிறார். அதே போல் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட மாக்கான் போல் தெரியும் கலையரசன் பின் பாதியில் கிட்டத்தட்ட படத்தின் கதாநாயகனாகவே தெரிவது சிறப்பு. 

தான் தண்ணி அடித்தால் உலகம் தாங்காது என்று எச்சரிக்கையுடன் மது அருந்துவதைத் தவிர்த்து வரும் அவர் ஒரு கட்டத்தில் காதலியுடன் ஏற்படும் மனத்தாங்கலில்  குடித்துவிட்டு செய்யும் அதகளம் அமர்க்களம்.

அதேபோல் ஜாதி ஆதிக்க வெறி ஊறிய மிகப் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த அவர் பிற்படுத்தப்பட்ட இனத்தவரான துஷாராவைக் காதலித்து அவரையே திருமணம் செய்வேன் என்று சம்மதம் வாங்க குடும்பத்தினரிடம் படும் பாடுகள் அப்பட்டமான வாழ்வின் சமூகப் பதிவுகள்.

உயிர் போகவிருக்கும் பாட்டியின் கடைசி ஆசைக்காக அத்தனை பாடுபட்டு கலையரசனின் அம்மா கீதா கைலாசம் தங்கள் உறவுக்குள் திருமணத்துக்கான கலையரசன் சம்மதத்தை வாங்கி முடித்தும், திருமண நேரத்தில் உயிர் போகும் நிலையில் இருக்கும் பாட்டி அவர் கட்ட வேண்டிய தாலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு என் வாழ்வில் நான் இழந்ததை என் பேரன் இழக்க விடமாட்டேன் என்று அவர் காதலைக் காப்பாற்றுவது அற்புதமான கட்டம்.

அதிலும் கலையரசனின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், இதுவரை சினிமா காணாத ஒரு ஆதிக்க அம்மாவின் அட்டகாச வார்ப்பு. என்ன நடிப்பு… அம்மம்மா..!

காதல் என்றால் ஒரு ஆண், ஒரு பெண் என்று எடுத்துக்கொண்டு இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையிலேயே காதலை இதுவரை சொல்லி வந்ததைத் தாண்டி ஒரு பால் ஈர்ப்புள்ள காதலையும், மூன்றாம் பாலினக் காதலையும் சொல்லி இருப்பது தமிழ் சினிமாவில் முன்னெடுப்பான முயற்சி என்று உறுதியாக சொல்ல முடியும்.

பெரும் மக்கள் சாதனமான சினிமா செய்யத் தவறிய… நிஜ நாடகங்கள் மட்டுமே செய்து வருகிற… சமூகப் பணியைத் தன் சினிமாவின் வாயிலாக சொல்ல முயன்றிருக்கும் பா. ரஞ்சித்தின் துணிவுக்கும், முயற்சிக்கும் வந்தனங்கள்.

விவாதங்களாக மூன்று மணி நேரம் நகரும் இந்தத் திரைக்கதையை எழுதுவதற்கும், இயக்குவதற்கும் மிகப்பெரிய தன்னம்பிக்கை வேண்டும். அதிலும் எங்கும் தொய்வு ஏற்படாமல் ரசிக்கும் விதமாகவும் அதை இயக்கி இருப்பது சிறப்பான இயக்கத் திறன்.

ரஞ்சித் இயக்கிய படங்களில் இதுவே இயக்கத்தில் முதன்மையான மற்றும் முதிர்வான படம் என்று உறுதியாகச் சொல்லலாம். 

“உன் புத்தியை காட்டிட்டியே..?” என்று துஷாராவைப் பார்த்து ஜெயராம் சொல்லும் ஒரு வசனத்திலேயே அவர் எதைச் சொல்கிறார், எது குறித்துச் சொல்கிறார் என்று நாம் ‘ இனம் ‘ கண்டு கொள்ளும் அளவுக்கு பா.ரஞ்சித் நம்மை அவரது படங்களின் மூலம் தயார்ப் படுத்தி விட்டார் என்பது உண்மை.

தவிர, ஓட்டலில் துஷாரா பீஃப் ஃப்ரை ஆர்டர் செய்வது, துஷாராவின் அன்பைப் பெற கலையரசன் அம்பேத்கரின் சரிதத்தை படிப்பது, எல்லோராலும் வெறுக்கப்படும் மந்த புத்திக்காரரான கலையரசன் சேலத்துக்காரராக இருப்பது – இதெல்லாம் நுட்பமான ரஞ்சித் பிராண்ட் குறியீடுகள்.

இதுவரை நாம் தெரிந்து வைத்திருக்க கூடிய ஆணவக் கொலைகளின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கும் காட்சியும், நாடகத்தில் தன்னைக் கொலை செய்யும் பெற்றோரிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் படி குலதெய்வத்தை துஷாரா வேண்ட, அந்தக் காதலின் காரணமாகவே கொல்லப்பட்டு தெய்வமான நிலையில், அந்தக் குல தெய்வமும் கையறு நிலையில் இருப்பதும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுப் பதிவுகள்.

டென்மாவின் இசை இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது என்றாலும் இதுவரை பா. ரஞ்சித் பயணித்து வந்த சந்தோஷ் நாராயணனின் இசை இருந்திருந்தால் இதைவிட மனதுக்கு நெருக்கமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

கிஷோர் குமாரின் ஒளிப்பதிவும், ஆர்.கே. செல்வாவின் படத்தொகுப்பும் கைகோர்த்து ஒரு இளைஞர் பட்டாளத்தின் வாழ்க்கையை நம் முன் கடத்தி இருக்கின்றது.

அனைத்துப் பாத்திரங்களை தாங்கி நின்ற அந்த இளைஞர் குழுவின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்பது மிகையல்ல. 

நட்சத்திரம் நகர்கிறது – பா.ரஞ்சித்தின் கொடியும் நீல வானில் நட்சத்திரம் நோக்கி உயரே நகர்கிறது..!

– வேணுஜி