நட்பைப் போற்றும் கதை. ஆனால் நாசூக்காகப் போற்றி இருக்கிறார்கள்.
ஷாரிக் ஹாசன், அரண், ஆஷிக் மூவரும் இணைபிரியாத நண்பர்கள். எந்த அளவுக்கு என்றால் ஷாரிக்கின் காதலி அம்மு அபிராமி, இனிமேல் அவர் நண்பர்களை சந்திக்கவே கூடாதென்று சத்தியம் வாங்க, அடுத்த நொடியே ஆஷிக்கிடமிருந்து போன் வர, ‘எஸ்’ ஆகிறார் ஷாரிக் – அந்த அளவுக்கு மலர்ந்த நட்பூ..!
நண்பர்களில் அரண் கொஞ்சம் படிப்பாளி பிளஸ் புத்திசாலி. அவர் டெரெரிஸ்ட் ட்ரேக்கர் என்ற கருவியைக் கண்டு பிடிக்கிறார். அதை வைத்து 500 மீட்டர் தூரத்திலிருந்து யார் போனில் பேசினாலும் அதை ட்ரேக் செய்ய முடியும்.
கல்லூரியில் அதை புராஜெக்டாக இயக்கிக் காட்ட முயலும்போது கருவி பழுதாக, மனமுடையும் அரண், நண்பர்களுடன் வெளியூர் செல்கிறார்.
அங்கே ஒரு இளம் பெண் கடத்தப் படுவதைக் கண்டு அவர்களைப் பின் தொடர்ந்து டெரெரிஸ்ட் ட்ரேக்கர் கருவியை பயன்படுத்தி கடத்தல் கூட்டத்தின் நடவடிக்கைகளை கண்டறிய முற்பட, என்ன ஆகிறதென்பது மீதிக் கதை.
ஷாரிக்குக்கு நல்ல உடல்வாகு. காதலுக்கு கொஞ்சமே வேலை இருக்க, ஆக்ஷனில் பின்னுகிறார். சண்டையிடும்போது உண்மையிலேயே அவர் கால்கள் அந்தரத்தில் பறக்கின்றன.
அறிவாளியாக வரும் அரணே படத்தின் இயக்குனராகவும், தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருப்பதால் தன் வேடத்தை நன்கு வடிவமைத்து அதனுள் வாழ்ந்து நடித்திருக்கிறார்.
அவர் தோற்றமே ஒரு படைப்பாளி என்பதைச் சொல்லிவிடுகிறது. கடைசியில் ஆக்ஷனிலும் அதிபுதிரியாக இருப்பதில் இன்னொரு பிராமிசிங் ஹீரோ தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறார் என்பதை உறுதிப் படுத்தலாம்.
காமெடிக்கு என்று ஆஷிக்கை நியமித்திருக்கிறார்கள். அவருக்கு வசனம் எழுதினார்களா அவரையே பேச விட்டார்களா என்று தெரியவில்லை. கொஞ்சம் காமெடியும் நிறைய கடியுமாக கடக்கிறார்.
இரண்டு ஹீரோயின்கள் என்றாலும் இருவருக்குமே கொஞ்சம்தான் வேலை இருக்கிறது. ஆரம்பத்தில் அம்மு அபிராமியும், பின்பாதியில் பவித்ரா லட்சுமியும் பங்கு பெறுகிறார்கள். இருவரின் தோற்றமும் அன்றலர்ந்த மலர்கள் போல் இருப்பதால் இன்னும் கொஞ்சம் அவர்கள் காட்சிகளை நீட்டித்திருக்கலாம்.
கடத்தல் ரவுடி அர்ஜுனன் ஆக வரும் சிவத்தின் கண்கள் அவரை வில்லனாக அடையாளம் காண வைக்கின்றன. ஆனால் அவர் நடிப்புக்கு இன்னும் தீனி போடுவது போல் காட்சிகள் இருந்திருக்கலாம். அவ்வளவு பெரிய ரவுடிக்கு உடன் இருக்கும் அல்லக்கைகள் முட்டாளாக இருப்பதை ரசிக்க முடியவில்லை.
இவர்களுடன் கௌதம் சுந்தரராஜன், துரை சுதாகர், அனுபமா குமார் முதலான அனுபவ நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவும், அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையும் பட்ஜெட்டுக்கு பழுது இல்லாமல் பயணித்திருக்கின்றன.
300, 400 கோடி தயாரிப்பில் படங்கள் உருவாகும் இந்தக் காலகட்டத்தில், இருப்பதை வைத்துக் கொண்டு அவர்களுடன் போட்டி இட களம் இறங்கி இருக்கும் அரணின் முயற்சி அதிசயிக்க வைக்கிறது.
ஆனால், அதற்கேற்ற தயாரிப்புகளுடன் களம் இறங்கி இருந்தால் அவரது எண்ணம் சாத்தியமாகி இருக்கும்.
இருந்தாலும் நூற்றுக்கணக்கில் படங்கள் வெளியாகாமல் தேங்கி கிடக்கும் இன்றைய சினிமாவில் ஒரு படத்தைத் தயாரித்து இயக்கி நடித்து வெளியிட்டும் இருக்கும் அவரது முயற்சிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம்.
இந்தப் படத்தின் அனுபவங்கள் அடுத்த படத்தில் அவரை இன்னும் உயரத்துக்குக் கொண்டு செல்லும்.
ஜிகிரி தோஸ்த் – மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்தான்..!